(2954)

(2954)

பரிவதி லீசனைப் பாடி

விரிவது மேவ லுறுவீர்

பிரிவகை யின்றிநன் னீர்தூய்

புரிவது வும்புகை பூவே.

 

பதவுரை

பரிவது இல்

துன்பமற்ற

சனை

ஸர்வேச்வரனை

பாடி

துதிசெய்து

விரிவது

ஸ்வரூபவவிகாஸத்தை

மேவல்  உறுவேல்

பெறவேணுமென்கிற உறுதியுடையவர்களே!

புரிவதுவும்

(அதன் பிறகு) ஸமர்ப்பிப்பதும்

பிரிவகை இன்றி

பிரயோஜனத்தைக் கொண்டு விலகிப்போதலின்றியே

நல்நீர்

நல்ல தீர்த்தத்தையே

தூய்

ஸமர்ப்பித்து

புகை பூவே

ஏதேனுமொரு தூபமும் ஏதேனுமொரு புஷ்பமுமேயாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானை ஆராதிக்கு முபகரணங்களின் ஸௌகர்யம் இப்பாசுரத்தில் அருளிச்செய்யப்படுகிறது. எம்பெருமானைப்பற்றி சொல்லுகின்ற சாஸ்த்ரங்கள் அவனை ‘அகிலஹேய ப்ரத்யநீகன்’ என்கின்றன; ஹேயகுணங்கள் எல்லாவற்றிற்கும் அவன் எதிர்த்தட்டானவன் என்றபடி. அவனிடத்திலுள்ளவையெல்லாம் கல்யாண குணங்களேயன்றி ஒரு வகையான ஹேயகுணமும் இல்லாமையால் அங்ஙனஞ் சொல்லுகிறது. அந்த ஹேய ப்ரதிபடத்வமே இங்குப் ‘பரிவதில்’ என்ற விக்ஷேணத்தினால் கூறப்படுகின்றது. துக்கமில்லாதவன் என்றது, மற்றுமுள்ள ஹேயகுணங்களொன்று மில்லாமையைச் சொன்னபடிக்கு உபலக்ஷணம்.

எம்பெருமானுக்கு துக்கமில்லையென்று சொல்லிவிடமுடியுமோ? விபவர்வதாரங்களிலே ஸீதாவியோகம் முதலான நிமித்தங்களினால் வாசாமகோசரமாகத் துயருற்றமை இதிஹாஸ புராணங்களில் ஸித்தமாயிருக்கின்றதே; துக்கமில்லாதவனென்று எங்ஙனஞ் சொல்லலாம்? என்று சிலர் சங்ககிக்கக்கூடும்; அவதாரங்களில் உண்மையான தக்கமில்லை; அது அபிநய மாத்திரமே யென்பது ச்ரூதப்ரகாசிகை முதலியவற்றில் நிர்ணயிக்கப்ட்டிருத்தலால் இந்த சங்கைக்கு இடமில்லை. ஸீ தா வியோகதி நிமித்தங்களினாலுண்டாகின்ற துக்கம் அபிநயரூபமென்று சொல்லிவிட்டாலும்; எம்பெருமானை ‘தயாளு’ என்றிசையும்போது “தயையாவது – பிறர் படும் துக்கத்தைக் கண்டு தானம் துக்கப்படுகை” என்று ஆசிரியகளால் நிர்வஹிக்கப்படுவதால் இந்த துக்கத்தையும் அபிநயரூபமென்று அங்கீகரிக்கவொண்ணாதே; இதற்கு எங்ஙனம் ஸமாதானமென்று சிலர் சங்கிப்பதுண்டு; ‘இது ஹேயப்ர தய்நீகத்வத்திற்கு விரோதியன்று என்பதே சுருக்கமான ஸமாதானம். துக்க ஸாமாந்யமும் ஹேயமன்று; ஸ்வார்த்தமாகப்படும் துக்கமே ஹேயமாகும்; பிறர்படும் இழவைக்கண்டு தரித்திருக்க முடியாமல் பரவசமாகப் படுகின்ற துக்கம் ஹேயமன்று. மிகவும் உபாதேவமாகவேயாகும். இதனைச் சிறிது விவரிப்போம்; பிறப்படுகின்ற துக்கத்தைக்கண்டு துக்கப்படுவதென்பது குணமா? தோஷமா? என்று விமர்சிக்கவேணும். ஸ்ரீராமாயண, அயோத்யா காண்டத்தில் ஸ்ரீராமபிரானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டு வரும் பிரகரணத்தில் “வ்யஸநேஷû மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித” (பிரஜைகள் துக்கப்படுங் காலங்களில் ஸ்ரீராமன் மிகவும் துக்கப்படுகிறான்) என்று சொல்லப்பட்டிருப்பது ஒருபுறம் நிற்க. உலகத்தில் ஒருவன் துக்கப்படும்போது அந்த துக்கத்தைக் கண்டுகொண்டிராநின்ற மற்றொருவன் தானும் துக்கப்படாமல் வாளாகிடந்தால் அவனைக் கல் நெஞ்சனென்றும் ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனென்றும் வசை கூறுவதும், பிறர் துக்கிப்பதைக் கண்டு பரவசமாக ஒருவன் துக்கிப்பானாகில் அவனை ஈரநெஞ்சனென்றும் இரக்க முள்ளவனென்னும் பரம தயாளுவென்றும் சொல்லிப் புகழ்வதும் இன்றாக ஒருவராலும் அபலாபஞ் செய்ய வொண்ணாதவை. ஆகவே பரது:க்கது:க்கித்வமென்பது சிறந்த குணங்களில் முதன்மையாகக் கணக்கிடக்கூடியதேயன்றி துர்க்குணமாக ஒருவராலும் கூறவொண்ணாதது. இப்படிப்பட்டவொரு சிறந்தகுணம் எம்பெருமானுக்கு இல்லையென்று எங்ஙனே சொல்லாகும்?

