(2194)

(2194)

தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்

படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு,அன் – றிடரடுக்க

ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்

பாழிதா னெய்திற்றுப் பண்டு.

 

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை

காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது

சூழ் கயம் புக்கு

(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து

படர் எடுதுத பை கமலம் கொண்டு

மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு

அன்று இடர் அடுக்க

அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக

அஞ்சி

(செவ்வியழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,

ஆழியான் பாதம்

(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ

தான்

அந்த கஜேந்திரம்

பண்டு

முற்காலத்தில்

வானவர் கோன்பாழி

தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை

எய்திற்று

அடைந்தது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “பருவஞ்செழுங்கதிரோ னொண்மலரோன் கண்ணுதலோனன்றே தொழுந் தகையார் நாளுந்தொடர்ந்து” என்றருளிச் செய்ததில் அப்படிப்பட்ட  உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால் எம்பெருமானை  ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை; பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்.

மஹாவிஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க, அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்ஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து , ‘யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபிக்க, அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில், ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாதகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று; முன்பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று  தவஞ்செய்து கொண்டிருந்த போது அவனது காலைப்பற்றியிழுத்து அனாதற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரிய முதலையாய்க் கிடந்த ஹூஹூவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக்கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல் கஜேந்திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால்  கருடாரூடனாய் அப்பொய்கைக் கரையிலே அரைகுலையத் தலைகுலைய விரைந்தெழுந்தருளித்தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்துயானையை அதன் வாயினின்று  விடுவித்து இறுதியில் அதற்கு முக்தியை அருளினன் என்ற வரலாறு உணர்க.

“தொடரெடுத்த” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதியியல்வைக் குறிப்பதாம்.  காலிலிட்ட விலங்கை முறித்துக் கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மை யானைச்சாதிக்கு இயற்கை யென்க.

எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு இன்னார் ஆவார், இன்னார் ஆகார் என்கிற நியதியில்லாமை இப்பாட்டால் வெளியிடப்பட்டதாயிற்று.

 

English Translation

The worshipful elephant in the yore entered the lotus take and trembled with fear, then raised his trunk with flowers and offered worship. Then and there, did he not reach the Lord’s abode?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top