(2492)
கயலோ நுமகண்கள்? என்று களிறுவினவி நிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன் புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே.
பதவுரை
| களிறு வினவி |
– |
யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி |
| கயலோ நும கண்கள் என்று நிற்றீர்; |
– |
‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்; |
| அயலோர் அறியிலும் |
– |
அயலார் அறிந்தாலும் |
| ஈது என்ன வார்த்தை |
– |
இது என்ன பொருந்தாத வார்த்தை; |
| கடல் கவர்ந்த |
– |
கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் |
| புயலோடு உலாம் |
– |
மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான |
| கொண்டல் |
– |
காளமேகம் போன்ற |
| வண்ணன் |
– |
(குளிர்ந்த) திருநிறத்தையுடையனனான எம்பெருமானது |
| புனம் வேங்கடத்து |
– |
(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே |
| கொல்லை காக்கின்ற நாளும் பல பல |
– |
(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் |
| எம்மோடும் பயலோ இலீர் |
– |
எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- புனத்திடைக் களிறு வினவவந்து கண்ணழகைக் கொண்டாடின நாயகனைக் குறித்துத் தோழி கருத்தறிந்து உரைத்த பாசுரமிது. இங்குப் பரம போக்யமான பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் சில அறியாத்தக்கன; -“இயற்கையிலே கலந்து பிரிந்த தலைமகன் இரண்டாங் கூட்டத்துக்காகப் புனத்திலே வந்து கிட்டக்கடவதாகக் குறிவரவிட்டுப் போய்க் கால திக்ரமம் பிறந்து பின்பு அங்கே சென்று கிட்டிவன் இவர்களைக் கண்டு கலங்கி அஸங்கதபாஷணம் பண்ண, அவர்களும் அக்தைக்கொண்டு, இவர் வருவதாகப் போனபடிக்கும் வந்தபடிக்கும் இப்போது ஆற்றாமை தோற்றப் பேசுகிற பேச்சுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோமென்று சிரித்துக் கொண்டாடுகிறார்கள். இவன்தான் வீரனாகையாலே என்றும் ஆனை வேட்டைக்குப் போம் பழக்கத்தாலே ஆனை வேட்டையை வினவிக்கொண்டு செல்லக் கடவதாக நினைக்கிறான். பிடியையிழந்ததொரு களிறு தன் ஆற்றாமையாலே அமணானைப்பட்டுத் திரியுமாபோலே இவர்களையிழந்து தான் ஆற்றாமையோடே திரிகிறபடியை அந்யாபதேசத்தாலே ஆவிஷ்சரிக்கிறான்.” என்று.
காந்தர்வ விவாஹ முறையில் நாயகியோடு புணர்ந்து, தெய்வம் பிரிக்கப் பிரிந்தநாயகன் முன் ஸங்கேதத்தின்படி நாயகியுந் தோழியும் தினைப் புனங்காக்கிற வியாஜத்தாலே தன்வரவை எதிர் பார்த்திருக்குங் கொல்லைப் புறத்தே காலதாமதமாகக் சென்று நின்று, ‘நாம் தாமதித்து வந்தோமே, இவர்களது மனம் சினங்கொண்டு வேறுபட்டிருக்கக் கூடுங்கொல்!, இப்போது இவர்களுடைய அன்பு எவ்வாறிருக்கின்றதென்பதை நாம் தெரிந்து கொள்ளாமல் பழைய அன்பு வார்த்தைகளைச் சொல்லுதல் தகாது, ஆகவே அந்யபரமான ஸாதாரண வார்த்தைகளைப் பிரஸ்தாவித்து அவற்றுக்கு இவர்கள் கூறும் மறுமொழிகளால் இவர்களது அன்பு நிலைமையை அறிந்துகொண்டு பின்னர் நாம் அன்பு வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கலாம்’ என்றெண்ணிக் களிறுவினாவத் தொடங்கினான்; அதாவது என்னென்னில்; திருக்கோவையாரில் இது வேழம் வினாதலென்று வரையப்பட்டுள்ளது. “வேழம் வினாதலென்பது- குறை கூறத் துணியாநின்ற தலைமகன் என குறையின்னதென்று இவளுக்கு வெளிப்படக் கூறுவேனாயின் இவள் மறுக்கவுங்கூடுமென உட்கொண்டு என்குறை இன்னதென்று இவள் தானே உணருமளவும் கரந்த மொழியாற் சில சொல்லிப் பின் குறையுறுவதே காரியமென, வேட்டை கருதிச் சென்றானாக, அவ்விருவருழைச் சென்றுநின்று தன்காதல் தோன்ற ‘இல்விடத்தொரு மதயானை வரக்கண்டீரோ?’ என வேழம் வினாவாகின்றல்” என்பது திருக்கோவையாருரை வாக்கியம்.
