(1047)
வில்லார்மலி வேங்கட மாமலைமேய *
மல்லார் திரடோள் மணிவண்ண னம்மானை *
கல்லார் திரடோள் கலியன் சொன்னமாலை *
வல்லாரவர் வானவ ராகுவர்தாமே.
பதவுரை
வில்லார் மலி | – | வேடர்கள் நிறைந்திருக்கப்பெற்ற |
வேங்கடம் மாமலை | – | திருவேங்கடமென்னும் சிறந்த மலையிலே |
மேய | – | எழுந்தருளியிருப்பவனும் |
மல் ஆர் திரள் தோள் | – | மிடுக்குமிக்குத் திரண்ட திருத்தோள்களை யுடையவனும் |
மணிவண்ணன் | – | நீலமணி போன்ற திருநிறத்தையுடையவனுமான |
அம்மானை | – | எம்பெருமானைக் குறித்து, |
கல் ஆர் திரள் தோள் | – | மலைபோன்ற திரண்ட தோள்களையுடையரான |
கலியன் | – | திருமங்கைமன்னன் |
சொன்ன | – | அருளிச்செய்த |
மாலை | – | இச்சொல்மாலையை |
வல்லாரவர் தாம் | – | ஓதவல்லவர்கள் |
வானவர் ஆகுவர் | – | நித்யஸூரிகளாகப் பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1047:
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக்
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை
வல்லார் – அவர் வானவர் ஆகுவர், தாமே. [1-10-10]
* * *– [வில்லார்மலி.] திருமலையிலே வில்லுங்கையுமான வேடர்கள் நிறைந்து கிடப்பது வருணிப்பதன் கருத்து யாதெனில்; ஆழ்வார் மங்களாசாஸநபரராகையாலே தம்மைப்போன்ற மங்களாசாஸநபரர்கள் திருமலையிலே பலருளர் என்றபடி. பரமபதத்திலும் நித்யஸூரிகள் அஸ்தாநே பயத்தைச் சங்கித்துப் பரியும்போது, திருமலையிலே ஸ்ரீகுஹப்பெருமாள் போன்ற வேடர்கள் அஸுரராக்ஷஸமயமான இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று அதிசங்கைபண்ணி எப்போதும் ஏறிட்ட வில்லுங்கையுமாய் இருப்பர்களாகையாலே, அதனை உவந்து ஆழ்வார் அருளிச்செய்கிறாமென்க, பெரியாழ்வார்.
“மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்திவிசேஷத்தை அறிந்து சொல்லச் செய்தேயும் அதிசங்கையின் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்றாப்போலே, இவரும் * மல்லார்திரடோள் மணிவண்ணனென்று அறிந்து வைத்தும் அதிசங்கையினால் மங்களாசாஸநத்திலே நிஷ்டையுடையராயிருப்பர் என்பது இப்பாட்டில் அறியத்தக்கது.
இப்பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே யென்று நினைக்க வேண்டா; ” மங்களாசாஸந பரர்கள் திருமலையிலே உள்ளார்” என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுகையிலே அந்வயிக்கும்.
திருவேங்கடமுடையானைத் திருமங்கையாழ்வார் கவிபாடின இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள் நித்யஸுரிகளைப்போலே நித்யகைங்கரியம் பண்ணிக்கொண்டு வாழப்பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
அடிவரவு :- கண் இலங்கை நீர் உண்டாய் தூணாய் மன்னா மானேய் சேயன் வந்தாய் வில் வானவர்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெருமாள் கோயில் பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியர் அருளிச்செய்த
பெரிய திருமொழி திவ்யார்த்த தீபிகையில்
முதற்பத்து முற்றிற்று.
English Translation
Kaliyan with stone-hard arms sang this garland of songs in praise of the Resident of bow-wielding hunters’ Venkatam hills, the dark-gem Lord with strong arms. Those who can sing it will become celestials.
