(1093)

(1093)

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே

படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற

இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்

கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

 

பதவுரை

தடகடலுள்

விசாலமான திருப்பாற் கடலிலே

பணங்கள் மேவி

(திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி

கிடந்தானை

பள்ளி கொள்பவனும்,

கிளர் பொறிய

கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய

மறி

(மாரிசனென்னும்) மாயாமிருகம்

திரிய

(எதிரே வந்து) ஸஞ்சரீக்க

அதனின் பின்னே படர்ந்தானை

அதன் பின்னால் தொடர்ந்து சென்றவனும்

படு மதத்த களிற்றின்

ஒழுகுகின்ற மதநீரையுடைய (குவலயாபீடமென்னும்)

கொம்பு பறித்தானை

தந்தங்களை முறித்து அவ்யானையை முடித்தவனும்

வளை மருப்பின் ஏனம் ஆகி

வளைந்த கோரப்பற்களையுடைய வராஹ ரூபியாகி

பார் இடத்தை

விசாலமான பூமியை

எயிறு கீற இடந்தானை

பற்களாலே கொத்தி (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்தவனும்

இரு நிலனும்

விசாலமான இந்நிலவுலகும்

பெரு விசும்பும்

பெரிய மேலுலகங்களும்

எய்தா வண்ணம்

திருவடிகளுக்குப் போராதென்னும்படி (மிக வளர்ந்து)

கடந்தானை

உலகளந்தவனுமான

எம்மானை

எம்பெருமானை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கிளர்பொறிய மறி = ‘மறி’  என்று மான்குட்டிக்குப் பெயர். (பிணை என்று பெண்மானுக்குப் பெயர்; “மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை” என்ற திருவாய்மொழியுங் காண்க.) மாரிசன் விசித்திரமான புள்ளிகளையுடைய மானாக வந்தமைபற்றிக் “கிளர் பொறிய” எனப்பட்டது.  அதனின் பின்னே “படர்ந்தானை”என்றதில், மாரீசனைக் கொன்றொழித்த்தும் விவக்ஷிதம்.

 

English Translation

He reclines in the deep ocean, on a hooded serpent. He went after motely calves; He plucked the rut-elephant’s tusk. He came as a boar with crescent like tusks, and lifted the Earth on it. He grew beyond the sky and strode the Earth. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top