(2484)
ஞாலம் பனிப்பச் செரித்துநன் நீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற வானமிது திருமால்
கோலம்சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்வினை யாட்டியேன் காண்கின்றவே.
பதவுரை
|
ஞாலம் பணிப்ப |
– |
உலகம் நடுங்கும்படி |
|
செறித்து |
– |
கம்மில்தாம் நெருங்கி |
|
நல் நீர் இட்டு |
– |
(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச்சிந்தி |
|
கால் சிதைந்து |
– |
கால்களால் தரையைக் கீறிக்கொண்டு |
|
நீலம் வல் ஏறு |
– |
கரியவலிய எருதுகள் |
|
பொராநின்ற |
– |
போர் செய்யப்பெற்ற |
|
வானம் இது |
– |
ஆகாசமாகும் இது; |
|
திருமால் |
– |
எம்பெருமானுடைய |
|
கோலம் சுமந்து |
– |
வடிவத்தை யுடையதாய் |
|
பிரிந்தார் கொடுமை குழறு |
– |
பிரிந்துபோன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற |
|
தண் பூ காலம் கொல் ஓ |
– |
குளிர்ந்த அழகிய கார்காலத்தானோ? |
|
வினையாட்டியேன் |
– |
தீவினையுடைய நான் |
|
காண்கின்ற |
– |
காண்கின்றவற்றை |
|
அறியேன் |
– |
இன்னதென்று அறிகிற வில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “காலமயக்கு” என்னுந்துறையில் அமைந்ததாம் இப்பாசுரம். இத்துறைதானே திருக்கோவையரில் ‘காலமறைத் துரைத்தல்’ என வழங்கப் பெற்றுள்ளது. நாயகியோடு கூடியிருந்த நாயகன் ஒரு காரியப் பாடாகத் தேசாந்தரஞ் செல்லவேண்டி ‘மாதே! நான் இஎபோது புறப்பட்டுப்போய்க் கார்காலத்திலே திரும்பி வருகின்றேன்’ என்று சொல்லிக் காலங்குறித்துப் பிரிந்து சென்று அக்கார்காலம் வந்தவளவிலும் தான் வராதிருக்க, ‘அந்தோ! நாயகன் குறிப்பிட்ட காலம் வந்துவிட்டதே!, இவ்வளவில் அவன் வந்திலனே!’ என்று கார் காலவரவையும் காதலன் வராமையையும் நோக்கி வருந்துகின்ற தலைவியைத் தோழியானவள் ‘கங்காய்! நீ என் வீணே வருந்துகின்றாய்? மெய்யே கார்காலம் வந்தாலன்றோ காதலன் வந்திடுவான்; அவன் சொல்லிப்போன கார்காலம் வரவில்லை; கார்காலமன்றாகில் இதோ மழை பெய்கின்றதே; இஃது என்? என்று கேட்பாய்; வானத்தில் நெருங்கி நீர் சொரிபவை மேகங்களல்ல; ஒன்றோடொன்று போர்செய்கிற கறுத்த எருதுகளைக் கண்டு மேகமாக மயங்குகின்றாயத்தனை; அவை கரிய காளைகளேயன்றி மேகங்களல்ல; பெய்கின்றது மழைநீரன்று; அக்காளைகளின் வியர்வை நீரும் சிறுநீரும் பெருகுவதைக் கண்டு மழைநீராக மயங்குகின்றாய்த்தனை’ என்று தலைவியை ஒருவாறு ஆற்ற வேண்டிக் காலத்தை மயக்கிக் கூறுகின்றாள் தோழி.
இப்படி பொய்யுரை கூறுவது பாவமாகாதோ வெனில்; ஆகாது; பொய்ம்மையும் வாய்மையிடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்” என்பது திருக்குறள்; பெருந்தீங்கையாயினும் மரணத்தையாயினும் அடைய நின்றதோ உயிர் ஒருபொய்யுரையால் அத்துன்பத்தினின்று நீங்கி இன்பமடைவதாயிருந்தால் அது பொய்ம்மைக் குற்றத்தின்பாற் படாதென்க. இங்குப் பிரிவாற்றாமையால் தலைமகளுக்கு உண்டாகும் அபாயத்தைப் புனைந்துரையால் ஒழித்தவாறு காண்க. இங்ஙனம் தோழி பொய் சொல்லிவிட்டாலும் தலைமகளுக்கு உண்மை தெரியாதோ? ‘எப்படியாவது நம்மை ஆற்றுதற்காகக் கற்பனை வகையால் முழுப்பொய் கூறுகின்றாள்’ என்று நினைத்துக்கொள்ள மாட்டாளோ? என்னில்; அவ்விதமாக அவள் நினைத்துக் கொள்ளாமைக்காகவே, உடனே ‘தண்பூங்காலங் கொலோவறியேன்’ (மெய்யே இது கார்காலத்தானோ என்னவோ அறியேன்) என்று தானும் ஐயப்படுவதாகச் சொல்லி முடிக்கிறாள்.
