(1075)

(1075)

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம்,

ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி,

பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப் பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,

தெள்ளிய சிங்க மாகிய தேவைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

 

பதவுரை

பள்ளியில் ஓதி வந்த

பள்ளிக்கூடத்தில் வாசித்து விட்டு வீட்டுக்கு வந்த

தன் சிறுவன் வாயில்

தனது மகனான ப்ரஹ்லாதனுடைய வாயில்

ஓர் ஆயிரம் நாமம்

விலக்ஷணமான ஸஹஸ்ர நாமங்கள்

ஒள்ளிய ஆகி போத

அழகாக உச்சரிக்கப்பட்டு வர

ஆங்கு

அக்காலத்திலே

அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி

அதை எள்ளளவும் பொறுக்கமாட்டாதவனாய் (இரணியன்)

பிள்ளையை சீறி வெகுண்டு

அந்த ப்ரஹ்லாதன்மீது மிகவும் கோபித்து

தூண் புடைப்ப

தூணைத் தட்டினபோது

பிறை எயிறு அனல் விழி பேழ் வாய்

பிறைபோன்ற பற்களையும் நெருப்புப்பொறி கிளர்கின்ற கண்களையும் பெரிய வாயையுமுடைய

தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை

தெளிசிங்கப் பெருமாளாகத் திருவவதரித்த தேவனை

திருவல்லிக்கேணி கண்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் தெள்ளியசிங்கம் என்று ஆழ்வாரருளிச்செய்தது கொண்டே திருவல்லிக்கேணியி லெழுந்தருளியுள்ள அழகிய சிங்கப்பெருமாளுக்குத் தெளிசிங்கப்பெருமாள் என்று திருநாமம் வழங்கலாயிற்று; ‘துள சிங்கப்பெருமாள்’ என்று பலரும் வழங்குவது பிழையென றுணர்க.

சீறிவெகுண்டு = ஒரு பொருட்பன் மொழி; மிகவும் கோபங்கொண்டு என்றபடியாம்.

 

English Translation

Hearing his son, – who returned from school, – recite the chant of thousand names beautifully, the Asura Hiranya lost his temper, and tortured the child, then kicked a pillar, when Lo! With fiery eyes and gaping mouth showing crescent-like teeth, a terrible man-lion sprang out and killed the Asura. I have seen him in Tiruvallikkeni.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top