(2495)
கடல்கொண் டெழுந்தது வானம்அவ் வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ லோபுயற் காலங்கொலோ
கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய் யாநிற்கும் காரிகையே.
பதவுரை
| கடல்கொண்ட |
– |
கடலளவினதான |
| கண்நீர் அருவி |
– |
கண்ணீர் வெள்ளத்தை |
| செய்யா நிற்கும் |
– |
செரிந்து நிற்கிற |
| காரிகையே |
– |
அழகிய நங்காய்! |
| வானம் |
– |
ஆகாயமானது |
| கடல்கொண்டு எழுந்தது |
– |
கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது; |
| கடல் |
– |
அக்கடல்தான் |
| அன்றி |
– |
(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து |
| அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால் |
– |
ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால் |
| இது |
– |
இந்த நிலை, உண்டாயிற்று; |
| கண்ணன் மண்ணும் விண்ணும் |
– |
எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் |
| கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ |
– |
பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி) |
| புயல் காலம் கொல் ஓ |
– |
மழைக்காலந்தானோ? (அறியேன்.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டின் துறைவகையில் பூருவர்களுள் அபிப்ராய பேதமுண்டு; கீழ் ஏழாம்பாட்டைப் போல இதனையும் காலமயக்குத் துறை யென்னலாமென்பது நம்பிள்ளை பெரிய வாச்சாள் பின்னைகளின் திருவுள்ளம். கார்காலங் கண்டழிந்த தலைவியின் ஆற்றாமைகண்டு தோழி இரங்கல் என்பது வரதிகேஸரி அழகிய மணவாளச்சீயரது கொள்கை. அதாவது- கார் காலத்திலே மீண்டு வருவேனென்று காலங்குறித்துப் பிரிந்துசென்ற நாயகன் – அக்காலம் வந்தும் தான் வாராததால் நாயகியானவள் காலத்தை நோக்கி ஆற்றாதுவருந்த, தோழி அது கண்டு இரங்கிக் கூறியது என்பதாம்.
“கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய் அக்காலமும் வந்து இவன் வாராதொழிய, அத்தாலே ஆற்றாமை மீ தூர்ந்து நோவுபடுகிற பிராட்டியைக் கண்ட தோழியானவள் அவன் வருமளவும் இவளை ஜீவிப்பிக்கைக்காக காலத்தை மயக்கி ஆச்வஸிப்பிக்கிறாளாயிருக்கிறது” என்பது நம்பிள்ளை யீடு. அழகிய மணவாளச் சீயருரையில் இது கால மயக்கமன்று’ என்று மறுத்துக் கூறப்பட்டிருப்பினும் அது ஸ்வதந்தரப்படி யென்று மறுக்கத்தக்கது. காலமயக்கத் துறையென்றே கொள்வது பொருந்தும். இதில் ‘புயற்காலங்கெள்ள வேணுமென்பது சீயர் கருத்து; கீழே காலமயக்காக வந்த ஏழாம் பாட்டிலும் “திருமால்கோலஞ் சுமந்து பிரித்தார் கொடுமை குழறு தண் பூங்காலங்கொலோ வறியேன்” என்றிருக்கின்றது; இங்கும் அங்ஙனேயிருப்பது அநுசிதமன்று.