‘இது கார்காலமன்று, என்று நிஸ்ஸந்தேஹமாகச் சொன்னால்தானே தலைவிக்கு ஆறுதல் உண்டாகும். முதலில் காலத்தை மயக்கிச் சொல்லி, உடனே ‘அக்கார்காந்தானோ இது!’ என்றும் சொல்லிவைத்தால் தலைவிக்கு வருத்தமேயன்றோ மிகும்; ஆறுதல் உண்டாகாதேயெனில்; ‘நமது தோழி இரண்டுவகையாகவுஞ் சொல்லுகிறாள்; அவள் பொய்சொல்லுகிறவளாகில்
‘இது கார்காலமன்று’ என்று கண்டிப்பாய்ச் சொல்லவிடலாம்? அப்படிச் சொல்லாமல் ஸந்தேஹமாகச் சொல்லியிருப்பதால் அவளும் நிச்சயிக்க முடியாதபடியிருக்கிறதுபோலும்; இதை நாமே ஆராய்ந்து பார்த்து நிச்சயிப்போம்’ என்று தலைவி நினைத்து ‘இது நீலவல்லேறு பொராகின்ற வானமா? தண் பூங்காலமா? என்று ஆராயத் தொடங்குவள்; இந்த ஆராய்ச்சியில் சிறிது பொழுது ஆறியிருந்திடுவள், என்பது தோழியின் கருத்தாகலாம்.
திருமால்கோலஞ்சுமந்திருப்பதும் பிரிந்தார்கொடுமையைக் குழறுவதுமாகிய தண்பூங் காலங்கொலோ! அறியேன் என்கிறாள். கார்காலத்து மேகமானது- விளங்குகின்ற மின்னலாலும் கறுத்த நிறத்தாலும் திருமகளை மார்பிற்கொண்ட கரிய திருநிறமுடைய ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் போலுதலால் ‘திருமால் கோலஞ்சுமந்து’ காணப்படுகிறது. மேகம் கர்ஜிப்பதானது- பிரிந்துபோய் இக்காலத்திலும் வராத தலைவருடைய கொடுமையை ஞாபகமூட்டி வருத்துதலால் ‘பிரிந்தார் கொடுமை குழறு’ எனப்பட்டது. ‘இம்மாரிக் காலத்திலும் வந்து அணையாதே தனிக்கிடை கிடக்கின்ற தலைவர் மிகக் கொடியவர்!’ என்று கோஷம் போடுவதுபோலிருக்கின்ற தாம் மேகம் முழங்குவது. தலைவருடைய கொடுமையாவது- சொன்னபடிவாராத குற்றம். ‘தண் பூங்காலம்’ என்று அடைமொழிகள் கொடுத்துக் கூறினது ‘அக்காலம் கலவிக்கு உரியது’ என்பதைக் காட்டலாம். ‘தண்பூங்காலமன்று’ என்னாமல் ‘தண்பூங்காலங்கொலோ!’ என்றது- ‘தலைவர் இருக்குமூரிலும் இக்கார்காலமே யாகமாதலால் உன்னைப்போலே அவரும் பிரிவில் ஆறியிருக்கமாட்டாதவராய் விரைந்து வந்திடுவர், வருந்தாதே’ என்று ஆற்றுகிறபடியுமாம்.
தோழியானவள் தன்னை ‘வினையாட்டியேன்’ என்று சொல்லிக்கொள்ளுகிறாள்; நீ இப்படி வருத்தப்படா நிற்க உன்னைக் கண்டுகொண்டிருக்கும்படியான பாவத்தைப் பண்ணினேனே நான்! என்று தன்னை நிந்தித்துக்கொள்கிறான். அவன் வாராமல் நீ வருந்துவதற்குக் காரணம் அவனுடைய கொடுமையுமன்று, காலமுமன்று, காண்கிற என்னுடைய பாவமே காண், என்கிறாள்போலும் விளையாட்டியேன் = வினையாயாள்பவன்; வினையையுடையவளென்றபடி. வினையென்பது நல்வினை தீவினைகட்குப் பொதுவான சொல்லாயினும் ஸந்தர்ப்பத்தால் தீவினையைக் குறிக்கும்.
