(2485)

(2485)

காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்

பாண்குன்ற நாடர் பயில்கின்றன,இதெல்லா மறிந்தோம்

மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்

சேண்குன்றம் சென்றுபொருள்படைப் பான்கற்ற திண்ணனவே.

 

பதவுரை

குன்றம் நாடர்

மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்

இ நாள்

இன்றை தினத்தில்

பயில்கின்றன

பலவாறாக நடத்துகின்றவையான

காண்கின்றனகளும்

காணப்படுகிற செய்கைகளும்

கேட்கின்றனகளும்

கேட்கப்படுகின்ற சொற்களும்

காணில்

ஆராய்ந்து பார்க்குமிடத்து

பாண்

வெளியுபசார மாத்திரமாம்;

இது எல்லாம்

இந்தமிக்க உபசாரமெல்லாம்

மாண் குன்றம் ஏந்தி

மாட்சிமை தங்கிய கோவர்த்ததனகிரியை நினைப்பின்றியெடுத்த கண்ணபிரானது

தண் மாமலை வேங்கடத்து

குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்

உம்பர் நம்பும்

மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை

சென்று

போய் அடைந்து

பொருள்படைப்பான்

(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு

கற்ற

(புதிதாக) அப்யஸித்த

திண்ணளவு

வலிமையின் செயல் (என்று)

அறிந்தோம்

தெரிந்து கொண்டோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தலைவன் பொருள்வயிற் பிரிதலைக் குறிப்பாலறிந்து தலைவி தோழிக்குக் கூறல் இது. தேசாந்தரஞ் சென்று பொருள் சம்பாதிப்பதற்காக நாயகியைப் பிரிந்து செல்லுதல் பொருள்வயிற் பிரிவாம். (பொருள்வயின் – பொருள் நிமித்தமான என்றபடி.)

இங்கே ஒரு சங்கை பிறப்பதுண்டு; – எல்லாவற்றாலும் பரி பூரணனான ஒரு உத்தம புருஷனையே தலைவனாக நாட்டி நூலுரைப்பர் கவிகள்; அத்தலைவன் பொருள் சம்பாதிக்கும் பொருட்டு நாயகியைப் பிரிந்து தேசாந்தரம் செல்லப் பார்க்கிறானெனில், அவன் ஏழை என்று ஏற்படுமே; அவனவன் தலைவனாயிருக்கத்தக்கதே என்று சங்கிக்க இடமுண்டு. இதற்கு கேண்மின்; பொருளில்லாதவனாய்ப் பொருளீட்டுதற்காகப் பிரிகிறானென்பதில்லை; அப்பொருள் கொண்டு, துய்ப்பது ஆண்மைத் தன்மையன்று என்று கருதித் தனது ஸ்வயார்ஜிதமாய்ப் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியும் பிரிவு இது- என்றுணர்க. தேவகாரியமும் பித்ருகாரியமும் ஸ்வயார்ஜிகமான பொருள்கொண்டு செய்தாலன்றிப் பயன்படா; தாயப் பொருளாற் செய்யுமது தேவர்களையும் பித்ருக்களையும் இன்புறுத்தாதாம். ஆதலால் அவர்களையும் இன்புறுத்த வேண்டிப் பிரிவது ஏழைமையைக் காட்டாதென்க.

செல்வம்நிறைந்த தலைமகன் பொருள்வயிற்பிரிதற்குக் காரணங் கூறுகின்ற திருக்கோவையருளாகாரர்- ‘பொருள் வயிற்பிரிதெலன்பது- குரவர்களாக படைக்கப்பட்ட பொருள்கொண்டு இல்லறஞ்செய்தால் அதனால் வரும்பயன் அவர்க்கு ஆம் அத்ததுணையல்லது தமக்கு ஆகாமையால் தமது பொருள்கொண்டு இல்லறஞ்செய்தற்குப் பொருள்தேப் பிரியா நிற்றல்’ என்றதுங்காண்க.

