(2496)
காரிகை யார்நிறை காப்பவர் யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும் காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந் துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா விளைந்தென் சின்மொழிக்கே.
பதவுரை
| காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று |
– |
‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற் பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி |
| மாரி |
– |
மேகங்கள் |
| கார் கொண்டு |
– |
கருமை நிறங்கொண்டு |
| இன்னே |
– |
இவ்வாறு |
| கை ஏறி |
– |
ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று |
| அறையிடும் காலத்தும் |
– |
அறைகூவுகிற காலத்திலும் |
| சாரிகை புள்ளர் |
– |
விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர் |
| அம் தண்ணம் துழாய் |
– |
அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை |
| கூய் இறை அருளார் |
– |
(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை; |
|
(ஆகவே) |
||
| என் சில் மொழிக்கு |
– |
சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு |
| சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது |
– |
(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது. |
| வாழியரோ |
– |
இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- செவிலித்தாய் பழிக்கு இரங்கல் என்பது துறை. இன்ன காலத்திலே வருகிறேனென்று சொல்லிப் பிரிந்துபோன நாயகன் வாக்குத் தவறினதற்கு ஆற்றாத தலைவிக்கு நிகழும் பழிக்குச் செவிலித்தாய் இரங்குகின்றாளென்க.
அழகிய மணவாளச் சீயருரையில் ‘பாங்கி பழிக்கிரங்கின பாசுரம்’ என்று இது தோழி பேச்சாகக் கொள்ளப்பட்டிருந்தாலும், நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை முதலானாருடைய வியாக்கியானங்களில் தாய் பாசுரமாகக் கொள்ளப்பட்டிருத்தலாலும், என் சின்மொழிக்கு’ என்று தனது உடைமையாதல் தோன்றக் கூறியுள்ள ஔசித்யத்தினாலும் இப்பாட்டைத் தாய்வார்த்தை யென்றே கொள்ளுதல் பொருந்தும். பெரும்பாலும் தாய் வார்த்தை ‘என் மகள்’ என்ற வாய்ப்பாடு தோன்றவும் தோழிவார்த்தை அவ்வாய்ப்பாடு தோன்றாமலும் வரும். இது இவ்விருவர் வார்த்தைக்கும் எளிதில் வேறு பாடறியத்தக்க நுட்பங்களுள் ஒன்றாம்.
மேகங்கள் கர்ஜிப்பதை நோக்குங்கால், ‘எங்கள் முன்னே ஸ்த்ரீகள் ஆரேனும் தங்கள் அடக்கத்தைக் காத்துக்கொள்ள வல்லாருண்டோ? ஆருமில்லை’ என்று வீரவாதம் செய்வதொக்குமென்கிறாள் முன்னடிகளில். கார்காலத்தில் நாண் மட மச்சம் முதலிய பெண்டிர்க்குரிய குணங்களை எவரும் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் பதறுதல் ஸம்பாவிதமாதலால் மேகமுழக்கத்தை இங்ஙனே உத்ப்ரேக்ஷித்தல் பொருந்துமென்க. நிறையாவது- மனத்தில் அடக்கத்தக்கவற்றை வாய்விடாமல் அடக்குதல்; நாணம் முதலி பெண்மைக் குண நிறைவுமாம். யார்? என்ற வினா- எவரும் இலர் என எதிர்மறைப்பொருள் குறிக்கும். கார்கொண்டு என்பதற்கு- கோபங்கொண்டு என்றும் பொருள் கொள்ளலாம். ‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப்பொருள்” என்பது தொல்காப்பியம். கார்- கருமை என்னும் பண்பின் விகாரம்.
“கார் மாரி கொண்டு கையேறி” என மாற்றி, மேகங்கள் மழையைக் கொண்டு அணிந்து ஏறி என்று முரைக்கலாம். கையேறுதல்- படையணி வகுத்தாற்போல வரிசைப்பட்டு நிற்றல். அறையிடுதல் – அறை கூவுதல். பலாத்காரமாகச் சண்டைக்கு அழைத்தல். சண்டையில் தான் வெற்றிபெற்றதாகக் கோஷித்தலுதமாம். மேகத்தின் கர்ஜனையையே அறைகூவலாகக் கற்பித்தது.
காற்றுக்கு ஏற்றபடி மிகவும் விரைந்து வருவதான மேகத்தின் வருகைக்கு ஏற்பத் தலைமகன் நடந்துவர வல்லனோவெனின், மிக விரைந்த நடையையுடை கருடனை வரஹனமாகவுடையராதலால் இவர்க்கு எவ்வளவு தூரத்திலிருந்து வரவேண்டுமென்றாலும் வர முடியாமையில்லையென்பது போன்ற ‘சாரிகைப்புள்ளார், என்றது. சாரிகை- விரைந்த நடையும் வட்டமிட்ட நடையுமாம். துழாய் அருளார் = இவள் ஆனந்திக்குமாறு கல்வி தந்திடாராயினும் இவள் ஆறியிருந்து வாழ்தற் பொருட்டுத் தமது ஸம்பந்தம்பெற்ற திருத்துழாய்தன்னையும் தருகிறாரில்லையேயென்றவாறு. உயிர் தரு மூலிகைபோலப் போனவுயிரையும் மீட்கவல்லது திருத்துழாய் என்பது தோன்ற அதனைத் தண்ணந்துழாய்- என விசேஷித்துக் கூறினது. கூயருளார்- திருத்துழாய் தாராவிடினும் அன்போடு அழைப்பது தானும் அரிதாயிருந்த தென்கை.
