(2938)
என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென் றொருதவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே?
பதவுரை
|
என்பு |
– |
எலும்பிலே |
|
இழை |
– |
நூலிழையை |
|
கோப்பதுபோல் |
– |
நுழைத்தாற்போல |
|
பனி வாடை |
– |
குளிச்சிபொருந்திய வாடைக்காற்று |
|
ஈர்க்கின்ற |
– |
வருத்துகின்றது; |
|
என் |
– |
(இப்படி வருத்தப்படுகின்ற) என்னுடைய |
|
பிழையே |
– |
குற்றங்களையே |
|
நினைந்தருளி |
– |
எண்ணி |
|
ஒருவாய் |
– |
ஒரு வார்த்தை |
|
சொல் |
– |
சொல்லவேணும்; |
|
என்பு |
– |
எலும்பை |
|
இழைக்கும் |
– |
செதுக்குகிற |
|
அருளாத |
– |
கிருபைபண்ணாமலிருக்கிற |
|
திரு மாலார்க்கு |
– |
லக்ஷ்மீநாதனுக்கு (லக்ஷ்மீநாதனிடம் சென்று) |
|
திருவடியின் |
– |
ஸ்வாமியான தேவரீருடைய |
|
தகவிவினுக்கு |
– |
கிருபைக்கு (பாங்காகும்படி) |
|
என் பிழைத்தாள் என்று |
– |
(பராங்குசநாயகி) என்ன பிழை செய்து விட்டாள்? என்று |
|
இள கிளியே |
– |
கிளிப்பிள்ளாய்! |
|
யான் வளர்த்த நீ அலையே |
– |
நான் வளர்த்த நீ அல்லையோ? (வேறுப்பட்டாயோ) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (என் பிழை கோப்பதுபோல.) இத்திருவாய்மொழிக்கு இப்பாட்டு உயிர் நிலையாயிருக்கும். பிழைகளைப் பொறுத்தருளுந் தன்மையாகிற அபராத ஸஹத்வமென்னுங் குணம் பற்றாசாகத் தூதுவிடுகிறாளென்று அவதாரிகையிற் கூறினது இப்பாட்டைக் கணிசித்தேயாம். பிழைகளை அளவின்றிச் செய்துவைதபுது ‘அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி யொருநாள்’ என்றால் இது எப்படி ஸாத்யமாகும்? என்று எம்பெருமானுக்குக் கருத்தாகக் கூடுமென்று நினைத்த பராங்குசநாயகி, எங்கள் குற்றத்தை மாத்திரமேயோ பார்ப்பது. குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர்தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்கவேண்டவோவென்று சொல்” என்று தன்கிளியை இரக்கின்றாள்.
என்பு இழைக்கோப்பதுபோலப் பனிவாடை ஈர்க்கின்ற = எலும்பிலே துளைத்து நூலைக் கோத்தால் எவ்வளவு ஹிம்ஸையாயிருக்குமோ, அவ்வளவு ஹிம்ஸையைச் செய்கின்றது இந்தக் குளிர்காற்று என்றபடி. எலும்பின் ஸ்தானத்திலே தனது சரீரமும், நூலின் ஸ்தானத்திலே காற்றும் ஆகும். இதனால், இப்போது தனது சரீரம் எலும்பும் நரம்புமேயாம்படி மிகவும் மெலிந்து போயிற்றென்பதும் ஸூசிப்பிக்கப்பட்டதாகும். ‘ஈர்க்கின்றது’ என்னும் வினைமுற்று ஈறுகெட்டு ‘ஈர்க்கின்ற’ என்றிருக்கின்றது இனி, வினை முற்றாகக் கொண்டு பணிவாடையினாலே ஹிம்ஸிக்கப்படுகின்ற என்னுடைய’ என்றுரைத்தலுமொன்று.
என் பிழையே நினைத்தருளி= எனது பிழைகளை மாத்திரம் நினைந்தாரேயல்லது, பிழை பொறுக்கவல்ல தமது க்ஷமாகுணத்தை நினைத்தாரில்லையே, அதனை மறந்தாப்போலே எனது பிழைகளையும் மறந்தாலாகாதோ? “நினைந்தருளி” என்றது உபசார வழக்கு: வெறுத்துரைக்கச் செய்தேயும் கௌரவச்சொல் தவிரலாகாதே.
