(2237)
காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே? – பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நாங்கள் திரு.
பதவுரை
|
திருமாலை காண கழி காதல் |
– |
எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம் |
|
கைமிக்கு காட்டினால் நாணப்பம என்றால் |
– |
மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்கவேணுமென்றால் அடங்கியிருக்க முடியுமோ? |
|
கருமாலை |
– |
கரிய திருமாலாகிய அப்பெருமானை |
|
பொன் மேனி காட்டா முன் |
– |
அவனது அழகிய திருமேனி தானே காட்டிக்கொடுப்பதற்கு முன்னே |
|
நாங்கள் திரு |
– |
நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி |
|
பேணி |
– |
விரும்பி |
|
காட்டும் |
– |
காட்டிக்கொடுப்பன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்“ என்று பிரார்த்தித்தார், எல்லாப்பாட்டிலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் “எம்பெருமான் திருவுள்ளமானபடி செய்கிறான்“ என்று ஆறியிருக்கவேணுமேயன்றி இன்னது நீ செய்யவேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தகுதியோ என்று ஒருசங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க.
அவனைப் பரிபூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்க வேணுமென்னுங்காதல் கிளராதிருக்குமாயின் நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும் அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்? ஸ்வரூவுணர்ச்சியினால் எவர் பதறாது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாக வில்லையென்று கொள்ளவேணுமேயன்றி காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால் அடங்கியிருக்கிறார்களென்பது ஒருநாளுமில்லை. – என்பது முன்னடிகளின் கருத்து.
காதலின் கனத்தால் நீர் பதறினாலும் அப்பெருமான் தானாகவே நிர்ஹேதுகமாக அருள்செய்து தனது திருமேனியைக் காட்டிக்கொடுத்தாலன்றோ நீர்கண்டு அநுபவிக்கலாம், உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆகும்? வனத்திடரை ஏரியாம் வண்ணமியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்கிற்பார் மற்று“ என்று நீர்தாமே சொல்லிவைத்திருக்கிறீரே‘ என்று சிலர் சொல்ல, எம்பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிடினும். ஸகல லோகமர்தாவாயிருக்கிற முறைமையினாலும், நிக்ரஹம் கலசாது அநுக்ரஹமே வடிவாயிக்குந் தன்மையினாலும். அபராதங்களைப் பார்த்துச் சீறியிருக்கு மெம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் திருத்திச் சேதநர்களை அங்கீகரிப்பிக்கும் புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக்காட்டித்தருவள், அதிலொருகுறையில்லை – என்கிறார் பின்னடிகளில்
“காணக்கழிகாதல்“ என்றவிடத்து ‘கழி‘ என்பதை உரிச்சொல்லாகக் கொண்டால் அதிகமா காதல் என்று பொருள்படும். அன்றி, ‘கழிகாதல்‘ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவதான காதல்‘ என்று பொருள்படும். 1. “கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும்“ என்றது காண்க.
நாணுதல் – அடங்குதல், கருமால் பொன்மேனியை, அக்கருமால் காட்டாமுன் நங்கள் திரு காட்டும்.
English Translation
When the desire to see the Lord swells like the ocean, is it possible to shy away even if one wishes to? Even before the lord reveals his dark form, the lotus-dame Lakshmi comforts us with showing his golden outline.
