(1199)
பிணியவிழு நறுநீல மலர்க்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென் பயலைநோ யுரையாயே.
பதவுரை
|
பிணி அவிழும் நறு நீலமலர்கிழிய |
– |
கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க நீலோற்பல மலர்கள் கிழியும்படியாக |
|
பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும் |
– |
பேடையுடனே அழகிய அந்த மலர்களிலிருந்துகொண்டு மதுபானம் பண்ணுகிற |
|
அறுகால சிறு வண்டே |
– |
ஆறு கால்களையுடைய சிறியவண்டே! |
|
மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல் |
– |
அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய |
|
ஆலி |
– |
திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற |
|
மணவாளன் பணி |
– |
மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை |
|
அறியேன் |
– |
இன்னதென்று நானறிகின்றேனில்லை; |
|
என் பயலே நோய் உரையாய் |
– |
என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-இப்பாசுரமும் வண்டைத் தூதுவிடுவதாம், மலரத் தொடங்கின நீலமலரிலே குடும்பத் தோடு சென்றழிந்த மதுபானம் பண்ணாநிற்கிற வண்டே! வயலாகி மணவாளன் என்னோடு கலந்து பிரிந்துபோனது முதலாக அவன் நினைத்திருப்பது இன்னதென்று தெரியவில்லை; என்னை மறங்திட்டானோ; அன்றி என்னையே நினைத்துக்கொண்டு கிடக்கிறனோ;இங்கே வருதாக இருக்கிறனோ; என்னை அங்கு வரவழைத்துக் கொள்வதாக இருக்கிறனோ-அன்றி நானொருத்தி இருக்கிறேனென்பதைக் கணிசியாமிலே கிடக்கிறானோ; இப்போது அவன் செய்வதும் செய்ய நினைத்திருப்பது மொன்றும் எனக்குத் தெரியவில்லை; என்னைப் பிரிந்து அவன் வருத்தமற்றிருப்பது போலவே நானும் அவனைப் பிரிந்து வருத்தமற்றிருக்கிறேனாக அப்பெருமான் நினைத்து ஆறியிருக்கவுங்கூடும்; நான் இங்ஙனே நோவுபடுகிறேனென்பது தெரிந்தால் இங்குவந்து சேரத் தாமஸிக்கமாட்டானாதலால், நீ அங்குச் சென்று நான் படுகிறநோயைத் தெரிவிக்க வேணுமென்கிறாள்.
பயலைநோய் -மேனிநிறத்தை வேறுபடுத்திக்கிடக்கிற நோய். பயலை-பசலே; நிற வேறுபாடு.
English Translation
Six-legged O Bumble-bees with your spouses enjoying drink, In the lilies blossoming blue, almost shaking off the petals! Go to the groom of Vayalali, living amid lotus thickets. I do not know what he intends, tell him of my paling disease.
