(2907)
உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே.
பதவுரை
|
உளன் எனில் |
– |
ஈச்வனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப்போலே) சொன்னாலும் |
|
உளன் அலன் எனில் |
– |
ஈச்வரனில்லையென்று (நாஸ்திகர்களின்படியே) சொன்னாலும் |
|
உளன் |
– |
ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்; |
|
அவன் உருவம் அவன் அருவம் |
– |
அப்பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்; |
|
இரு தகைமையோடு |
– |
இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு) |
|
உளன் என இலன் என் |
– |
உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப்படுகிற |
|
இவை குணம் உடைமையின் |
– |
அஸ்திந்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாகவுடையனாகுந் தன்மையினாலே |
|
இவ்வுருவுகள் இவ்வருவுகள் |
– |
உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயுமிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும் |
|
ஒழிவு இலன் பரந்து உளன் |
– |
எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டால் ஸர்வ சூந்யவாதி நிரஸிக்கப்படுகிறான். ப்ரஹ்மஸூத்ரம் இரண்டாவது அத்யாயம் இரண்டாவது பாதத்தில் *ஸர்வதாநுபபத்தேச்ச* என்கிற ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் பாஷ்யக்காரர் சூந்யவாதத்தைக் கண்டித்திருப்பது பெரும்பாலும் இப்பாசுரத்தின் நடையை உட்கொண்டேயாம்.
உளளெனில உளன் = ‘ஈச்வரன் இல்லை’ என்கிற நிரீச்வரவாதம் இப்பாட்டில் நிரஸிக்கப்படுகிறதாக விளங்குகின்றதேயன்றி ஸர்வசூன்யவாதம் நிரஸிக்கப்படுவதாக விளங்கவில்லையே என்று சிலர் சங்கிப்பர்கள். உண்மையில் ஸர்வசூந்யவாதியே இப்பாட்டில் நிராகரிக்கப்படுகிறான். ஸர்வமும் சூந்யமென்கிற வாதத்தில் ஈச்வரனுடைய சூந்யத்வமும் அடங்கினதாதலால் அதை நிரஸித்து ‘ஈச்வரனுளன்’ என்று ஸ்தாபிக்கப்பட்டுவிட்டால் ஈச்வரன் தானும் விபூதியுக்தனாகவே தேறுவானாதலால் அம்முகத்தாலே ஸகலமுமுள்ளதாக ஸ்தாபிக்கப்பட்டுவிடுகிறதென்பது ஆழ்வார் திருவுள்ளமாகக் காண்கிறது. ஒரு மனிதன் உளனாக ஏற்படும்போது செவி வாய் கண் மூக்குடல் முதலான உறுப்புகளோடு கூடியே ஏற்படுவதுபோல, எம்பெருமானுளனென்று ஏற்படுமிடத்தும் சேதநங்களாகிற சரீரத்தோடு கூடியே ஏற்படவேண்டுதலால் எம்பெருமானுடைய உண்மையை ஸாதிக்குமளவே ஸர்வ சூந்யவாத கண்டனத்திற்குப் போதுமாயிற்று.
இல்லை என்று சொல்லுகிற வாதியை நோக்கி “உளனெனிலுளன்” என்று ஆழ்வாரருளிச் செய்வது எப்படிக்கூடும்? உளன் என்கிற பேச்சு அந்த வாதியின் வாயில் இல்லாதிருக்க உளனெனில் என்கைக்கு என்ன ப்ரஸக்தி? என்று சங்கை பிறக்கலாம். கேண்மின்; ‘ஈச்வரனுளன்’ என்று சொன்னால் எப்படி ஈச்வரனுடைய உண்மையைத் தேறுமோ அப்படியே ‘ஈச்வரன் உளனலன்’ என்றாலும் ஈச்வரனுடைய உண்மையே தேறும் என்று காட்டுவதற்கே ஆழ்வார் இங்ஙனமருளிச்செய்தவாறு. வைதிகர்களான நாங்கள் உளன் என்கிற சொல்லாலே ஈச்வரனுடைய உண்மையை ஸாதிக்கிறோம்; அந்த உண்மையையே இலன் என்கிற சொல்லாலே நீ ஸாதித்தாயாகிறாய் என்று நிரூபிக்கிறபடி.
(உளனெனில் அவனுருவம் இவ்வுருவுகள்; உளனலனெனில் அவனருவமிவ்வருவுகள்.) ஈச்வரனுக்கு உளனாயிருக்குந் தன்மையாவது ஸ்தூலரூபத்தோடுகூடிய சேதநாசேத்நங்களைச் சரீரமாகவுடையனாயிருக்குந் தன்மையேயாம். இனி, இலனாயிருக்குந் தன்மையாவது ஸூக்ஷ்மரூபத்தோடு கூடிய சேதநாசேதநங்களைச் சரீரமாகவுடையனா யிருக்குந்தன்மையேயாம். உபநிஷத்தில் *அஸத் வா இத மக்ர ஆஸீத்* என்று ஓதப்பட்டுள்ள இடங்களில் ஸூக்ஷ்மசிதசித் சரீரகத்வமே அஸதத்வம் என்று நிர்ணயிக்கப்படுவதாகத் தேறுதலால் அதனை அடியொற்றி ஆழ்வார் உள்ளனவெனில் அவனருவமிவ்வருவுகள் என்றருளிச்செய்தாரென்க. ‘ஈச்வரனுண்டு என்றால் ஸ்தூலரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விவக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்மருப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விசக்ஷிதம்; ஆக இவ்விரண்டு வகைதவிர அடியோடு சூந்யத்வமென்பது எவ்வழியாலும் ஏற்படாதென்றதாயிற்று.
பின்னடிகளின் கருத்தாவது உளன் என்ற ப்ரதிஜ்ஞையாலே உண்மை ஏற்படுகிறது; இலன் என்ற ப்ரதிஜ்ஞையாலே இன்மை ஏற்படுகிறது. உண்மையாவது அஸ்தித்வம்; இன்மையாவது நாஸ்தித்வம்: இவ்விரண்டு தருமங்களும் ஒரு பொருளை ஆச்ரயித்தேயிருக்க வேண்டுதலால் நாங்கள் சொல்லுகிற அஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும், நீ சொல்லுகிற நாஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும் ஒரு வஸ்து தேறும்? என்று ஆக்ஷேபிக்க முடியாது; ஏதோவொரு வஸ்துவைச் சுட்டித்தானே நாஸ்தி யென்னவேண்டும்; அப்படி நாஸ்தி என்று நீ சொல்லுகிற வஸ்து எது? என்று கேட்டால் அப்போது அதனை நீ நிரூபித்தேயாக வேண்டுமே; ஆனது பற்றியே நாஸ்தித்வத்திற்கு ஆசரயமாகவும் வஸ்துவினுண்மை ஸித்தித்தே தீருமென்கிறோம். அப்படி ஸித்திக்குமாதலால் ஸர்வதேச ஸர்வகால வ்யாபியான எம்பெருமான் ஸவிபூதிகனாய் ஸித்தித்தானாயிற்று என்றதாம்.
English Translation
Would you say he is, then he is, and all this is him. Say he is not, then too he is, as the formless spirit in all. With the twin qualities of being and non-being, he pervades all things and places forever.