நாயகியையும் தோழியையுங்கண்ட நாயகன் யானைவேட்டை நடத்துமியல்பினனான மஹாவீருனாகையாலே ஏதோ வேட்டைக்காகத் தான் காட்டிடத்தே வந்ததாகவும், அங்கு ஒரு யானை தன் பிடியைத் துறந்து ஓடிச் சென்றதாகவும், அதனைத் தேடிக்கொண்டுதான் வருவதாகவும் பாவனைகாட்டி ‘ இங்ஙனே ஒரு மதயானையைக் கண்டதுண்டோ?’ என்று அப்புனங்காப்பவரை நோக்கிக் கேட்பதே களிறுவினாதல் என்றும் வேழம்வினாதல் என்றுங் கூறப்படும். (இங்ஙனே கலைமான் வினாதல் வழியினாதல் பதிவினாதல் பெயர்வினாதல் முதலிய வினாக்களுமுண்டு. காதலியோடு பேசக்கருதும் காதலன் ‘தீர்த்தம் கிடைக்குமோ? , சுண்ணாம்பு சிறிது அகப்படுமோ?’ என்று சில அபேக்ஷைகளை வியாஜமாகக் கொண்டு புகுந்து வார்த்தை சொல்லவும் கருத்தறிந்து கொள்ளவும் இடம்பெறுதல் உலக வியற்கையிலுங் காணத்தக்கது).
நாயகன்தான் பேசுவதற்கு வியாஜமாகச் சிலவற்றை வினாவத் தொடங்கினாலும் நாயகியின் கண்ணழகில் ஏற்கனவே ஈடுபட்டவனாகையாலும், இப்போதும் அக்கண்ணழகு பரவஸமாக்குகிறபடியாலும் அதனைக் கொணடாடுகிற முகத்தால் தன் ஆற்றாமையைத் தெரிவிக்கும் வார்த்தைகளும் இவன் வாயில் ஊடே வெளிவந்துவிட்டன; ‘இவை கண்களோ? கயல்களோ?’ என்றாற்போலச் சில வார்த்தைகளையுஞ் சொல்லிவிட்டான்; இவற்றால் அவனது கருத்தைக் குறிப்பாலறிந்து தோழி அவனது ஆசையை மறுப்பதாகப் பிறர் நினைக்கும்படியாகப் பேசித் தலைவியின் ஆற்றாமையையும் குறிப்பாலுணர்த்துகிறான் இப்பாட்டில். அன்புமிகுதி தோற்றும் விதமாகவும் அன்பை மறுத்துரைக்கும் விதமாகவும் இப்பாசுரத்திற் சொற்போக்கு அமைந்திருக்கு மழகு மறியித்தக்கது.
