(1693)
முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே.
பதவுரை
|
முரியும் |
– |
கிளர்ந்து அலைகின்ற |
|
வெண் திரை |
– |
வெளுத்த அலைகளையுடைய |
|
முதுகயம் |
– |
ஸமுத்ரமானது |
|
தீப்பட |
– |
தீக்கொளுவியெரியும்படி |
|
முழங்கு அழல் எரி அம்பின் |
– |
ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய |
|
வரி கொள் வெம் சிலை |
– |
அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை |
|
வளைவித்த |
– |
வளையச் செய்த |
|
மைந்தனும் |
– |
மஹாவீரனான இராமபிரானும் |
|
வந்திலன் |
– |
வரவில்லை; |
|
என் செய்கேன் |
– |
என்ன பண்ணுவேன்? ; |
|
எரியும் |
– |
பிரகாசித்துக்கொண்டிருந்த |
|
வெம் கதிர் |
– |
ஸூர்யனும் |
|
துயின்றது |
– |
அஸ்தமித்தான்; |
|
பாவியேன் |
– |
பாவியான என்னுடைய |
|
இணை நெடுங்கண் துயிலா |
– |
பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை; |
|
ஊழியின் |
– |
கல்ப காலத்திற்காட்டிலும்; |
|
பெரியன |
– |
பெரியவையாயுள்ள |
|
கரிய நாழிகை |
– |
இரவு நாழிகைகள் |
|
கழியும் ஆறு அறியேன் |
– |
எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸூர்யனும் அஸ்தமித்து விட்டான்; இரவிலே உறக்கம் வரவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாவியேனுடைய கண்கள் உறங்குகின்றில; 1.“நீளிரவும், ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” என்னுமாபோலே பிரளயராத்ரியினும் நெடுகிச் செல்கின்ற இவ்விராப்பொழுது எங்ஙனங் கழியப்போகின்றதோ அறிகின்றிலேன் என்கிறார் பின்னடிகளில்.
கரிய நாழிகை = இராப்பொழுதானது இருண்டு கறுத்திருப்பதனால் நாழிகையிலும் அக்கருமை ஏற்றிக் கூறப்பட்டது. கரிய நாழிகை – கொடிதான நாழிகை என்னவுமாம்.
English Translation
The white frothing ocean is on fire, the Prince who shot fire arrows from his beautiful bow has not come, alas! What shall I do? The bright sun has gone to sleep. My beautiful large eyes do not go to sleep. I know not how to pass the longer-than-an-era night.