நாயகியோடு கூடியிருந்த நாயகன் ஒரு காரியப்பாடாகத் தேசாந்தரஞ் செல்ல வேண்டி மாதே! நான் இப்போது புறப்பட்டுப்போய்க் கார்காலத்திலே திரும்பி வருகின்றேன்’ என்று சொல்லி காலங்குறித்துப் பிரிந்து சென்று அக்கார்காலம் வந்தவளவிலும் தான் வாராதிருக்க ‘அந்தோ! நாயகன் குறிப்பிட்ட காலம் வந்து விட்டதே! இவ்வளவிலும் அவன் வந்திலனே!’ என்று கார்கால வரவையும் காதலன் வாராமையையும் நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழியானவள் ‘நங்காய்! நீ ஏன் வீணே வருந்துகின்றாய்? மெய்யே கார்காலம் வந்தாலன்றோ காதலன் வந்திடுவான்; அவன் சொல்லிப்போன கார்காலம் வரவில்லை; பின்னை இது என்னென்று கேட்கிறாயோ, சொல்லுவேன் கேள்; ஆகாய (மேக) மானது கடலைத் தரையளவாகப் பருகி ஜலஜந்துகளைத் துடிக்கவிட்டுப் போயிற்று; அதனைக் கண்ட கடலானது ‘பெரியதொரு தத்துவமாகிய நம்மை மதியாதே நம் பிரஜைகளையும் நோவுபட விட்டு நம் உடைமையை இப்படியோ கொள்ளைகொண்டுபோவது ஆகாசம்!’ என்று சீற்றங்கொண்டு அவ்வானத்தோடே போர் செய்யத் தொடங்கியிருக்கின்றது! ஆகவே கடலும் வானமும் தம்மிலே கலந்து போய் செய்யுங்காலமிதுவன்றி நாயகன் சொல்லிப்போன வர்ஷாகாலம் வந்திலது; என்று தலைவியை ஒருவாறு ஆற்ற வேண்டிய தோழி காலத்தை மயக்கி கூறி உடனே இங்ஙனம் நாம் பொய் சொல்லிவிட்டாலும் தலைமகளுக்கு உண்மை தெரியாமற் போமோ? எப்படியாவது நம்மை ஆற்றுதற்காகக் கற்பனை வகையில் முழுப்பொய் கூறுகின்றாள் என்று நினைத்துக்கொள்வாள் என்றெண்ணி அப்படி அவள் நினைத்துக் கொள்ளாமைக்காகவே தானும் ஐயப்படுவது போல் பின்னடிகள் கூறுகின்றாள். எல்லாப்பொருள்களையும் முடிக்கவந்தானா? தெரிகிறதில்லையீ! என்கிறாள்.
‘இது கார்காலமன்று’ என்று நிஸ்ஸந்தேஹமாகச் சொன்னால் தானே தலைவிக்கும் ஆறுதல் உண்டாகும்; முதலில் காலத்தை மயக்கிச் சொல்லி, உடனே ‘அக் கார்காலந் தானோ இது! என்றும் சொல்லி வைத்தால் தலைவிக்கு வருத்தமேயன்றோ மிகும்; ஆறுதல் உண்டாகாதே யெனின்; ‘நமது தோழி இரண்டு வகையாகவுஞ் சொல்லுகிறாள்; அவள் பொய் சொல்லுகிறவளாகில் ‘இது கார்காலமன்று; என்று துணிந்து சொல்லிவிடலாம்; அங்ஙனே சொல்லாமல் ஸந்தேஹமாகச் சொல்லியிருப்பதால் அவளும் நிச்சயிக்க முடியாதபடி யிருக்கின்றதுபோலும்; இதை நாமே ஆராய்ந்து பார்த்து நிச்சயிப்போம்’ என்று தலைவி நினைத்து ‘இது கடலுக்கும் வானத்துக்கும் முண்டான ஸர்ப்பத்தையா? புயற்காலமா?’ என்று ஆராயத் தொடங்குவாள்; இந்த ஆராய்ச்சியில் சிறிது பொழுது ஆறியிருந்திடுவள், அதற்குள் நாயகனும் வந்திடுவான் என்பது தோழியின் கருத்தாகலாம்.
காரிகை – அழகு; அதனையுடையவளுக்கு ஆகுபெயர்.
எம்பெருமான் தன்னோடு ஸம்பந்த முடையாரை ஒருநாளும் கைவிடான்; உரிய காலத்திலே கைக்கொள்வன்; இது காலமன்று; அவன் திருவுள்ளத்திற்கொண்டிருக்குங்காலம் ப்ராப்தமாமளவும் ஆறியிருக்க வேணுமென்று ஆழ்வாரை அன்பர் ஆற்றுதல் இதற்கு உள்ளுறை பொருள்.
முதலடியில், அன்றி- உடன்பட்டுத் தெரிநிலை வினையெச்சம்; கோபங்கொண்டு என்று பொருள். அன்றுதல் – கோபித்தலாதலை “அன்றிய வரணனாயிரக் தோளுந்துணிய” என்னுமிடத்துங் காண்க
English Translation
O Beautiful Girl! The clouds rose from the ocean laden with water. The ocean pursued the clouds and retrieved its water, causing floods like the deluge, as when krishna swallowed the Earth and sky. Can this be any time for another deluge? Can this be the time for the monsoon rains? Alas, these are your tears, welling like the ocean!
