(2151)

(2151)

சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,

சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,

நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.

 

பதவுரை

திருமாலை

பிராட்டியோடு கூடினபெருமானை

நல் இதழ் தாமத்தால்

அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும்

வேள்வியால்

யாகம் முதலிய ஸத்கரு மங்களாலும்

தந்திரத்தால்

(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும்

மந்திரத்தால்

(க்ரியாகலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும்

விழும் உடம்பு செல்லும் தனையும்

அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில்

தொழுமின்

தொழுங்கள்;

(இவற்றை செய்ய சக்தியில்லாவிட்டால்)

சொல்லும் தனையும்

(உங்களுக்குச்) சொல்லக்கூடிய சக்தியுள்ளவரையிலும்

நாமத்தால்

திருநாமங்களைக் கொண்டு

ஏத்துதிர் ஏல்

புகழ்ந்தீர்களாகில்

நன்று

அது மிகவும் நல்லது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனென்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து இப்படிப்பட்ட பெருமானை உலகத்திலுள்ளீ ரெல்லீரும் பணிந்து வாழுங்கோளென்று பரோபதேசத்தில் மூளுகிறாரிப்பாட்டில். “ விழுமுடம்பு செல்லுந்தனையும் நல்லிதழ்த்தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத் தொழுமின்; சொல்லுந்தனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அந்வயிப்பது. இந்த சரீரம் என்றைகாவ தொருநாள் சரிந்தே போகப்போகிறது;  “இதம் சரீரம் பரிணாம பேசலம் பதத்யவச்யம் சலதஸந்தி ஜர்ஜரம்” (முகுந்தமாலை) என்றபடியே தவறாமல் நசித்தே போகக் கடவதான இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புஷ்பங்களைக் கொண்டும் யாகம் முதலிய வைதிக கருமங்களைக்கொண்டும் மந்தர தந்த்ரங்களைக் கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்; சரீரத்தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால், வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போதுமானது- என்றாராயிற்று.

தாமம், தந்திரம், மந்திரம், நாமம் – வடசொற்கள்.

 

English Translation

Till speech remains, till the failing body works, -with fresh flower garlands, sacrifices, Tantras and Mantras, offer worship to the Lord Tirumal. If you can praise him with singing his names, that is well done, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top