(1093)
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக் கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
தடகடலுள் |
– |
விசாலமான திருப்பாற் கடலிலே |
|
பணங்கள் மேவி |
– |
(திருவனந்தாழ்வானது) படங்களின் கீழே பொருந்தி |
|
கிடந்தானை |
– |
பள்ளி கொள்பவனும், |
|
கிளர் பொறிய |
– |
கிளர்ந்த பலவகைப் புள்ளிகளையுடைய |
|
மறி |
– |
(மாரிசனென்னும்) மாயாமிருகம் |
|
திரிய |
– |
(எதிரே வந்து) ஸஞ்சரீக்க |
|
அதனின் பின்னே படர்ந்தானை |
– |
அதன் பின்னால் தொடர்ந்து சென்றவனும் |
|
படு மதத்த களிற்றின் |
– |
ஒழுகுகின்ற மதநீரையுடைய (குவலயாபீடமென்னும்) |
|
கொம்பு பறித்தானை |
– |
தந்தங்களை முறித்து அவ்யானையை முடித்தவனும் |
|
வளை மருப்பின் ஏனம் ஆகி |
– |
வளைந்த கோரப்பற்களையுடைய வராஹ ரூபியாகி |
|
பார் இடத்தை |
– |
விசாலமான பூமியை |
|
எயிறு கீற இடந்தானை |
– |
பற்களாலே கொத்தி (அண்டபித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித்தெடுத்தவனும் |
|
இரு நிலனும் |
– |
விசாலமான இந்நிலவுலகும் |
|
பெரு விசும்பும் |
– |
பெரிய மேலுலகங்களும் |
|
எய்தா வண்ணம் |
– |
திருவடிகளுக்குப் போராதென்னும்படி (மிக வளர்ந்து) |
|
கடந்தானை |
– |
உலகளந்தவனுமான |
|
எம்மானை |
– |
எம்பெருமானை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
கிளர்பொறிய மறி = ‘மறி’ என்று மான்குட்டிக்குப் பெயர். (பிணை என்று பெண்மானுக்குப் பெயர்; “மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை” என்ற திருவாய்மொழியுங் காண்க.) மாரிசன் விசித்திரமான புள்ளிகளையுடைய மானாக வந்தமைபற்றிக் “கிளர் பொறிய” எனப்பட்டது. அதனின் பின்னே “படர்ந்தானை”என்றதில், மாரீசனைக் கொன்றொழித்த்தும் விவக்ஷிதம்.
English Translation
He reclines in the deep ocean, on a hooded serpent. He went after motely calves; He plucked the rut-elephant’s tusk. He came as a boar with crescent like tusks, and lifted the Earth on it. He grew beyond the sky and strode the Earth. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.
