(2128)
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,
சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய
மெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்.
பதவுரை
|
மதம் களிறு ஐந்தைனையும் |
– |
மதம்பிடித்த ஐந்து யானைகளை போன்ற பஞ்சேங்திரியங்களையும் |
|
வாரி சுருக்கி |
– |
ஜலம் போன்ற சப்தாதி விஷயங்களில் நின்றும் இழுத்துப்பிடித்து. |
|
சேரி திரியாமல் செம் நிறீஇ |
– |
கண்டவிடங்களிலும் திரியவொட்டாமல் செவ்வையாக நிலைநிறுத்தி |
|
கூரிய |
– |
மிகவும் ஸூக்ஷ்மமான |
|
மெய் ஞானத்தால் |
– |
உண்மையான பக்தி ரூபா பந்நஜ்ஞானத்தாலே |
|
உணர்வார் |
– |
(அவனை) உள்ளபடி உணர வல்லவர்கள் |
|
மேல் ஒரு நாள் |
– |
முன்பொரு காலத்திலே |
|
கை நாகம் காத்தான் |
– |
கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய |
|
கழல் |
– |
திருவடிகளை |
|
காண்பர் |
– |
கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் “ புண்புரிந்த வாகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம் போகத்தால் பூமியாள்வார்” என்றார்; எம்பெருமானது தாள்களைப்பணிதல் யார்க்குக் கைகூடும்? என்று கேள்வியுண்டாக, இந்திரியங்களை அடக்கி ஆள்பவர்களே எம்பெருமான் திருவடியைப் பணிதற்குப் பாங்குடையர் என்கிறாரிதில்.
இந்திரியங்களை அடக்கியாளுதல் மிகவும் அரிது என்பது தோன்ற, அவ்விந்திரியங்களை மதம்பிடித்த யானையாக உபசரித்துக் கூறுகின்றார். யானைகள் நீர்நிலையில் புகுந்தால் முதலை முதலிய ஜலஜந்துக்களால் துன்பம் நேரிடுவது ஸம்பாவிதமாதலால் அங்குப்போகாதபடி சுருக்கவேணும் யானையை; அப்படியே, பிரகிருதத்தில் நீர்நிலையாவது – விஷயாங்தரங்கள்; இந்திரியங்களாகிற மதயானைகள் சப்தாதி விஷயங்களினருகிற் சென்றால் துன்பம் நேரிடுவது திண்ணமாதலால் அவற்றில் நின்றும் சுருக்கவேணும் இவற்றை; இதுவே “ வாரிசுருக்கி” என்பதன் கருத்து. வாரி என்னும் வடசொல்லுக்கு ‘நீர்’ என்று பொருள்; நீரானது எப்படி விடாயைப் பிறப்பிக்குமோ அப்படி விஷயங்களும் விடாயைப்பிறப்பிக்கின்றன என்பதுபற்றி விஷயங்களை ‘வாரி’ என்ற சொல்லாற் குறித்தன ரென்க. “வாரி சுருக்கி” என்றதே போதுமாயிருக்க, மறுபடியும் “ சேரிதிரியாமல் செந்நிறீஇ” என்றது- பலாத்கரித்தாகிலும் இந்திரிய மதயானைகளை விஷய வீதிகளில் நின்றும் மடக்கியடக்கி ஆளவேண்டுவது அவசியம் என்பதற்காக வென்க. நிறீஇ- சொல்லிசையளபெடை.
ஆகவிப்படி இந்திரியங்களை வென்று பாரமார்த்திகமான பக்தி ரூபாபந்நஜ்ஞாநத்தாலே அவனை உள்ளபடி உணரக் கூடியவர்கள் யாரோ, அவர்கள் அவனுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறுவர்கள் – என்றாராயிற்று. “ கைந்நாகங்காத்தான் கழல்” என்ற சொல்லாற்றலால் ஸ்ரீகஜேந்திரவாழ்வான் போல்வார் இப்படிப்பட்ட அதிகாரிகள் என்பது ஸூசிக்கப்பட்டதாம்.
English Translation
The celestial elephant in distress was saved by the Lord in the yore. Those who fame their five rutted-elephant-like senses and fix their heart in steadfast contemplation will surely see the Lord’s feet.