அருளாத திருமாலார்க்கு = பிழையுடையார் பக்கலிலே அருள் செய்யாவிடின் இவர் எங்ஙனம் திருமாலாக இருக்கமுடியும்? ஸஹதர்மசரீம் சௌரேஸ் ஸம்மந்த்ரித ஜகத்திதாம். அநுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாதநிக்ரஹாம் என்கிறபடியே அநுக்ரஹமே வடிவெடுத்தவளென்றும் நிக்ரஹமென்பதைக் கனவிலுங் கண்டறியாதவளென்றும் புகழ் பெற்றவளான பிராட்டிக்கு இவர் மணவாளராகில் அவளது உபதேசத்தின்படி நடக்கவேண்டியவரன்றோ இவர்; “நகச்சிந் நரபராத்யதி.” (பிழைசெய்யாதவனே உலகில் இல்லை) என்று நிரூபிக்கின்ற பிராட்டியோடே இவர் ஸம்பந்தம் பெற்றுவைத்து இங்ஙனே பிழைகண்டு உபேக்ஷித்தல் தகுதியோ இப்படி அவர் பிழைகண்டு ஒதுங்குகின்றாரென்பதைப் பிராட்டியறிந்தால் அவள் தானும் பிறகு இவர் முகத்திலே விழிப்பளோ? என்கிற இவ்வளவு கருத்தும் அருளாத திருமாலார்க்கு என்ற சொற்செறிவிலே அடங்கும். பெரிய பிராட்டியார் பக்கலிலே அவர் லீலாரஸம் அநுபவித்து அவளுடைய போகமயக்குக்களிலே மூழ்கிக்கிடக்கையாலன்றோ இத்திசை நோக்கவும் மாட்டாது அருளாதிருக்கின்றார் என்பதாகவும் உட்கருத்துரைக்கலாம். இது பிள்ளான் நிர்வாஹம்; முந்தினது நஞ்சீயர் நிர்வாஹம்.
இளங்கிளியே! ‘இப்படி அருளாதிருக்கலாமா?’ என்று அவரிடத்துச் சென்று கேள்; அதற்கு அவர், “குற்றங்களை அளவில்லாதபடி செய்து வைத்திருந்தால் நாம் எப்படி அருள் செய்யக்கூடும்? தன் குற்றங்களைப் பாராமல் அருள் அருள் என்பதேயோ?” என்று இடித்துச் சொல்லக்கூடும்; அங்ஙனஞ் சொன்னால் திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் என்று மடிபிடித்துக் கேள்- என்று கிளிக்குச் சொல்லித்தருகின்றாள். பராங்குநாயகி. திருவடி யென்பது ஸ்வாமி யென்றபடி; ‘அடிகள்’ என்னுமாபோலே. திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் = தேவரீருடைய கருணைக்குப் போதும்படி என்ன பிழை செய்தாள்? என்றவாறு. உண்மையில்: தான் பிழை செய்தது உண்டாகிலும் எம்பெருமானுடைய கருணைத்திறத்தைக் காணுமிடத்து ‘அதன் வயிறு நிறையுமாறு நாம் பிழைசெய்யவில்லையே!, நாம் செய்த பிழை அக்கருணையின் வயிற்றுக்கு ஒரு கவளத்திற்கும் போதாதே’ என்று நினைக்க வேண்டும்படியாக இருத்தலால் இங்ஙனஞ் செயால்லுகின்றாளென்க. இங்கே ஈடு முப்பத்தாறாயிரம்:- ‘என் குற்றத்தைப் பார்த்து தமிக்க நினைத்தாராகில்,… ஸ்வாமிகளான தம் பொறை வயிறுநிறைய எங்களால் குற்றஞ் செய்யப்போமோ? என்னுங்கோள்.” என்பதாம். எத்தனை பிழைகள் செய்திருந்தாலும் ஒரு நொடிப்போது, பிழை என்று வாய்திறக்கவும் வழியுண்டோ? என்பது கருத்து. இவ்விடத்திற்குப் பொருத்தமாக வேதாந்ததேசிகள் தயாசதகத்திலருளிச்செய்த “மயிதிஷ்டதி துஷ்க்ருதாம் ப்ரதாநே மிததோஷாந் இதராந் விசிந்வதீ தவ்ம், அபராதசதை: அபூர்ணகுக்ஷி: கமலாகாந்ததயே! கதம் பவித்ரீ.” என்ற ச்லோகரத்நம் இங்கு அநுஸந்திக்கவுரியது.
