(1483)
மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.
பதவுரை
| மின் நேர் |
– |
மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை |
| மாற்றி இருந்து |
– |
தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு |
| நீர் |
– |
(கிழவரான) நீங்கள் |
| இருமி |
– |
இருமிக்கொண்டு |
| எம்பால் வந்தது என் என்று |
– |
‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று |
| இகழாத முன் |
– |
திரஸ்கரிப்பதற்கு முன்னே |
| தொல் நீர் இலங்கை |
– |
கடல்சூழ்ந்த லங்காபுரி |
| மலங்க |
– |
வியாகுலப்படும்படி |
| விலங்கு |
– |
(அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு |
| எரி ஊட்டீனான் |
– |
தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய் |
| நல் நீர் |
– |
நல்ல தீர்த்தங்களையுடைத்தான |
| நறையூர் |
– |
திருநறையூரை |
|
நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மூன்றாமடியின் பிற்பகுதியை ‘விலங்கெரி’ என்று மெடுக்கலாம், ‘இலங்கெரி’ யென்று மெடுக்கலாம். முந்தினதில், விலங்காலே எரியூட்டினான் – ஹநுமானாகிற சாகாமிருகத்தைக் கொண்டு தீக்கொளுவித்தவன் என்றதாம். பிந்தினதில், இலங்கு – ஜ்வலிக்கின்ற என்றபடி. இதற்கு முன்பு அக்கினியானவன் இலங்கையினுட் புகுவதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தான்; சோறு வேவப்பண்ணுகை முதலிய முக்கிய காரியங்களுக்கு வேண்டுமளவு புகுந்திருந்தான்; இராமபிரானால் நன்றாக ஜ்வலித்துக்கொண்டு எங்கும் புகுந்து உண்டுகளித்தானென்க.
English Translation
O Heart! Before lightning-thin-waisted dames change their affections and ask, “why did you come coughing so far?” and chatise, let us go to the Lord who burnt the ocean-girdled city of Lanka, -He resides in Naraiyur, -and offer worship.
