(2197)
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, – வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.
பதவுரை
|
தனக்கு |
– |
சேதநனாகிய தனக்கு |
|
அடிமை |
– |
சேஷத்வமென்பது |
|
பட்டது |
– |
அமைந்திருக்கின்ற தென்பதை |
|
தான் அறியான் ஏலும் |
– |
தான்தெரிந்துகொள்ள அசக்தனாயிருதாலும் |
|
(எம்பெருமான் தானாகவே) |
||
|
மனத்து |
– |
மனத்திலே |
|
அடைய |
– |
வந்து சேர்ந்த வளவில் |
|
மாலை |
– |
அப்பெருமானை |
|
வைப்பது |
– |
இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்; |
|
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;) |
||
|
வனம் திடரை |
– |
காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை |
|
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் |
– |
(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி) ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி |
|
மற்று |
– |
பின்னும் |
|
மாரி |
– |
மழையை |
|
பெய்கிற்பார் |
– |
பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள் |
|
யார் |
– |
யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படியாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத்துப் படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்; நாம் யாதொரு ஸாதாநாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண்ணும் மரமும் கல்லும் கரியும்போலே அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப்பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள வாசிக்காகச் செய்யத்தக்க தொன்றுண்டு, அதாவது அவனைப் பெறவேணுமென்னும் ருசிமாத்திரம் நமக்கு இருக்கத்தகும். மற்றபடி பேற்றுக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.
இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி விலக்காமையுடன் இருக்க வேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல்; அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய்விப்பதென்பதே நமக்கு இயலாது.; ஆதலால், நமக்கு ஸ்வரூபஜ்ஞாநமும் முற்றமுதிர உண்டாகாவிடினும், விலக்காமை என்கிற இவ்வளவு மாத்திரம் நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றுக்கோடாகக் கொண்டு நம்முடைய விரோதிகளைப் போக்கித் தன்னைத் தந்தருள்வன் – என்பதாகக்கொள்ளலாம்.
அன்றியே; அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்றறிகின்ற விவேகமில்லாதவனாகவே இச்சேதநன் இருந்தாலும், இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், (பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறானோ அந்தச் செயலையே மற்றுள்ள ஸாமாந்ய
ஜநங்களும் செய்கிறார்கள்) என்றதற்கேற்ப, பெரியோர் செய்யும் முறையைமையைக் கண்டாகிலும் ஸர்வேச்வரனை ஹ்ருதயத்திலே கொண்டு இச்சேதநன் தியானிக்கக் கடவன்; இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தியையும் செய்து தருவன் – என்பதாகவுங் கொள்வர். மற்றும் பலவகைகளுங் காண்க.
பின்னடிகளில் அருளிச் செய்யப்பட்டுள்ள த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்த கொண்டு அதற்கிணங்க முன்னடிகளின் ஆழ்ந்த கருத்தை அறிந்துகொள்க. காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதநமாக மாட்டாது; நாம் ஏரி வெட்டுகிறோமென்பது கொண்டே பர்ஜந்யதேவன் மழை பெய்து விடுவனோ? மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால். அப்படிப்பட்ட மழைக்கு ஏரிவெட்டுதல் உபாயமாகமாட்டாது. இஃது உலகறிந்த விஷயம். ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றாகில் வீணாக ஏரி வெட்டுவானேன்? என்று நினைக்கலாகாது; எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நீரை வனத்திடர் தாங்கிக் கொள்ளமாட்டாது; நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்து வைப்போமாயின், மழை பெய்யும்போது வரும் தண்ணீர் அதிலே தங்குவதற்குப் பாங்காகும். ஆகவே மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி மழையைப் பெய்வித்தற்காகவன்று என்பது விளங்கும். இவ்வாறே, நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமைய சீர்ப்படுத்திக் கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு ஸாதநமாகமாட்டாது; ஒருகால் பகவான் நம்மை திருவுள்ளம் பற்ற வருவானாயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும். நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக் கொள்ளுதல்.