ஆனால் இங்கு ஒன்று சொல்லலாம்; பிறர்படும் துயரத்தைப் பரிஹரிக்கக் வடிய சக்தி நமக்கில்லாமையாலே நாம் அத்துயரத்தைக்கண்டு துயரப்படலாம்; பரிபூர்ண சக்தியுக்தனான எம்பெருமான் எலியெலும்பரான நம்மைப்போலன்றியே பிறருடைய துயரத்தைக்கண்டு தானும் துயரப்படக் காரணமேயில்லை யென்னலாம்; இங்குக் குறிக்கொள்ளவேண்டியதாவது- பிறர்படும் துயரத்தைக்கண்டு துயருறுகை என்கிற ஒரு தன்மையும், பிறர்படுந் துயரத்தை நீக்கவல்ல சக்தியுடைமை யென்கறி வொரு தன்மையும் பரஸ்பர விருத்தமென்று நினைக்கலாகாது; உண்மையில் இவை ஒன்றோடென்று விரோதமுடையனவல்ல; தன் குழந்தைக்கு ஒரு துன்பம் நேர்ந்து விட்டால் அதனை உடனே பரிஹரிக்கவல்ல சக்தி மாதாவுக்கு இருக்கச்செய்தேயும் அப்படியே அத் துன்பத்தை அவள் பரிஹரித்துவிடச் செய்தேயும் ‘குழந்தைக்குத் துன்பம் நேராமல் காக்கவேண்டியது நமது கடைமையாயிருந்தும் ஏமாந்துபோனோமே!, அந்தோ! அநியாயமாய்க் குழந்தையைத் துடிக்கவிட்டோமே!’ என்று பலவாறாகக் கதறி வரும்தும்படியைக் காணாதாருண்டோ?

துச்சாஸநன் கையிலே த்ரௌபதி பரிபவப்பட்டுக் கூவினபோது கண்ணபிரான் ஒருவாறு அவளது துயரைத் தீர்த்திருக்கச் செய்தேயும் ‘ஐயோ! அவள் கூவின போது நான் நேரில் சென்றிருந்து உதவாதொழிந்தேனே!, ஐயோ! அவளுக்குப் பரிபவம் நேர்ந்து அவள் கதறினபின்பு நான் அதைப் போக்கினேனேயன்றி, முதல் தன்னிலே பரிபவமே உண்டாகாதபடி ஜாகரூகனாயிருக்கை தவிர்ந்தேனே! அவளுக்கு நான் பெரிய கடனாளியாய்விட்டேனே! என் பிறப்பு என்னாயிற்று!’ என்று தன் காவற்சோர்வை நினைத்துத் திருவுள்ளம் வேவுண்டு பலவாறு கதறின படியுண்டே.

மடுவின்கரையிலே முதலைதன்னலடர்ப்புண்ட ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடரை எம்பெருமான் தீர்த்தருளினானேலும் அவன்றான் பட்ட பரிதாபம் பேச்சுக்கு நிலமன்றே. “ஸ்ரக்பூஷாம்பரமயதாயதம் ததாநோ திங்மாமித்யநுகஜகர்ஜமாஜகந்த என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்திலே பட்டர் அருளிச் செய்தமை கண்டீரே. கெட்டேன்! கெட்டேன்! என்று நொந்துகொண்டே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்தானென்றால் இது என்கொல்!

ஆதலால், இப்பாட்டில் பரிவதிலீசன் என்றது ஹேயமான துக்கமில்லாதவன் என்றபடியாமத்தனையென்று தலைக்கட்டிற்றாயிற்று.

ஈசனை = நமக்கென்று ஸ்வாமியை என்றபடி, உலகத்தில் ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும்போது நெடுநாளாக ஒரு நல்லபொருளைச் சேகரித்து விருந்திட்டால் இதை இவன் ஸ்வீகரித்து என்ன குறை சொல்லப் போகிறானோ என்று நெஞ்சு தளும்பியிருக்கவேண்டிவரும். புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் விருந்தில் ஏதேனுங் குறையிருந்தாலும் அது தகப்பனுடையதாய் நெஞ்சாறல்படவேண்டாதிருக்குமன்றோ; அப்படிப்பட்ட ஸம்பந்தம் எம்பெருமானுக்கும் நமக்குமுண்டென்று  எட்டினபடி.