‘ஞாலம் பனிப்ப’ என்பதை ‘தெறித்து’ என்பதோடு அந்வயித்தால், ‘உலகத்தவர் கண்டு நடுக்கமடையும்படி பரஸ்பரம் நெருங்கி’ என்று பொருளாம்; ‘நன்னீரிட்டு’ என்பதோடு அவ்வயித்தால், ஞாலம்- பூமி முழுவதும், பனிப்ப- கனையும்படியாக, நன்றாக நீரைச்சொரிந்து என்று பொருளாம். நீர் – வியர்வைநீரும் மூத்திரநீரும். எருதுகள் கோபத்தோடு போர் செய்யும்போது கால் சிதைத்தல் இயல்பு. பொராநின்ற வானமிது = பூமியில் இடம் போதாமல் ஆகாயத்திலே பிணங்குகின்றன காண் என்கிறாள். ‘இப்படியும் ஸம்பவிக்குமோ!’ என்று சிறிது ஆலோசிக்கட்டும்; அதில் சிறிதுபோது ஆறுதலாக இருக்கட்டும் என்று கருத்துப்போலும்.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப்பொருள் பலவகையாகக் கூறுவார்கள். ஆளவந்தார் தமது ஸ்தோத்திரத்தில் “அவிவேகநரந்ததிங்முகே பஹுதா ஸந்தது:க்கவர்ஷிணி – பகவந்தபவ துர்த்திகே” என்றருளிச் செய்கிறார். ஸம்ஸாரத்தைக் கார்காலத்து நாளாக ரூபிக்கிறார். அது எப்படி யிருக்குமென்றால், மேகங்களால் மூடப்பட்டு இருள் நிறைந்து திசைகள் தோன்றப் பெறாமலிருக்கும்; ஸம்ஸாரமும் அஜ்ஞாநமாகிய மேகத்திரளாலே இருள்மூடி நல்வழி தீவழி தெரியப்பெறாமலிருக்கும். இன்னமும் இடைவிடாது நீர்ப்பெருக்கையுடையதாயிருக்கும் மழைநாள்; ஸம்ஸாரமும் “கண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க, எண்ணாராத் துயர்விளைக்கு மிவையெனை வுலகியற்கை” என்றபடி பலவகைப்பட்ட துக்கங்களாகிற நீர்த்தாரகைளை வர்ஷியாநிற்கும். ஆக இவ்வகைகளாலே மழைநாளென்று சொல்லத்தக்க ஸம்ஸாரத்தைக் கண்டு ஆழ்வார் வருந்தினர்; துன்பம் அதிகப்பட்டவுடனே இன்பம் உண்டாகுமென்று சாஸ்திர முள்ளதனாலும், ‘ஸம்ஸாரம் மேலிட்டு கலியுமளவில் நான் அவசியம் வந்து முகங்காட்டுவேன்’ என்று எம்பெருமான்றானும் வாயோலை செய்து கொடுத்திருப்பதனாலும் இப்படிப்பட்ட நிலைமையிலும் எம்பெருமான் வந்து உதவியருளவில்லையே!’ என்று வருந்தினர் ஆழ்வார். அவ்வருத்தத்தை ஏதோ சில வியாஜோக்திகளினால் அன்பர் அகற்ற நினைக்கின்றனர். என்பதை வெளியிடுவதாம் இப்பாசுரம். இனி இக்கருத்துக்கிணங்க பிரத்யேகம் பதப்பொருள்களை ஊகித்துக் கொள்க.
முதலிடியில் ‘செறுத்து’ என்றும் பாடமுண்டு. பொராநின்ற வானம் = பெயரெச்சம் இடைப்பெயர் கொண்டது. போர் செய்வதற்கிடமான வானமென்கை. குழறுதல்- அவ்யக்தமாகக் கூறுதல்.
English Translation
Are they snorting black bulls that I see in the sky, locked in a battled with bent knees drenching the Earth with their hot piss, or are they the sentinels of death bearing the cool fragrant crest of Tirumal, come to take a deserted lover? Alas, hapless me! I do not know.