(கயலோநும் கண்களென்று களிறு வினவி நிற்றீர்) இதை இரண்டுபடியாக யோஜிக்க வேறும்; ‘களிறுவினவிக் காயலோநும கண்களென்று நிற்றீர்’ = நீர் யானையைப் பற்றிக்., கேட்க வந்தவராயின் அந்தக் கேள்வியோடு நில்லாமல் எமது கண்ணழகைக் பற்றியும் பேசுகின்றீரே, (அயலோ ரறியிலுமீதென்னவார்த்தை) அஸங்கதமான இவ்வார்த்தை அக்கம்பக்கத்தி லுள்ளாருடைய செவியில் பட்டால் என்ன நினைப்பார்கள்? ‘இவர்களுக்கு ஏதோ ஸம்பந்தமுண்டு போலும்’ என்று நினைத்துக் குடியைக் கெடுத்திடுவார்களே!; இப்படிப்பட்ட அஸங்கதமான பேச்சை நிறுத்தும் என்பதாக மேலெழுந்த அபிப்பிராயம். இனி; அன்பு தோற்றச் சொல்லுமதிப்பிராயத்திற்கிணங்க இரண்டாவது யோஜனைகாண்மின்; (கலோநும கண்களென்று களிறுவினவி நிற்றீர், அயலோரறியிலும் ஈதென்ன வார்த்தை!) ‘நுமகண்கள் கயலோ?’ னஎறு எங்கள் கண்ணழகிலீடுபட்டுப் பேசினீர்; உமது உகப்புக்குப் பரம ஸந்தோஷமடைந்தோம்; அதற்கு மேலே யானையைப்பற்றியும் கேட்டீரே, அது ஏதுக்கு? நம் கண்ணழகில் ஈடுபட்டே வந்திருக்கிறீர் என்று நாங்கள் எண்ணி மகிழவொண்ணாமலும், ‘வேறு வேட்டைக்காரியகமாக வந்திருக்கிறார் போலும்’ என்றெண்ணி வருந்தும்படியாகவும் களிறு வினவி நிற்பது தகுமோ? நமது அன்பை அயலோர் அறியிலும் அறிக; அதனால் நம் குடி என்ன கெட்டுப்போகும்? (ஈதென்ன வார்த்தை) வந்த காரியத்தைவிட்டுக் களிறுவினவுகள் ஒரு வார்த்தையோ? என்பது உட்கருத்து. இங்கு ‘அயலோர்’ என்றதனால் ‘நாங்கள் உமக்கு உரியோம், நீங்கள் எமக்கு உரியீர்’ என்கிற கருத்து வெளியிடப்பட்டதாகும். நாங்கள் உமக்கு அயலார் அல்லோம், அயலார் வேறு உளர் என்றவாறு.
(புனவேங்கடத்து எம்மொடும் பயலோவிலீர்) பயல் என்பது (பாதியும் சிற்றாளும் பள்ளமும் பயலெனல் என்று பிங்கலந்தை நிகண்டினால் பயலென்பதற்குப் பாகமென்னும் பொருளுண்மையறிக. பயிலோ இலீர் என்றும் சிலர் ஓதுவர். அப்பாடத்துக்கு பழக்க முடையீரல்லீர் என்று பொருள். பயில்-முதனிலைத் தொழிற்பெயர், புதியரான நீர் பழகினார்போல இங்கு நிற்பது தகுதியன்று என்றவாறு.) இப்பாடலைப் பொருத்தவரை பாகமாய் எங்களோடு உமக்குக் கூட்டுப்பயிரில்லையே என்றபடி;
ஆதலால் புதியராய் வந்த நீர் கூட்டுப்பயிர் பார்ப்பவர்போல இங்கு எம்முடன் நெடும் பொழுது வீண் பேச்சுப் பேசி நிற்பதுதகாது. (கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே) நாங்கள் புனங்காப்பது நேற்று இன்று அல்ல; பல வருஷகாலாமகத் தினந்தோறும் புனங்காத்து வருகிறோம்; இப்புதுமையை ஒரு நாளுங் கண்டதில்லை; நெடுநாள் கூட்டுப்பழக்கமுடையவர்போல நீர் இங்குப் பேசி நிற்பது தகாது, கடக்கச் செல்லும்- என்பதற்காக மெலெழுந்த அபிப்பிராயம். உமது வருகையை எதிர்பார்த்து நாங்கள் கொல்லை காத்தலென்று ஒரு வியாஜம்வைத்து கெடு நாளாக காத்திருக்க நீர் இன்றளவும் வந்திலீரே; எம்மோடு கூட்டுறவு கொள்வதில் ஆசை வைத்திலீரே என்பதாக உட்கருத்துக் காண்ட. (பயலோ இலீர்) நெடுநாள் பழகினாலும் கண்டறியாதனபோல என்றும் புதியன வாயுள்ளன உமது அழகுடைமை முதலியன என்றவாறுமாம். தோழியானவள் இங்ஙனங்கூறித் தலைமகளின் காதலைத் தலைமகனுக்குக் குறிப்பித்தபடி.
English Translation
Are these soul-piercing spears, or beautiful fish? Or are these unfired darts of Madana’s bow? These eyes are indeed divine fish searching for the water-hued radiant lord in his Vaikunta abode!