பாடி = பெரியவர்களின் ஸந்நிதானத்திலே வாயைத் திறவாமல் மௌனமாயிருக்க ப்ராப்தமாயினும், ஆனந்தம் உள்ளடங்கியிருக்கமாட்டாமல் வாய்விட்டுப் பாட நேர்ந்துவிடுமென்க, பரமபதத்திலே !“ஏதத் ஸாமாகாயத் நாஸ்தே* என்று சொல்லப்பட்ட பாடுதல் இங்கே விவக்ஷிதம். (பாடி விரிவது மேவலுறுவீர்.) இந்த ஸம்ஸார நிலத்திலிருக்கும்வரையில் சேற்றிலழுந்தின மாணிக்கம் ஒளி சுருங்கியிருக்குமாபோலே ஆத்மாவுக்கும் ஞானாநந்தாதிகள் விரிவின்றிச் சுருங்கியிருக்க நேருமே; அந்தச் சுருங்குதல் தொலைந்து ஸ்வரூப விகாஸத்தைப் பெறவேண்டி யிருப்பவர்களே! என்று முமுக்ஷுக்களை விளித்தபடி.

அப்படிப்பட்ட கனத்த பேறு பெறுவதற்குச் செய்ய வேண்டுவதென்னென்ன க்ஷுத்ர பலன்களைப் பெற்று அவனை விட்டுப்பிரிந்து போனதல்லாமல் ஏதேனும் தீர்த்தத்தை ஸமர்ப்பித்து ஏதேனுமொரு பூவையிட்டு ஏதோனுமொரு புகையைக் காட்டினாலும் போதுமென்கிறார் பின்னடிகளில்

இப்பாசுரத்தை பட்டர் உபந்யஸிக்கும்போது “புரிவதும் புகை பூவே” என்ற சுப்தஸ்வாரஸ்யத்தைத் திருவுள்ளம்பற்றி ‘இவ்விடத்தில் அகில் புகையென்றாவது கருமுகைப்பூ என்றாவது சிறப்பித்துச் சொல்லாமையாலே ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் எம்பெருமானுக்கு அமையும்;  செது கையிட்டுப் புகைக்கலாம். கண்டகாலிப்பூவுஞ் சூட்டலாம்’ (தச்சன் செதுக்குகிற சராய் முதலியவற்றையிட்டு என்றபடி) என்று உபந்யஸித்தாராம். அதை நஞ்சீயர்; கேட்டு “ந கண்டகாரிகாபுஷ்பம் தேவாய விநி வேத யேத்” (கண்டகாலிப்பூவே எம்பெருமானுகுச் சாத்தலாகாது) என்று சாஸ்த்ரம் மறுத்திருக்க, இப்படி அருளிச்செய்யலாமோ? என்று கேட்டார்; அதற்கு பட்டர் அருளிச்செய்த ரஸோக்தி:- “சாஸ்த்ரம் மறுத்தது மெய்தான்; கண்டகாலிப்பூ எம்பெருமானுக்கு ஆகாதென்று மறுத்தபடியன்று; அடியார்கள் அப்பூவைப் பறித்தால் கையில் முள் பாயுமே என்று பக்தர்கள் பக்கலில் தயையினால் சாஸ்த்ரம் நிஷேதித்ததேயன்றி எம்பெருமானுக்கு ஆகாத பூ எதுவுமில்லை” என்லுராம். இதர ஸம்பிரதாயத்திலுள்ள வியாக்யாதாக்கள் சிலர் இந்த ஸம்வாதத்தைக்கண்டு ரஸியாமல் திரஸ்கரித்துரைத்திருப்பதில் விவேகிகட்குக் கண்செல்லாது. அருளிச்செயல்தொடை யழகை நோக்கி ரஸப்பொருளுரைத்தவிதில் குதர்க்கவாதஞ் செய்கை மனக்குற்ற மாந்தர்க்குரியதே.

பிரிவகையின்றி = இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; ஐச்வர்யம் ஸந்தானம் கைவல்யம் முதலான அற்பபலன்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு அவனைவிட்டுப் பிரிந்து போய்விடாமல் என்பது ஒருவகை. (கீழ்த் திருவாய்மொழியிற்போலே) நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகன்று போய்விடப் பாராமல் என்பது மற்றொரு வகை.

நன்னீர் = நல்லநீர் என்றது சுத்த ஜலம் என்றபடியாய், ‘சத்த கங்கை’ என்றால் யமுநை ஸரஸ்வதி முதலிய இதர நதிகள் கலசாத வெறும் கங்கை என்று பொருளாவதுபோலே ஏலம் லவங்கம் முதலிய இதரவஸ்துக்கள் சேராத வெறும் தீர்த்தம் என்றவாறாம்; இதனால் ஆராதனைக் கெளிமைதோற்றம்.

“புரிவதுமாவது பூவே” என்று பாடாந்தர மிருப்பதாகப் பன்னீராயிரப்படியுரைகாரர் கூறியுள்ளார்.

 

English Translation

Seekers of infinite joy, do not give up! Sing of the faultless Lord, offer flowers, incense and pure water.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top