(2963)
கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே.
பதவுரை
|
அடு |
– |
பகைவரை அழிக்கின்ற |
|
புள் |
– |
கருடப்பறவையை |
|
கொடி ஆ உயர்த்த |
– |
த்வஜமாக எடுத்தவரும் |
|
வடிவு ஆர் |
– |
விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தையடையவருமான |
|
மாதவனார் |
– |
லக்ஷ்மீபதியானவர் |
|
தீய வினைகள் |
– |
கொடிய |
|
நொடி ஆகும் அளவை கண் |
– |
ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே |
|
கடிவார் |
– |
போக்கியருள்வார். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் பிராட்டியோடுகூடி அடியார்க்குக் காரியஞ் செய்தருள்வது தாமதமாக நடைபெறுமோ என்ன; இல்லை ஒரு நொடிப்பொழுதிலே நடைபெறுமென்கிறது இப்பாட்டு. இத்திருவாய்மொழியில் *வழிநின்றவல்வினைமான்வித்து * இருமை வினை கடிவார் * தீயவினைகள்* என்ற மூன்று இடங்களில் எம்பெருமான் நமது பாவங்களைத் தொலைத்தருள்வனென்பது சொல்லப்பட்டிருக்கின்றது; எங்ஙனேயென்னில்; ஆச்ரயித்தவர்கள் விஷயத்திலே இக்காரியங் செய்தருள்வது என்பது * வழிநின்ற வல்வினைமாள்வித்து* என்றவிடத்திற்கு விவக்ஷிதம்பிராட்டியின் புருஷகாரமடியாக அக்காரியஞ் செய்தருளவனென்பது *இருமை வினை; கடிவாரே* என்ற விடத்திற்கு விவக்ஷிதய்; அது செய்வது ஒரு நொடிப்பொழுதிலே என்பது இப்பாட்டிற்கு விவக்ஷிதம் என்று வாசிகாண்க.
இங்ஙனே மூன்று விஷயங்கள் விவக்ஷிதமானால், இம்மூன்றையுஞ் சேர்த்து ஒரு பாசுரமாகவே அமைத்துவிடலாகாதோ? என்று சிலர் சங்கிக்கக்கூடும்; அநுபவயாதவையன்றோ? ‘இப்படி அமைக்க வேணும்’ என்று ஒரு எண்ணத்தோடே ஆழ்வார் பாசுரமமைக்கின்றாரல்லரே; ஆதலால் இந்த சங்கைக்கு உதயமேயில்லை.
“கொடியா அடு புள்ளுயர்த்தவடிவார் மாதவனார் நொடியாருமளவைக்கண் தீய வினைகள் கடிவார்” என்று அந்வயிப்பது பின்னடிகளில் பெரிய திருடியின் ப்ரஸ்தாவம் வந்திருப்பது ‘பெரிய திருவடியை அடிமைகொள்ளுமாபோலே நித்ய ஸம்ஸாரிகளான நம்மையும் அடிமை கொள்வன்’ என்கிற கருத்தை காட்டுவதற்காகவென்று திருக்குருகைப்பிரான்பிள்ளான் திருவுள்ளம் பற்றுகிறார்.
பிராட்டியோடே கூட நின்று,பெரிய திருவடிக்குக் கொடுத்தருளாமாபோலே தந்தருளும்” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல், இக்கருத்துப் பொலியவே ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்திலே- “ய: கச்சிதேவ யதி கிஞ்சந ஹந்த ஜந்துர் பவ்யோ பஜேத பகவந்தம் அநந்ய சேதா, தம் ஸோயமீத்ருச இயாநிதிவாப்யஜாநந் ஹை வைந தேயஸமமபி உரரீகரோஷி’ என்று ஒரு ச்லோக மருளிச் செய்தார். அன்று வந்து பணிந்த ஒரு அடியானைக் கைக்கொள்ளுமிடத்து, நித்யஸூரிகளில் தலைவனான பெரிய திருவடியோடு மொக்கக் கைக்கொள்ளுகிறானென்பது இந்த ச்லோகத்தின் கருத்து.
மாதவனாரே என்றவிடத்திற்கு நம்பிள்ளையீடு காண்மின்;- ‘பிராட்டி அருகேயிருந்து போக்குவிக்கவாயிற்று போக்குவது; ஒருதலை ஜன்மம்; ஒருதலை மரணம்; நடுவே ஆதிவ்யாதிகள்; இவை செய்த குற்றங்களைப் பார்க்கக்கடவதோ? குற்றங் கண்டுவிடில் விபூதியாக விடவேண்டிவாராதோ? பொறுத்தருளீர் என்றால், அவளுக்காகப் பொருத்தோமென்று மித்தனை.
English Translation
The beautiful bridegroom Madava, in the bat of an eyelid, will purge us of our karmas; his banner bears the fierce Garuda!