நாயகன் நாயகியைப்பிரிந்து செல்ல நினைக்கும்போது அந்த நினைவை வாய்விட்டுச் சொல்லாமல் மறுபடியும் தான் திரும்பி வருமளவும் அவள் நினைத்து ஆற்றியிருக்கும் பொருட்டு அவளிடத்தில் சில பணிவான பணிவான செய்கைகளைச் செய்வதும்சில பணிவான சொற்களைச் சொல்லுவதும் வழக்கம். அதாவது- அடுத்தடுத்து அணைத்துக்கொள்ளுதல், ஓயாது முத்தமிடுதல், காலைப்பிடித்தல், கையைப்பிடித்தல், கும்பிடுதல், அஞ்சலி செய்தல், ‘உன்னைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியேன். பிரிந்தாலும் தரிக்கமாட்டேன் என்று சொல்லுதல் முதலியனவாம். இவ்விதமாகவே, பொருளீட்டுதற்பொருட்டத் தலைமகளைப் பிரியக்கருதிய தலைமகன் தலைமகளிடத்திலே விலக்ஷணமான சில, செய்கைகளைச் செய்தலும் சில வார்த்தைகளைச் சொல்லுதலும் செய்ய, அது நோக்கித் தலைமகள் ‘இதற்கு முன்பு இவர் இப்படிப்பட்ட செய்கைகள் செய்ததில்லை, இப்படிப்பட்ட வார்த்தைகளும் சொன்னதில்லை; இப்பொழுது புதிதாகவே இவை நேர்கின்றன: இவற்றை ஆராய்ந்து பார்க்கில் இவை புறப்பூச்சாகத் தோன்றுகின்றன. இங்ஙனம் வரம்புகடந்த விதமாக இவர் செய்வதற்கும் சொல்வதற்கும் ஒரு கருத்து இருக்க வேண்டும்; அது எதுவாக இருக்கக்கூடுமென்றால், பொருள் சம்பாதிக்கும் பொருட்டு நம்மைப் பிரிந்துபோக நினைத்ததாயிருக்க வேண்டும்; பிரிந்துபோக நினைத்திலராகில் இப்படிப்பட்ட புதிய செய்கைகளைச் செய்யவும் புதியவார்த்தைகளைச் சொல்லவும் நேரமாட்டாது’ என்று நிச்சயித்து அந்த நிச்சயத்தை நாயகி வாய்விட்டுச்சொல்லும் பாசுரமாமிது.

இப்படிப்பட்ட வெறும் ‘உபசாரச்செயல்களை இன்று செய்யக் காண்கையாலே இவர் அரியபெரிய ஒரு மலைக்குச் சென்று பொருள் தேடலுற்ற ஊக்கத்தைக் காட்டினவராயினர்; பிரிவுக்கு அறிகுறியாகவே இவை செய்கின்றனர் என்றளாயிற்று. பொருளின் பொருட்டுப் பிரியக்கருதிய இம்மனக்கொடுமை இவர்க்கு இயற்கைக் குணமன்று, எவ்விடத்தோ புரிதாகக் கற்றுவந்த செய்கைக் குணமென்பதைக்காட்ட ‘கற்ற திண்ணனவு’ என்றது. முன்பெல்லாம் நாயகன் தன்னைநோக்கி ‘என் செல்வச்சிறுமியே! எனக்கு நீயே பொருள், உன்னை விட்டுப்பெறவேண்டும் பேறு எனக்கு வேறுண்டோ?’ என்று உபசாரமாகக் கூறினவை இப்பொழுது பொருள் சம்பாதிக்கச்செல்ல நினைத்ததனால் பொய்யாகிற தன்மையை பொருள் படைப்பான் கற்றதிண்ணனவே’ என்றதனால் கூறிப் பரிஹஸித்தபடி.

‘இந்நாள்’ என்றதனால்- முன்பு இப்படி வரம்புகடந்த செயல்களில்லாமை விளங்கும். ‘பயில்கினற்ன’ என்றதனால்- ஒருகால் செய்ததையே மீண்டும் பலகால் செய்வதும், ஒருகால் சொன்னதையே மீண்டும் பலகால் சொல்லுவதும் தோன்றும், ‘பாண்குன்றநாடர்’ என்றவிடத்து, ‘பாண்’ என்பதைத் தனி முற்றாக நிறுத்தியுரைப்பதும் குன்றத்திற்கு அடைமொழி யாக்கியுரைப்பதும் உண்டு; முதற் பக்ஷத்தில், பாண்- பாணருடைய தொழில் என்படி, சங்கீதம்பாடிப் புகழ்வோர்க்குப் பாணரென்று பெயர்; ‘குடுகுடுபாண்டிகள்’ என்று வருகிற பாட்டுக்காரரைக் கொள்ளலாம். அவர்கள் உடுக்கையைக் குலுக்கிக்கொண்டு ‘தொப்பை தள்ளுது தொப்பை தள்ளுது’ என்றிவை முதலாக மனப்பூர்வமாகவன்றி வெளிக்குச் சொல்லும் புகழுரைபோல, இங்கு, பொய்யாகச் செய்யும் உபசாரத்தைக் குறித்ததாம். இப்போது தலைவர் செய்யும் செய்கைகளும் சொல்லும் வார்த்தைகளும் வேஷங்கட்டியாடுகிறாப்போலுள்ளனவேயன்றி உண்மையான அன்பு தூண்டச் செய்பவையல்ல என்றவாறு. இனி இரண்டாம் பக்ஷத்தில், ‘பாண்குன்றம்- (வண்டுகளின்) இசைப்பாட்டையுடைய மலை என்றாம். மலைகள் நிரம்பிய நாட்டுக்குத் தலைவனாயிருப்பது நாயகனுக்குச் சிறப்பாதலால் ‘குன்ற நாடா’ எனப்பட்டது. ஸ்வாபதேசத்தில் தலைமகனான எம்பெருமனும் திருவத்திமமலை திருவேங்கடமலை திருமாலிருஞ்சோலைமலை திருமெய்மலை முதலிய திருமலைகள் விளங்கப்பெற்ற நாட்டுக்குத் தலைவனென்பது உணரத்தக்கது. கல்நெஞ்சர் என்னவேண்டிக் குன்றநாடரென்றாள்போலும்.

