(2480)

(2480)

குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,

நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல்,

தண்ணந்துழாய் அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்

தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச கமே.

பதவுரை

தண் அம் துழாய்

குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து

(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப்போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்

எம்பெருமான்
விண்ணோர் தொழகடவும்

மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல்போல் சினத்த

பள்ளின் பின்போன

(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன

தனி நெஞ்சம்

(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்

புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்

குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்

பூமிப்பிராட்டியும்
திருவும்

பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்

(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்

பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்

திரும்பி வருமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனுடைய பிரிவுக்கு ஆற்றாக நாயகி நெஞ்சழிந்து உரைக்கும் பாசுரம் இது. கீழ்ப்பாட்டில், தன்னுடைய வேறுபாடான நிலைமைக்கண்டு வியந்துரைத்த தோழியை நோக்கி ‘அவன் பக்கல்போன என்னெஞ்ச மீண்டுவருமோ? வாராதேபோய் விடுமோ?’ என்கிறளென்க.

எம்பெருமான் ஆழ்வார்க்கு ஸேவை ஸாதிக்கும் பொருட்டுக் கருடன்மேலேறி வந்து ஸேவை ஸாதித்துவிட்டுத் திரும்பியெழுந்தருளினன்; ‘இக் கருடனுடைய பாக்கியமே பாக்கியம்; எம்பெருமானுடைய காட்சி நமக்குக் கனவிலுங் கிடைப்பது அரிதாயிருக்கின்றது; இக்கருடன் இரவு பகலென்னும் லெப்போதும் இப்பெருமானைச் சுமந்து திரிகிறானே! இப்பரம பாகவதனுடைய பாக்கியம் விலக்ஷணமானது!’ என்று ஆழ்வார் கருதினார்; உடனே இவ்வருடைய திருவுள்ளம் அக்கருடன் பின்னேபோயிற்று. அவன் புகுந்த பரமபதத்தளவும் நெஞ்சும் போயிற்று; போனவிடத்திலே பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் நப்பின்னைப் பிராட்டியார் என்னும் தேவிமார் மூவரும் எம்பெருமானுக்கு நிழல்போலே இருக்கும்படியைக் கண்டால் அச்சேர்த்தியழகை அனுபவிப்பதை விட்டிட்டு மீண்டுரவத் தோன்றுமோ? தோன்றுவது அருமை; அச்சேர்த்தியழகைக் கண்டுகொண்டு அவ்விடத்திலேயே நின்று விடுமோ, அன்றி, ‘நம்முதலாயினிடம் நாம்போய்ச் சேர்ந்து விடுவோம்’ என்று கொண்டு திரும்பி வந்திடுமோ? என்று ஸம்சயிக்கிறபடி.

‘அப்புள்ளின் பின்போன தனிநெஞ்சம்’ என்றவிதனை ஆழ்ந்து நோக்குங்கால் ஒரு சீரிய உள்ளுறை பொருள் தோற்றும்; கருடன் வேதஸ்வரூபியாதலால், சிறந்த பிரமாணமாகிய வேதத்தைத் தமது திருவுள்ளம் அநுஸரிக்கின்றது என்பது தெரிவிக்கப்பட்டதாம். ‘தழல் போல் சினந்த அப்புள்’ என்று பகைவரை அழிக்கவல்ல பராக்ரமங்கூறுதலால் அவ்வேதப்ராமணம் புறமதங்களை யழிக்கவல்லதென்பது கூறிற்றாம். ‘சக்கரதண்ணால் கடவும்புள்’ என்றதனால்  அப்பிராணம் ஸர்வேச்வராதீநமென்பது விளங்கும். ‘விண்ணோர் தொழக் கடவும்புள்’ என்றதனால் அந்தப் பிரமாணபலத்தாலே தேவர்கள் யாவரும் எம்பெருமானுக்கு அடிமைப்படுவதென்பது பெறப்படும்.

கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல் = ‘கொல்’ இரண்டும் ஸந்தேஹகத்தில் வந்தவை. இத் தேவிமார்கள் எம்பெருமானை விட்டு நீங்காதிருப்பதுபோல நமக்கும் நித்யயோகம் கிடைக்குமோ?  அன்றி, இன்னமும் மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியாகவே நேருமோ? என்று ஆழ்வார் கவல்கின்றனரென்க.

ஆழ்வார், தமது திருவுள்ளம் வேதங்களிலே பிரவேசித்து அந்தப்பிமாண மூலமாகத் திருமாலை யநுபவிக்கத் தொடங்கிற்று என்றும், இவ்வநுபவம் மாறிப் போய்விடுமோ அன்றி மாறாது நித்யமாயிருக்குமோ என்று தமக்கு ஸந்தேஹமுள்ளது என்றும் இப்பாட்டாலருளிச் செய்தாராயிற்று.

English Translation

The flute-playing cowherd-Lord, the benevolent one, with Nappinnai, Earth Dame and lotus fiercely destructive discus and rides the fiercely angry Garuda bird. Will my lonely heart that went after him remain there or return? Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top