என்சின்மொழிக்குச் சேரி கை யேறும் பழியாய் விளைந்தது = எம்பெருமான் திருத்துழாய் தாராவிடில் இவட்கு வரும் பழியாவது என்னெனில்; இந்நிலையிலும் வந்திலனென்னு இவள் மேல் விழுந்து ஆசைப்படுகிறாளென்றும் அவனிடத்து ஈடுபட்ட இவளுக்கு இவ்வளவும் வேணுமென்றும், மிக்க இளமையிலே இவள் இங்ஙன மாயினாளென்றும், இப்படியும் ஒரு துடிப்பு உண்டோ என்றும் இவை முதலாகப் பல படியாலும் தத்தமக்குத் தோன்றினவாறெல்லாம் பேசுவன.
சின்மொழி = சில மொழிகளையுடையவள்; (பண்புத் தொகையன்மொழி.) நாலு வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்லத் திறமை போராமல் குதலைச் சொற்களையுடையளாய் இளம் பருவத்தளானவள் என்றவாறு. செயல் முழுதும் அற்றுச் சில சொல் மாத்திரமே மிச்சமாகவுள்ளவள் என்று முரைப்ப.
பகவதநுபவத்திற்கு உரிய காலத்தை நோக்கி ஈடுபட்ட ஆழ்வார்க்கு அப்பகவான் விரைந்து அருள் செய்யாது விளம்பிக்க,அதனால் அவர் படும்பாட்டைக் கண்டு அறிவுடையார் கூறுதல் இதற்கு ஸ்வாபதேசம். (காரிகையார் நிறை காப்பவர் யாரென்று) ஸ்திரீபோலப் பரதந்திரரான இவரது ஆற்றியிருக்கும் நிலையை அழியாது காத்திடுவார் உண்டோவென்று (கார்கொண்டு இன்னே மாரி கையேறி அறையிடுங்காலத்தும்) எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும் குண மழையையும் நினைப்பூட்டிக் கொண்டு காலம் நேர்ந்து விரைவை யுண்டாக்கவும். (சாரிகைப் புள்ளர் அந்தண்ணந்துழாய் இறை கூயருளார்) அழகிய சிறந்த வாஹனத்தையுடைய (அல்லது) தவறாத பிரமாணமுடைய எம்பெருமான் ஆனைக்கு அருள் செய்தாற்போலே விரைய வந்து கம்பீரமான தனது திருமிடற்றோசையால் இவரை யழைத்து அருளை இவர்க்குச் சிறிதும் செய்தருளுகின்றிலன். (என் சின்மொழிக்கு) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சொல்லழகுடையவராய் எங்கள் விருப்பத்திற்கு உரியவரான இவர்க்கு. (சேரிகையேறும் பழியாய் விளைந்தது) (தமது அன்பு) உலகத்திலுள்ள ஸாத்விக ஜநங்களெல்லாம் இரங்கிக் கையெடுத்துக் கூப்பிடும்படி பழிப்பாய்ப் பரிணமித்தது என்கை. எம்பெருமான் ரக்ஷகனாயிருக்கையில் எத்தனை வ்யஸநம் வந்தாலும் பொறுத்திராமல் தானே தன் காரியம் தலைக்கட்டிக் கொள்வதாக விரைதல் வ்யஸம் பொறுத்திராமல் தானே தன்காரியம் தலைக்கட்டிக் கொள்வதாக விரைதல் குற்றத்திற்கிடமாம் என்பது தோன்றும். இவ்விடத்து நம்பிள்ளையீடு:- ‘இப்போது இவர் பழியென்கிறது பகவத் ப்ராவண்யத்தையிறே. அத்தைப் பழி யென்பானென்னென்னில், – அத்தலையாலே வரக்கண்டிருக்குமத்தனை யொழிய இத்தலையாலே பெற ப்ரவர்த்திக்குமது பழியாயிருக்கு மிறே. ஆனபின்பு பழியென்னத் தட்டில்லையிறே” என்று.
English Translation
See how the dark clouds gather and roar throwing a challenge, “Ladies! Who among you can keep you grce now?”. Atleast now, should not the circling bird-rider call us and give a bit of his Tulasi garland? Alas, this has led to my laconic daughter becoming the target of the town’s abuse, Long live the world!
