(2139)
தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,
எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,
அந்தரமொன் றில்லை அடை.
பதவுரை
|
நெஞ்சே |
– |
மனமே! |
|
மலர் கொண்டு |
– |
புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும் |
|
தூபம் |
– |
தூபத்தை |
|
கை ஏந்தி |
– |
கையிலே ஏந்திக் கொண்டும். |
|
தொழுது |
– |
(எம்பெருமானை ) வணங்கி |
|
எழுதும் |
– |
உஜ்ஜீவிப்போம்; |
|
எழு |
– |
நீ புறப்படு; |
|
வாழி |
– |
(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக: |
|
[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்] |
||
|
மந்திரங்கள் |
– |
பகவந் மந்த்ரங்களை |
|
பழுது இன்றி கற்பனவும் |
– |
முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும் |
|
மால் அடி கை தொழுவான் ஏ |
– |
ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்: |
|
[ஆனபின்பு] |
||
|
அந்தரம் ஒன்று இல்லை |
– |
(நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை; |
|
அடை |
– |
(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்கவழியில்லை; நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூபதீபபுஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று தம் திருவுள்ளத்தை த்வரைப்படுத்துகிறார்.
“மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும் அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க; இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு.
பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது; அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி. அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.
English Translation
Offering worship with freshly culled flowers, and incense, -O Heart of mine!, -arise, awake and succeed. All the Mantras learnt without a fault are for the worship of the adorable Lord. Do not tarry, attain him.
