(1095)

(1095)

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,

தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,

என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

 

பதவுரை

பெண் ஆகி

 

மோஹினி யுருவமெடுத்து

இன் அமுதம் வஞ்சித்தானை

இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும்

அன்று

முன்பொரு காலத்தில்

பிறை எயிறு

சந்திரனை யொத்த பற்களையுடைய

அடல் அரிஆய்

பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய்

பெருகினானை,

வளர்ந்தவனும்,

தண் ஆர்ந்த வார் புனல் சூழ்

குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட

மெய்யம் என்னும்

திருமெய்யமென்கிற

தடவரைமேல்

பெரிய திருமலையின்மீது

பணங்கள் மேவி கிடந்தானை

(திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும்

எண்ணானை

(யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும்

எண் இறந்த புகழினானை

கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும்

இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை

மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை

கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

எண்ணானை என்பதற்கு – எண்ணுகிறவன் என்றும், எண்ணப்படுகிறவன் என்றும், எண்ணாதவன் என்றும் மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்;- எண்ணுகிறவன் என்னும் பொருளில், நம்போன்ற ஸம்ஸாரிகளைக் காத்தருளும் வகையை எண்ணிக்கொண்டிருப்பவன் என்றதாகிறது; எண்ணப்படுகிறவன் என்னும் பொருளில், “நலமந்தமில்லதோர் நாட்டிலே நித்யஸூரிகள் பணியுமாறு இருக்கவேண்டிய பெருமான்; இப்படி ஸம்ஸாரிகளின் நடுவே வந்து கிடப்பதே!, இஃது என்ன நீர்மை!” என்று பக்தர்களால் எண்ணப்படுமவன் என்றதாகிறது;  எண்ணாதவன் என்னும் பொருளில், நமது குற்றங் குறைகளை ஒரு பொருளாக இட்டெண்ணாதவன் என்றதாகிறது.

 

English Translation

He came disguised as a female and denied ambrosia to the Asuras. He came as a crescent-teeth feline. He is the Lord reclining on a hooded serpent amid cool waters in Meyyam. He is the Lord of countless virtues with radiant lotus like eyes. To my heart’s content, amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top