(1578)
கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை,
மண்சேர முலையுண்ட மாமதலாய் வானவர்தம் கோவே. என்று,
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை
யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமேலாரே.
பதவுரை
|
கண் சோர |
– |
கண்கள் சுழலமிட்டுத் தளரும்படியாகவும் |
|
வெம் குருதி |
– |
வெவ்விய ரத்தமானது |
|
வந்து இழிய |
– |
வெள்ளமிட்டுப் பெருகவுமாய் |
|
மண் சேர |
– |
மாண்டுபோம்படி |
|
வெம் தழல் போல் கூந்தலாளை |
– |
நெருப்புப்போல் செம்பட்ட மயிரையுடையளான பூதனையினுடைய |
|
முலை |
– |
(விஷங்கலந்த)முலையை |
|
உண்ட |
– |
உறிஞ்சியுண்ட |
|
மா மதலாய் |
– |
இளம்பிள்ளையே! |
|
வானவர் தம் கோவே |
– |
தேவாதி தேவனே! |
|
என்று |
– |
என்று இவ்வண்ணமாகத் துதிசெய்து |
|
விண் சேரும் இள திங்கள் |
– |
ஆகாயத்தில் திரிகின்ற பாலசந்திரனுடைய |
|
அகடு |
– |
கீழ்வயிற்றை |
|
உரிஞ்சு |
– |
அளாவுகின்ற |
|
மணி மாடம் |
– |
திருமாளிகைகள் |
|
மல்கு |
– |
நிறைந்திருக்கப்பெற்ற |
|
செல்வம் |
– |
வளம் மிக்க |
|
தண் |
– |
குளிர்ந்த |
|
சேறை |
– |
திருச்சேறையில் எழுந்தருளியிருக்கின்ற |
|
எம்பெருமான் |
– |
ஸாரநாதப் பெருமாளுடைய |
|
தாள் |
– |
திருவடிகளை |
|
தொழுவார் காண்மின் |
– |
வணங்குமவர்கள் தாம் |
|
என் தலை மேலார் |
– |
என் தலைமேல் வீற்றிருக்க வுரியார். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற மாட மாளிகைகள் நிறைந்த திருச் சேறையி லெழுந்தருளி யிருக்கும் எம்பெருமானை நோக்கி ‘பூதனையை முடித்த சிறுகுழந்தாய்!’ என்றும் ‘நித்யஸூரிகட்குத் தலைவனே!’ என்றும் சொல்லி அவனுடைய பரத்வஸௌலப்யங்களைப் போற்றி உருகுகின்ற பாகவதர்கள் எவரோ, அவர்கள் என்தலைமேல் வீற்றிருக்கவுரியார் என்கிறார்.
மாமதலாய்! = பிள்ளைத்தனத்தில் குறையற்றவனே! என்றபடி. ‘மதலை’ என்பதன் விளி ‘மதலாய்’ என்றாம்.
இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ப்ரவேசத்தில் – “பிள்ளை யழகிய மணவாளரரையர் கரையே போகாநிற்க, ‘உள்ளே மாமதலைப் பிரானைத் திருவடி தொழுது போனாலோ?’ என்ன; ‘ஆர்தான் திருமங்கையாழ்வாருடைய பசைந்த 1. வளையத்திலே கால்வைக்கவல்லார்?’ என்றருளிச் செய்தார்” என்றுள்ள ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத் தக்கவை. இவ்வாக்கியத்தின் கருத்து யாதெனில்; பிள்ளையழகிய மணவாளரரையர் என்பவர் காரியவிசேஷமாய்த் திருச்சேறைவழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுமட் புகாமல் வயல்வழியாய் ஓரிடத்திற் கெழுந்தருள நேர்ந்தவளவில் திருச்சேறைப்பதியினுட் புகாமல் வயல்வழியே போய்க்கொண்டிருந்தார்; அங்கு அவரைக்கண்ட வொருவர் ‘வயல்வழியே போவானேன்? திருப்பதியினுள்ளே புகுந்து ஸாரநாதப்பெருமாளை ஸேவித்துப் போகாலாகாதோ?’ என்று கேட்க; அதற்கு அரையர் சமத்காரமாக ஒரு உத்தரமுரைத்தார்; (யாதெனில்;) இத்திருப்பதி விஷயமாகப் பாசுரமுரைத்த திருமங்கையாழ்வார் “தண்சேறையெம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே” என்றார்; அப்பாசுரத்தின்படி, திருச்சோறை யெம்பெருமானை ஸேவிப்பவர்கள் ஆழ்வாருடைய திருமுடியின்மே லேறவேண்டியதாகுமே; அது நமக்குப் பெருத்த அபசாரமாகுமே; அதற்கு அஞ்சியே உள்ளுப்புகாமல் கரையோரமே போய்விடுகிறேன் என்றாராம். இது ரஸோக்தியேயன்றி வேறில்லை, திருச்சேறை யெம்பெருமான ஸேவிப்பவர்கள் பக்கலில் ஆழ்வார் வஹித்திருக்கும் ப்ரதிபத்தியை விளங்கக்காட்டினபடி.
English Translation
The Lord who sucked the hot-eyed ogress Putana’s breast and took her life, the Lord of celestials, resides amid wealthy jewel-mansions that touch and play with the tender moon in Tan-cherai. Those who worship him are my masters, see!
