(2101)

(2101)

பெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,

செற்றார் படிகடந்த செங்கண்மால், – நற்றா

மரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,

நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று.

 

பதவுரை

பெற்றார்

மாதா பிதாக்களான வஸுதேவ தேவகிகளுடைய

தளை கழல

கால் விலங்கு அற்றுப் போம்படியாக

பேர்ந்து

(திருப்பாற்கடலில் நின்றும்) பெயர்ந்து (க்ருஷ்ணனாக வந்து பிறந்தவனும்,

ஓர் குறள் உரு ஆய்

விலக்ஷண வாமந வேஷத்தையுடையனாய்).

செற்றார் படி

ஆச்ரித விரோதியான மாவலி தன்னதென்று நினைத்திருந்த பூமியை

கடந்த

அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட

செம் கண் மால்

புண்டரீகாக்ஷனுடைய

நல் தாமரை மலர் சே அடியை

அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை

வானவர்

இந்திராதி தேவர்கள்

கைகூப்பி

அஞ்ஜலி  செய்துகொண்டு

நிரை மலர் கொண்டு நின்று

தொடைவாய்த்திருந்துள்ள பூக்களை ஸமர்ப்பித்துக்கொண்டு பணிந்து

ஏத்துவர்

துதிப்பர்கள்;

ஆல்

ஐயோ! (அப்போது அவர்களைப்போலே தாமும் துதிக்கப்பெறவில்லையே யென்கிற துக்கத்தைச் காட்டுகிறது.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [பெற்றார் தளைகழல.] கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை ஏத்தியிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ; அப்பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவுபடிகிறார்.

“பெற்றார் தளைகழலப் பேர்ந்தோர்குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு கிருஷ்ணனாய்ப் பிறந்தபின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருதவேண்டா; ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி. அன்றி, “பெற்றார் தளைகழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்; அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி; அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்; அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க.

செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்; ஆச்ரிதவிரோதிகளான மஹாபலிபோல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று.

ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள். தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தியிறைஞ்சப்பெற்றார்களே! என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

 

English Translation

The wealthy senkanmal, The Lord of adorable red eyes, released his parents from their shackles, escaped the prison haunt of his detractors, and grew up as a child in another house, His lotus-like feet are worshipped with flowers by the good celestials, alas!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top