‘மாண்குன்ற மேந்தி தண்மாமலை வேங்கடத்து’ – ஒரு மலையை மேலெடுதலும் ஒரு மலையின்மேல் நின்றும் மையோசிதமாக உயிர்களைக் காத்தருள்வன் எம்பெருமான் என்றதாம்.

குளமேந்தி என்பதில் ‘ஏந்தி’ என்றது வினையெச்சமன்று; ‘இ’ என்னும் கருத்தாய் பொருள் விகுதிபெற்ற பெயர்ச்சொல்; ஆனதுபற்றியே ‘ஏந்தித்தண்’ என இரட்டிக்கவில்லை. உணர்தினைப்பெயரின் முன் வலி இயல்பு.

உம்பர்நம்பும் வேங்கடத்துச் சேண்குன்றம் = எல்லாவுலகங்களுக்கும் மேற்பட்டதான பரமபதத்திலுள்ள நிர்யஸூரிகளும் விரும்பி விரைந்து வந்து தொழுவதற்கு ஸமீபமாம்படி உயர்த்தும் சிறந்ததுமாயுள்ள திருமலையில் எம்பெருமான் அநுபவிக்கிற ஸொலப்பஸௌசீல்பகுணம் சிறந்ததென்று அங்குள்ளார் இவ்விடத்தை விரும்புவரென்க. ‘மலையேறி எலிபிடிக்க வேண்டி என்னைப் பிரிந்துபோகக் கருதுக் கருதுகின்றீரோ?’ என்ற பரிஹாஸமும் இதில் தொனிக்கும், இப்பாசுரம் தோழியைநோக்கிக் கூறியதாகவுமாம், தலைவனை நோக்கிய முன்னிலைப்படர்க்கையாகக் கூறியதாகவுமாம்; தலைமகன் பொருள்வயிற்பிரிவறிந்த தோழி தலைவனை நோக்கிக் கூறியதாகவுமாம்.

ஆழ்வார் எம்பெருமானுடைய பிரிவை ஆற்றாது வருந்தியிருந்த நிலையிலே தம்மை ஆற்றாது வருந்தியிருந்த நிலையிலே தம்மை ஆற்றுவித்த அன்புடைய பாகவதர்கள் பின்பு பரம்பொருளைத்தேடிப் பெறும்பொருட்டுத் திவ்யதேச யாத்ரையில் அபேக்ஷையுடையதாய்த் திருவேங்கடத்துக்குச் செல்லத் தொடங்கியதை அறிந்த ஆழ்வார் அவர்களின் பிரிவை ஆற்றாமையால் அருள்செய்த வார்த்தை இது என்னலாம். ஸ்வாபதேசத்தில், ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற பாகவதர் இவரநுமதிபெற்று விடைகொள்ளவேண்டி இவர்பக்கலிலே பலவாறு பணிந்து வணக்கத்தோடு சில வார்த்தை விண்ணப்பஞ்செய்ய, ‘இது இவர்கள் பிரிவுக்கு அடியாம்’ என்று அறிந்து, பொறுத்தருளாமல் ‘இவர்கள் பணிவுகளெல்லாம் பாணர்செயல்போல வெளிக்காட்டாகவுள்ளன; இதன் அபிப்ராயம் அறிந்தோம்’ என்பது முன்னடிகளில் உறையும். இப்பாகவதர் “வேங்கடத்தைப்பதியாக வாழ்வீர்கள்” என்கிறபடியே திருமலையை இடமாகக்கொண்டு வாழ நினைத்தவர்களாதலால் இவர்களைக் குன்றாட ரென்கிறது.* குன்றமேந்திக் குளிர்மழை காத்தவன் சென்றுசேர் திருவேங்கடமாமலையிலே நிகரிலமார் முனிக்கணங்கள் விரும்பும் உயர்ந்த சிகரத்தைச் சென்று சேர்ந்து அங்கு வைத்தமாநிதியாம் மதுசூதனனைப் பெறுதற்குத் துணிந்த துணிவே இது என்பன பின்னடிகள்.

பாகவதரோடு கூடியிருக்கும் இருப்பொழிய வேறு எம்பெருமானுந்தருளின திவ்ய தேசத்துக்குப் போக நினைப்பதும் தவறு என்று பாகவத ஸஹவாஸத்தின் சிறப்பு இப்பாட்டால் வெளியிடப்பட்ட தென்றறிக.

 

English Translation

Judging from what we see and what we hear of the things the bee-humming mountain-lord does these days, it is clear that the mountain-lifter Krishna has resolved to retreat into the tall gods-worshipped hills of Venkatam for making wealth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top