(1080)

(1080)

அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில்,

புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில்,

பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்

நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

 

பதவுரை

அணி ஆர் உருவில்

அழகுபொருந்திய திருமேனியிலே

அடல் ஆழியினால்

தீக்ஷ்ணமான திருவாழியோடு கூட

அலம்

கலப்பையையும்

மன்னும் அடல் சுரி சங்கம்

(எதிரிகட்கு) நித்யபயங்கரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்

எடுத்து

தரித்துக் கொண்டிருப்பவனாயும்

முன்

முன்னொருகால்,

புலம் மன்னுவடம் புனை கொங்கையினாள்

மநோஹரமான முத்து வடங்களணிந்த முலையை யுடையளான பூமிப் பிராட்டியினுடைய

பொறை

பாரமானது

தீர

தொலையும்படி

ஆள் அடு வாள் அமரில்

ஆண்களை யெல்லாம் முடிக்கிற மஹத்தான யுத்தத்திலே

பல மன்னர் பட

பல அரசர்கள் நசிக்கும்படி (செய்தவனாயும்)

பகலோன் மறைய

ஸூர்யன் மறையும்படியாக

சுடர் ஆழியினை பணி கொண்டு

ஒளிமிக்க திருவாழியைக் காரியங் கொண்டவனாயும்

அணிசேர் நிலம் மன்னனும் ஆய்

அழகிய இந்நிலத்திற்கு நாயகனாயிருந்துகொண்டு

உலகு ஆண்டவனுக்கு

உலகங்களை ரக்ஷித்தவனாயுமிருக்கிற பெருமானுக்கு

இடம்

இருப்பிடம்

மா மலை ஆவது நீர்மலையே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பலராமனாகத் திருவவதரித்தபோது கலப்பையை ஆயுதமாகக் கொண்டருளினனென்க. ‘ஹலாயுதன்’ என்றிறே பலராமனது திரு நாமம். கலப்பையென்னும் பொருள்தான் ஹலம் என்ற வடசொல் இங்கு அலமெனத் திரிந்தது.

புலமன்னு வடம்புனை கொங்கையினாள் = திருமடந்தைபோலே மண்மடந்தையும் எம்பெருமானுக்குத் திவய்மஹிஷியாதலால் இங்ஙனே சிறப்பித்து வருணிக்கப்பட்டாள்.

புலம்மன்னுவடம் = கண்ணும் மனமுமாகிற இந்திரியங்கள் வேறு பொருள்களிற் செல்லாது தன்னிடத்திலேயே பொருந்தியிருக்கப் பெற்ற முத்து வடம்; எனவே, மநோஹரமான முத்துவட மென்றதாயிற்று.  பாரதயுத்தத்தில் எண்ணிறந்த ஆண்பிள்ளைகள் முடிந்தமை பற்றி ஆளடுவாளமர் எனப்பட்டது.

 

English Translation

On his beautiful frame he bears a sharp discus, a plough, and a terrible coiled conch. Then is the yore, he came to rid the jeweled Dame Earth of her burden. With his radiant discus he shaded the sun and waged a war in which many kings were killed. As a crowned king he ruled the Earth for many ages. Tirunirmalai His great hill abode.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top