எம்பெருமானுடைய க்ஷமா குணத்தையும் பார்த்து தம்முடைய பிழையையும் பார்த்தால் இதுவொரு பிழையாகவே தோன்றமாட்டாது. ஸ்ரீராமபிரான் வாலியை வதைத்து ஸுக்ரீவனுக்கு முடிசூட்டி அவனைக் கிஷ்கிந்தைக்குப் போகவிட்டு வர்ஷாகாலம் முடிந்தவாறே இலங்கைக்குப் புறப்படப் படை திரட்டிக்கொண்டு வருமாறு நியமித்துவிட்டுத் தானும் மால்யவானிலே காலங்கழிய நிற்க, நாளடைவிலே வர்ஷாகாலமும் முடிந்தும் ஸுக்ரீவன் போகபரவசனாய்க் கிடந்த வாராதேயிருக்க, பெருமாள் சீறிச்சிவந்து இளையபெருமாளையனுப்பி நாணொலியெழுப்பி அச்சுறுத்த அப்போது தாரைவந்து கேட்கிறாள் “கிம் கோபமூலம் மநுஜேந்த்ர புத்ர!” என்கிறாள். இங்ஙனே சீறிவருவதற்குக் காரணமென்? என்று கேட்கிற அவளுக்குக் காரணம் தெரியாதையில்லையிறே; ஆயினும் கேட்கிற தன் கருத்து என்ன? உங்களுடைய க்ஷமாகுணத்தை நம்பியன்றோ நாங்கள் பராக்காயிருந்தது, அப்படியிருந்தும் சீறலாமோ? என்பதன்றோ அங்குக் கேள்வியின் கருத்து. அதுபோலவே இங்கு மென்க.
“திருவடியின் தகவினுக்கு என்பிழைத்தாள்” = இந்தச் சொல்தொடைக்கு மற்றொரு வகையாகவுங் கருத்து அமையும். தேவரீருடைய கருணைக்கு இடையூறாக என்ன பிழை செய்தாள்? நான் ஏதாவது ஸ்வப்ரவ்தித்தி பண்ணியிருந்தேனாகில் தன் தலையாலே தன்னைக் காத்துக் கொள்ளப்பார்த்தாள். அப்படியே பார்த்துக் கொள்ளட்டும், நமக்கென்ன?’ என்று தேவரீர் உதாஸீநராய் இருக்கலாம்; அப்படி நான் ஒன்றுங் செய்யவில்லையே! “தேவரீருடைய கருணை தாராளமாகப் பெருகலாம்படி நானிருக்கிறேனேயொழிய அக்கருணை தடைபடும்படி ஒரு அதிப்ரவ்ருத்தியுஞ் செய்திலேனே’ என்கிறாளென்க.
“தேவரீர் க்ருபைக்குத் தண்ணீர்த் துரும்பாக ஏதேனும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்றுண்டோ? என்று நம்பிள்ளை அருளிச் செய்யும்படி.” என்று ஈட்ட =ஸூக்தியின் சுவை இங்கு அறியத்தக்கது.
என்று ஒருவாய் சொல் = இந்த வொரு வார்த்தையை மாத்திரம் நீ அங்குச்சென்று சொல்லவேணுமென்று கிளையை வேண்டுகின்றாள்.
என்பிழைக்கும் இளங்கிளியே = என்பு இழைக்கும், என் பிழைக்கும் என இரு வகையாகவும் பிரிப்பர். என்பு இழைக்கும் – (எனது) எலும்பைச் செதுக்குகின்ற (கிளியே!) என்றபடி: வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் மழலைச் சொற்களாலும் எம்பெருமானை அநவரதம் நினைப்பூட்டாநின்றுகொண்டு என்னை வருத்துகின்ற கிளியே! என்றவாறு. என் பிழைக்கும்? = (என் நிலைமையை அங்குச் சென்று அறிவித்தால்) என் தப்பு உண்டாகும்? என்றபடி.
யான் வளர்த்த நீயலையே = இதற்கு இரண்டு வகையாகக் கருத்துக் கூறுவர்; நீ என்னால் வளர்க்கப்பட்டவனாயிருந்து இவ்வளவு உபகாரமுஞ் செய்யலாகாதோ? என்பது முதற் கருத்து. என்னால் வளர்க்கப்படுகிறவர்கள் எல்லாரும் எனக்குத் தீங்கிழைப்பதென்றே வழக்கமாய்விட்டது; எம்பெருமான் இப்போது எனக்குத் தீங்கிழைப்பதும் என்னுடைய ஸம்பந்தமே காரணமாகவன்றோ; அதுபோலே என்னுடைய ஸம்பந்தமே காரணமாக நீயும் என் சொற்கேளாதே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருப்பது வியப்பன்று; என்னால் வளர்க்கப்பட்டவனன்றோ நீ; இது என் தலைவிதிகாண் என்பதாக மற்றொரு கருத்து.
English Translation
o My found parrot, you hurt me with your talk. Are you not my pet? The cool dew-breeze blows like a needle threading through my bones. Go and ask my un-relenting Lord, who sees my faults alone. “What wrong has she done, for not receiving your grace?”
