(2196)

(2196)

திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று

பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும்

கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்

தண்பள்ளி கொள்வான் றனக்கு.

 

பதவுரை

வெம் சமத்து

கொடிய (பாரத) யுத்தத்திலே

தேர்கடவி

(பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு

திரிந்ததும்

அலைந்ததும்,

அன்று

இராமனாகத் திருவவதரித்த காலத்து

மான்பின் போய்

மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று

சீதையை பிரிந்ததும்

பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,

கண்

தரையிலே

பள்ளி கொள்ள

படுத்துக் கொள்ளும்படி

புரிந்ததுவும்

ஆசைகொண்டதும்

(ஆகிய இச்செயல்கள் யாவும்)

நாகத்தின் தண்பள்ளிகொள்வான் தனக்கு

திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு

அழகியதே

ஏற்றவையோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளென்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதேசித்தார்; உண்டியே உடையே உகந்தோடித் திரியுமிம்மண்டலத்திலே இவருபதேசத்தை ஆதரிப்பார் ஆர்?  அவரவர் களிஷ்டப்படி தங்களுடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய, ‘ஐயோ! இப்பாவிகளுக்காக எம்பெருமான் கிருஷ்ணனாய்ப் பிறப்பதும் இராமனாய்ப் பிறப்பதுமாய்க்கொண்டு படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத் திரிகின்றார்களே!’ என வருந்தின ஆழ்வார், அப்பெருமான் ராமக்ருஷ்ணாவதாரங்களிலே அதிஸுகுமாரமான திருமேனியோடே பட்ட மிறுக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார்.

கண்ணபிரானாய்த் திருவவதரித்துப் பாரதப் போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விடுகிற அம்புகள் தன்மேலே படும்படி திருமேனிக்குக் கவசமும்  தரியாதே கிடந்து அர்ஜுநன் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு பட்டபாடுகளை முதலடியிலே பேசினர்.

இராமனாய்த் திருவவதரித்துப் பித்ருவாக்யபரபாலந வியாஜத்தாலே காட்டுக்கெழுந்தருளி மாயமான் பிரிக்கப் பிராட்டியைப் பிரிந்து பட்ட வருத்தங்களை இரண்டாமடியிற் பேசினர். ஆகிய இவ்வலைச்சல்கள்பட நேர்ந்த அவதாரங்கள் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணி கொள்வதற்காகச் செய்தவையாதலால் இவ்வலைச்சல்களும் ஸம்ஸாரிகளுக்காகப் பட்டவையென்று திருவுள்ளம் பற்றுதல் பொருந்தும்.  நாகத்தின் தண்பள்ளி கொள்வான் தனக்கு அழகியதே = இவ்வலைச்சல்கள் எங்கே? அவனுடைய ஸுகுமாரமான திருமேனி எங்கே? மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கவேண்டியவன் வெம்பரல்களைக் கடித்தாற்போலே, மெத்தென்ற சேஷசயனத்திலே திருக்கண்வளர்ந்தருள வேண்டியவன் இவ்வலைச்சல்கள் படத் தகுமோ என்றவாறு.

அழகியதேயென்றது விபரீத லக்ஷணையினால் மிகவும் தகாதவையாக இருந்தனவென்ற பொருளைத்தரும்.  “அழகியவே” என்றும் பாடமுண்டு; அழகிய = அன்சாரியை பெறாத பலவின்பால் முற்று.

மூன்றாமடியில், இடப்பொருளதான கண் என்னுஞ் சொல் இங்கு தரை யென்ற பொருளைத் தந்தது.

 

English Translation

The Lord who reclines on a cool serpent bed went about driving a chariot in war. He followed a deer and lost his Sita, and slept on the hard floor.  What an irony. though!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top