(1322)
அரக்க ராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்க ரசனென் றும்கோல வில்லி யென்றும், மாமதியை
நெருக்கு மாட நீடுநாங்கை நின்ம லன்தா னென்றென்றோதி,
பரக்க ழிந்தா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே!
பதவுரை
|
என் மடந்தை |
– |
என் பெண்ணானவள் |
|
அன்று அரக்கர் ஆவி மாள |
– |
முன்பொரு காலத்தில் ராக்ஷஸர்களினுடைய பிராணன் முடியும்படியாக |
|
ஆழ் படல் சூழ் இலங்கை செற்ற |
– |
ஆழ்கடலால் கூழப்பட்ட லங்காபுரியைப் பொடிபடுத்தின |
|
குரங்கு |
– |
வாநர வீரர்களுக்கு |
|
அரசன் என்றும் |
– |
ஸ்வாமியாவன் என்றும், |
|
கோலம் வில்லி என்றும் |
– |
அழகிய வில்லையுடையவன் என்றும், |
|
மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை, |
– |
அழகிய சந்திரனை திரியவொட்டாமல் தடைசெய்கிற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற |
|
நின் மலன் என்று என்று ஓதி |
– |
பரிசுத்தஸ்வபாவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு |
|
பரக்கழிந்தான் |
– |
பெரும்பழிக்கு இடமானவளாய் |
|
பார்த்தன் பள்ளிபாடுவாள்– |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பரக்கழித்தாள் – ‘பரக்கு அழிந்தாள்’ என்று பிரித்து, பரக்கு என்பதற்கு அடக்கமென்று பொருள் கூறி, ‘அடக்கங்கெட்டாள்’ என்றுரைப்பர் சிலர். அதுநிற்க : கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்து வாலிவதைப் படலத்தில் -(79) “அரக்கரோ ரழிவுசெய்து கழிவரேலதற்கு வேறோர், குரக்கினத்தரசைக் கொல்ல மனநெறி கூறிற்றுண்டோ? இரக்கமெங்குகுத்தாயென்பால் எப்பிழை கொண்டாயப்பா, பரக்கழி யிதுநீ பூண்டாற் புகழையார் பரிக்கற்பாலார்?” என்ற செய்யுளில் ‘பரக்கழி’ என்றும் பதத்தின் பிரயோகம் காண்கிறது; அவ்விடத்துரையில் “பரக்கழி – பெருநிந்தை; பெருந்தீங்குமாம்” என்றிருக்கக் காண்கிறோம். ஆகவே இங்கே பரக்கழிந்தாள் என்பதற்கு – ‘பெரும்பழி விளையப்பெற்றாள்’ எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும். பெரிய வாச்சான்பிள்ளையும் பலவிடங்களில் இங்ஙனமேவி யாக்கியான மருளிச்செய்யக் காண்கிறோம். நாச்சியார் திருமொழியில் (12-3) “கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப்பெற்ற” என்றவிடத்தில், ‘பரக்கழிக்கை – பழிவிளைக்கை’ என்பது வியாக்கியானம்.
English Translation
“Leader of the monkey army! Wielding mighty bow and arrow, Marching O’er a bridge on ocean you destroyed the Rakshasa clan!” “O My faultless Lord in Nangai, -mansions rise and stop the Moon!” Losing all her grace and charm my daughter sings of Parttan-Palli, O!