திருத்தமுறாத சேதநரை வனத்திடரின் ஸ்தாநத்திலே கொள்க; அத்வேஷாதிகளாலே தம்நெஞ்சைத் திருத்திக் கொள்வதானது ஏரியாம் வண்ண மியற்றுகையாம்; பகவத்ப்ராப்தி கைபுகுதல் மாரிபெய்கையாம். ஆகவே நாம் செய்யும் ஸுக்ருதங்களெல்லாம் நிர்ஹேதுகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத் தாங்கிக் கொள்வதற்கு மாத்திரம் உறுப்பாகுமேயொழிய, பகவத் விஷயீகாரத்தை நிர்ப்பந்தப்படுத்தி யுண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப்பட்டதாயிற்று இப்பாட்டில்.
சேதநக்ருத்யமொன்றும் உபாயமன்றாகில், சேதநன் மனம் போனபடியே செய்து திரியலாமன்றோ என்று சிலர் சங்கிப்பதற்கும் இடமில்லாமை காட்டப்பட்டது இதில். சாஸ்த்ரங்களுரைத்த நல்வழியில் நாம் இருந்துகொண்டு கர்த்தவ்யங்களை உபாயத்வ புத்தியின்றியே அநுஷ்டிக்க வேண்டியது ஆவச்யகமே; ஆனால் நாம் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோமாகையால் நமக்கு பகவத் விஷயீகாரம் விளைந்தே தீருமென்று அதற்கு இதை ஸாதநமாக ப்ரதிபத்திபண்ணியிருக்க ப்ராப்தியில்லை. 1. “எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே” என்றே மஹான்கள் அநுஸந்திப்பர்களாதலால் நிர்ஹேதுக க்ருபையினாலேயே எம்பெருமான் நம்மை விஷயீகரிக்கிறானென்று, நாம் செய்துபோகும் நன்மைகள் ஒன்றுக்கு உபாயமாகையின்றியே ஸ்வயம் ப்ரயோஜந ரூபங்களென்றும் அறுதியிட்டிருக்க வேணும்.
ப்ரபத்தியை உபாயமாகச் சில ஸம்ப்ரதாயஸ்தர்கள் கொள்வது பிசகோ? எனின்; அன்று. இவ்விடத்திலே ஸாரமாகச் சொல்லுயோம் கேண்மின்; – கடலிலே வலைவீசி மீன் பிடித்து ஜீவிப்பானொரு செம்படவன் ஒருநாள் மீன்களிடையே விலையுயர்ந்த ரத்னமொன்று கிடைக்கப் பெற்றான்; அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனாதலால். 2. மாமதியம் திளைக்குங் கொடி மாளிகை சூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெய்கெனச் சென்று முன்னில் வளைக்கை நுளைப்பாவையர் மாறுமா போலே, அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு வியாபாரியிடத்திலே மிகக்குறைந்த விலை கூறி விற்றுவிட்டான். அந்த வியாபாரி, தான் ரத்னத்தின் மதிப்பு நன்குணர்ந்தவனாகையாலும் (வியாபாரமே ஜீவிகையாகவுடையனாகையாலும் அவன் அதைக்கொண்டு போய் ஒரு மஹாராஜனிடத்திலே கிரமமாக அதற்குள்ள விலைகூறி உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டான். பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்நத்தைத் தான் விற்பனை செய்ய நினையாதே. அதனைப் பெரியதொரு ஹாரத்திலே இணைத்து ஸ்வயம் போக்யமாக அமைத்துக் கொண்டான். ஆக இச் செய்தியில் ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின; அற்ப விலைக்கு மாறுதல், உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்யமாகக் கொள்ளப்படுதல் என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால் கூடினாற்போலே, நாம் செய்யும் ஸுக்ருதங்களுக்கும் இங்ஙனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்னத்தின் மதிப்பை அறியமாட்டாது அதனை அற்பவிலைக்கு விற்ற செம்படவன் போல ப்ரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் (அதமாதிகாரிகள்) ப்ரபத்தியைக் கொண்டு ஐச்வர்யகைவல்யாதி க்ஷûத்ர பலன்களைக் கொள்வர். ரத்னத்தைக் குறைந்த விலைக்குக் கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும் வியாபாரியைப் போன்ற மத்யம அதிகாரிகள் பரபத்தியை மோக்ஷஸாதநமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக் கொள்ளாதே மோக்ஷபலனைக் கொள்வர். ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதநமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற உத்தமாதிகாரிகள் ப்ரபத்தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொண்டு வர்த்திப்பர்கள். மஹாராஜனுடைய நிலைமையை விரும்பாதே வியாபாரியின் நிலைமையை விரும்பி ப்ரபத்தியை ஸாதநமாகக் கொள்வார் அங்ஙனமே கொள்க.
