(2151)
சொல்லுந் தனையும் தொழுமின் விழுமு டம்பு,
சொல்லுந் தனையும் திருமாலை, – நல்லிதழ்த்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று.
பதவுரை
|
திருமாலை |
– |
பிராட்டியோடு கூடினபெருமானை |
|
நல் இதழ் தாமத்தால் |
– |
அழகிய மலர்களைக் கொண்டு தொடுத்த மாலைகளாலும் |
|
வேள்வியால் |
– |
யாகம் முதலிய ஸத்கரு மங்களாலும் |
|
தந்திரத்தால் |
– |
(மந்த்ரமில்லாத) வெறும் க்ரியைகளாலும் |
|
மந்திரத்தால் |
– |
(க்ரியாகலாபமில்லாத) வெறும் மந்திரங்களாலும் |
|
விழும் உடம்பு செல்லும் தனையும் |
– |
அஸ்திரமான இந்த சரீரம் உள்ள வரையில் |
|
தொழுமின் |
– |
தொழுங்கள்; |
|
(இவற்றை செய்ய சக்தியில்லாவிட்டால்) |
||
|
சொல்லும் தனையும் |
– |
(உங்களுக்குச்) சொல்லக்கூடிய சக்தியுள்ளவரையிலும் |
|
நாமத்தால் |
– |
திருநாமங்களைக் கொண்டு |
|
ஏத்துதிர் ஏல் |
– |
புகழ்ந்தீர்களாகில் |
|
நன்று |
– |
அது மிகவும் நல்லது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் விசித்ரசக்தி வாய்ந்தவனென்பதைக் கீழ்ப்பாட்டில் தெரிவித்து இப்படிப்பட்ட பெருமானை உலகத்திலுள்ளீ ரெல்லீரும் பணிந்து வாழுங்கோளென்று பரோபதேசத்தில் மூளுகிறாரிப்பாட்டில். “ விழுமுடம்பு செல்லுந்தனையும் நல்லிதழ்த்தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் திருமாலைத் தொழுமின்; சொல்லுந்தனையும் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று” என்று அந்வயிப்பது. இந்த சரீரம் என்றைகாவ தொருநாள் சரிந்தே போகப்போகிறது; “இதம் சரீரம் பரிணாம பேசலம் பதத்யவச்யம் சலதஸந்தி ஜர்ஜரம்” (முகுந்தமாலை) என்றபடியே தவறாமல் நசித்தே போகக் கடவதான இவ்வுடல் உள்ளவரையில் சிறந்த புஷ்பங்களைக் கொண்டும் யாகம் முதலிய வைதிக கருமங்களைக்கொண்டும் மந்தர தந்த்ரங்களைக் கொண்டும் எம்பெருமானைப் பணியுங்கள்; சரீரத்தால் சிரமப்பட்டுச் செய்யக்கூடிய அக்காரியங்களில் கைவைப்பது கஷ்டமாயிருந்தால், வெறும் வாயினால் எவ்வளவு சொல்லக்கூடுமோ அவ்வளவு திருநாமங்களைச் சொல்லி ஏத்தினாலும் போதுமானது- என்றாராயிற்று.
தாமம், தந்திரம், மந்திரம், நாமம் – வடசொற்கள்.
English Translation
Till speech remains, till the failing body works, -with fresh flower garlands, sacrifices, Tantras and Mantras, offer worship to the Lord Tirumal. If you can praise him with singing his names, that is well done, O Heart!
