(2195)

(2195)

பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்

கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, – எண்டிசையும்

பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்

தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

 

பதவுரை

பேதைகாள்

அவிவேகிகளே!,

பண்டியை

வயிற்றை

பெரு பதி ஆக்கி

பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து

பழி பாவம் கொண்டு

தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு

இங்கு

இவ்வுலகில்

வாழ்வாரை

வாழ்கின்ற ஸம்ஸாரிகளை

கூறாதே

புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,

எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்

(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய

பேர்

திருநாமங்களை

ஓதி

இடைவிடாது சொல்லிக்கொண்டு

திரிந்து

திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து

தீர்த்தகரர் ஆமின்

(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறியார் பெரியாரென்னும் வாசியின்றி யாவராலும் எம்பெருமான் ஆச்ரயிக்கத் தக்கவனென்று கீழ்ப்பாசுரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதான பின்பு, ஸம்ஸாரிகளைக் ஸ்தோத்ரஞ்செய்துகொண்டு  அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறாமல் அப்பெருமானைப் பணிந்து அவனது திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லாமல் உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும்படி செய்யுங்கோளென்று நாட்டாரை விளித்து  உபதேசிக்கின்றாரிதில், எண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழிபாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத் துதிப்பவர் விவேகிகளல்லர், பேதையர்களேயாவர் என்பது விளங்கப் ‘பேதைகாள்!’ என விளக்கின்றனர்.

“பெரும்பகுதியை” என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமையுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.  பண்டியென்று வயிற்றுக்குப் பெயர்.  அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் தின்று தின்று ஏற்றச்சால்போலே வயிற்றை வைத்துக் கொண்டிருக்குமவர்களை நச்சிக் கவிபாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குந் தொழிலை விட்டுத்தொலையுங்கோளென்று முன்னடிகளாற் கூறினாராயிற்று.  “பண்டு இப்பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்து பண்டு – அநாதிகாலமாக, இப்பெரும்பதியை – இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி – வளர்த்துக்கொண்டு என்றுரைக்கவுமாம்.

பழிபாவங்கொண்டு – கவனிப்பு இல்லாமையினால் அபுத்திபூர்வமாகச் செய்ய நேரும் பாவங்கள் பழியென்றும், வேணுமென்றே செய்யுந் தீங்குகள் பாவமென்றும் கொள்க.  வயிற்றை நிரப்பவேண்டுவோர்க்கு இவையித்தனையும் செய்யவேண்டியவையாமன்றோ.  இங்கு வாழ்வாரை = இந்தப் பிரபஞ்ச சுகத்தையே வாழ்வாக நினைத்திருப்பவர்களை என்றபடி.  கூறாதேயென்னுமளவால் பரித்யஜிக்க வேண்டுமதைச்சொல்லிப் பின்னடிகளாலே பரிக்ரஹிக்க வேண்டுமதைப் போதிக்கின்றார்.  உலகளந்த பெருமானுடைய திருநாமங்களை யநுஸந்தித்துக் கொண்டு 1. “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று, மண்டினாருய்யலல்லால் மற்றையார்க் குய்யலாமே” என்றபடி திருப்பதிகள் தோறும் நடந்தால்; 2. “தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள், தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே” என்று குலசேகராழ்வாரும் 3. “நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்று பெரியாழ்வாரும் அருளிச்செய்தபடியே உலகமெல்லாம் பவித்திரமாய்விடும் என்றவாறு.  தீர்த்தகரர் – வடசொல்.

 

English Translation

Making the abode of food your temple, O Foolish people, you go about speaking words of sin and blame to please mortal men.  Instead wander reciting the names of the Lord whose four arms stretched into the eight Quarters and become holy men of the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top