(2567)

(2567)

தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,

நிலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே

நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்

தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.

 

பதவுரை

அசுரர் குழாம்

அசுரர் கூட்டத்துக்கு

தொலைபெய்த

அழிவைப் பண்ணின

நேமி

சக்கராயுதத்தை யுடைய

எந்தாய்

எம்பெருமானே!

யான்

நான்

தலைப்பெய்து

(யான் உன்னைச்) சேர்ந்து

நிலைப்பு எய்த

நிலைப்பெற்றிருக்கும்படியாக

ஆக்கைக்கு

இவ்வுடம்பைப்பெறுதற்கு

நோற்ற

தவஞ்செய்த

இ மாயமும்

இந்த ஆச்சர்யத்தையும்

உன் திரு அடி

உனது திருவடித் தாமரை மலர்களை

குடும்

(எனது) தலைமேற் கொள்ளும்படியான

தகைமையினால்

அடிமைக்குணமாகிய தகுதியினால்

மாயம் செவ்வே நிலைப்பு எய்திலாத நிலைமையும்

இந்த ஆச்சரியம் ஒருபடியாக நிலைநின்று முடிவு பெறமாட்டாத நிலைமையையும்

காண்தோறு

நோக்குபோதெல்லாம்

தொல்லை ஊழி சுருங்கலது

பழமையான (அநாதியான காலம் சுருங்குகிறதில்லை)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-நாயகனைப் பிரிந்த நாயகி பிரிவுக்கு ஆற்றாது உரைக்கும் பாசுரம் இது. நான் உன்னை யணுகி உனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு வழிபடும்படியான இவ்வுடம்பைப் பெறுதற்கு நல்ல தவஞ் செய்து வைத்திருந்தும் அப்பேறு முட்ட மூடியக்கை கூடாமல் இடையில் நீங்குதலை ஆலோசிக்குமிடத்து ஆற்றாமையாற் காலம் மிக நெடுகித் தோன்றுகிறது என்பது இப்பாட்டின் தேர்ந்த கருத்து. ‘சுருங்கலது’ என்பதற்கு சுருங்குகிறதில்லை என்று எதிர்மறையாகப் பொருள் கொள்வதன்றியே ‘சுருங்குதலையுடையது’ என உடன்பாடாகப் பொருள் கொள்வதாயின், இப்படியே என் காலங் கழிந்து விடுகிறதேயென்று இரங்கியபடியாம். பூர்வஜந்மங்களில் மிக்க பெருந்தவஞ் செய்திருந்தாலன்றி, இப்படிப்பட்ட அரிய பெரிய நாயகனைப் பெறுதல் இயலாதாதலால் ‘நோற்ற இம்மாயம்’ என்றது “உள் திருவடிகளில் அடிமையாலல்லது செல்லாதபடியான சரீரத்தைப் பெற்றபடியையும், அப்படியிருக்கச செய்தே அவ்வடிமையை இழந்திருக்கிற இருப்பையும் அநுஸாந்திக்கக் காலம் போருகிறதில்லையென்கிறார்’ என்பது அப்பிள்ளையுரை.

ஸர்வேச்வரனைச் சரணமடைந்து அவன் திருவடிகளையே வணங்கி அத்திருவடிகளே பேற்றுக்கு உபாயமென்று அத்யவஸாயங் கொள்வதற் குறுப்பான இவ்விலக்ஷண சரீரத்தைப் பெற்றிருப்பதையும் அப்படி பெற்றிருந்தும் பூர்ணாநுபவம் கிடைத்திடாமலிருப்பதையும் நோக்குமிடத்துக் காலதாமதம் பொறுக்க முடியவில்லை யென்று ஆழ்வார் கலங்கியுரைத்தாயிற்று.

‘மாயம் செவ்வே நிலைப்பெய்திலாத நிலைமை’ என்பதற்கு- இவ்வுடம்பு நிலையில்லாத தாயிருக்குந் தன்மையென்றும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடியிருக்கையில் உண்டான அடிமைக்குணம் ரஜோகுண தமோகுண ஸம்பந்தத்தால் நிலைப்படாது சலிக்கக்கூடியதன்மை என்றும் உரைப்பர்.

‘திருவடி’ என்றதற்கு ‘திருவடித் தாமரை மலர்’ எனப் பொருளுரைத்தது ‘சூடும்’ என்றதற்கேற்ப. “கோலமாமென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்ற திருவாய் மொழி காண்க. ஆயிரம் ஜந்மஙக்ளிற் செய்த நோன்பின் பயனாகவே ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜன்மம் கிடைப்பதாக ப்ராப்திப்ரதிபந்தகங்களைப் பாற்றுதல் உனக்கொரு  பெருங்கார்யமோ? என்பதற்காக ‘அசுரர்குழாந் தொலைப்பெய்தநேமி யெந்தாய்!’ என விளிக்கப்பட்டது.

தலைப்பெய்து + யான்,  தலைப்பெய்தியான்; “யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல். தலைப்பெய்தலென்பது ஒரு முழுச்சொல்.

 

English Translation

O Lord bearing a discus that wipes out Asuras! By the grace of worshipping your feet with my head, my heart is set in you. Considering by the wonder of my receiving such as conductive body and the wonder of my receiving the fruits of my bodily endeavours, the long aeons of waiting gone by seem trivial.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top