“ரத்நம் தீவிரஹஸ்தலப்தமதமும் மூல்யம் ஸ்மாஸாதயேத் தத்ரத்நம் வணிஜோ வசம்வதமத ப்ராப்நோதி மூல்யம் பஹு ஏத்யேதத் யதி ஸார்வபௌ மவசதாம். ப்ராப்ய ஸ்வயம் போக்யதாம் நித்யம் பூஷணதாமுபைதி, ததயம்ந்யாய: ப்ரபத்தாவபி என்று ஸம்ப்ரதாய ஸித்தாஞ்சனத்திலே சொன்னேம்.
தோட்டம் சமைத்து மாம்பழம் பயிர் செய்வார்களில் அப்பழங்களை அரைகுறை விலைக்கும் அளவான விலைக்கும் விற்பாருமுண்டு; விற்காதே ஸ்வபோகத்துக் குறுப்பாகக் கொள்ளுவாருமுண்டு. ஒரு மாம்பழந்தானே ஒருவனுக்கு உபாயமாயும் ஒருத்தனுக்கு உபேயமாயும் ஆகாநின்றது. உபாயமாகக் கொள்ளுமவனுடைய தாழ்வும் உயேமாகக் கொள்ளுமவனுடைய உயர்வும் உலகறிந்ததே. அது போலே, நம்முடைய நற்கிரிசைகட்கு உபாயத் தன்மையும் உபேயத் தன்மையும் உண்டாயிருக்கச் செய்தே உபேயத் தன்மையையே பாராட்டி உத்தமாதிகாரி கோஷ்டியில் புகாதே உபாயத் தன்மையைப்பாராட்டி அதம கோஷ்டியில் புக நினைப்பாரை நாமேன் விலக்குவோம்?
இப்பாட்டில், முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி எங்ஙனேயென்னில்; சேதநன் ஸ்வஸ்ரூப பரஸ்வரூபங்களை நன்கு தெரிந்துகொண்டு தானே நல்ல முயற்சிகளைச் செய்து அவை ஸாதநமாக எம்பெருமானைப் பெற வேண்டுமென்று சொல்ல வேண்டியிருக்க அப்படி சொல்லாமல், தனக்கு ஸ்வரூபமளவில் அதனை விலக்காதவளவே அமையுமென்று முன்னடிகளிற் சொல்லப்பட்டதே, இது பொருந்துமோ? ஸாதநாநுஷ்டாநமில்லாமல் ஸாத்யம் கைபுகுமோ? என்று சங்கை உண்டாக, த்ருஷ்டாந்த முகத்தாலே அந்த சங்கைக்குப் பரிஹாரங்கள். இப்பாசுரத்தின் அழகிய ஆழ்பொருள்களை இன்னமும் விரித்துரைக்க வேண்டியிருந்தும் விரிவுக்கு அஞ்சி நிற்கின்றோம்.
English Translation
Though we may not have discovered what service the Lord intends for us, we must still keep our hears pointed towards him. We can only clear a forest and build a bound for making a lake, but who can make it rain?
