(1183)
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் படர்வனத்துக் கவந்தனொடும் படையார்த்திண்கை,
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.
பதவுரை
|
பைங் கண் விறல் செம் முகம் வாலி மாள |
– |
பசுமை தங்கிய கண்களையும் மிடுக்கையும் (கோபத்தாற்) சிவந்த முகத்தையுமுடைய வாலியென்னும் வாநர ராஜன் முடியும்படியாகவும். |
|
படர் வனத்து கவந்தனொடும் திண் படை ஆர்கை வெம் கண் விறல் வீராதன் உக |
– |
பரந்த காட்டிலுள்ள கபந்தனென் பவனும் திடமான ஆயுதங்கள் நிறைந்த கைகளையும் உக்ரமான கண்களையும் வலிமையையுமுடைய விராதனெ ன்பவனும் முடியும்படியாகவும் |
|
வில் குனிந்த |
– |
வில்லை வனைத்து (அம்புகளைப் பிரயோகித்த) |
|
விண்ணவர் கோன் |
– |
தேவாதி தேவனுடைய |
|
தாள் அணைவீர் |
– |
திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;- |
|
வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும் |
– |
மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின் மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற |
|
துடி இடையார் |
– |
உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது |
|
கமலம் முகம் சோதி தன்னால் |
– |
தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே |
|
திங்கள் முகம் பனி படைக்கும் |
– |
சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற |
|
அழகு ஆர்காழி ………. சேர்மின்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (வெற்புப் போலு மித்யாதி.) – சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடாநிற்கையில் அவர்களுடைய முகச் சோதியைப் பார்த்துச் சந்திரன் “ இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெள்கி வருந்துகின்றானென்ற விதனால் – இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன வென்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம்.
துங்கம் – வடசொல், உந்நதமானது, ஆயம் – தோழி, தோழமை, பனி – அச்சம், துக்கம், நடுக்கம்.
English Translation
Green eyed and red faced Vali was killed; deep in-the-forest-dwelling Kabanda too fell. One eyed demon Viradha too fell to the bow of our Lord and master who rules the celestials. Mountain-like mansions in Kali rise high, thin waisted girls in the balconies call, putting to shame the face of the full moon, dazzle in Seerama Vinnagar, O People, go to!
