(1029)
மானேய் கண்மடவார் மயக்கில் பட்டு* மாநிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை* என்
ஆனாய்! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே.
பதவுரை
| தேன்ஏய் | – | வண்டுகள் நிறைந்த |
| பூ பொழில் சூழ் | – | பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட |
| திருவேங்கடம் மா மலை | – | திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற |
| என் ஆனாய் | – | ஆனை போன்ற எம்பெருமானே! |
| மா நிலத்து | – | இப்பெரிய பூமண்டலத்திலே |
| மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு | – | மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு, |
| நாநாவித நரகம் புகும் பாவம் | – | பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை |
| நானே செய்தேன் | – | நானொருவனே செய்து வைத்தேன்; |
(ஆகிலும் இன்று அநுதாபம் பிறந்தமையாலே) | ||
| வந்து அடைந்தேன் | – | உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்; |
அடியேனை ஆள் கொண்டருள்-. | ||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1029
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு;
மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்;
தேன் எய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை;
என் ஆனாய்! வந்து அடைந்தேன்; அடியேனை ஆட் கொண்டருளே. [1-9-2]
***[மானேய்கண்மடவார்.] ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்; போக்யமல்லாத துர்விஷயங்களை போக்யமென்று கொண்டிருந்த குற்றங்களைப் பொறுத்தருள வேணுமென்று சரணம் புகுகிறாரிதில். நெஞ்சு நஞ்சாயிருக்கச் செய்தேயும் வெளிநோக்கை வெகு அழகாகச் செய்து ஆண்பிள்ளைகளை ஆகர்ஷிக்கின்ற பெண்களின் கண்வலையிலே அகப்பட்டு, அந்த மாதர்களை ஆராதிப்பதே பரம ப்ரயோஜநமென்றுகொண்டு, அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவமுஞ் செய்து தீர்த்தேன்; ‘உள்ள நரகங்கள் போராது, இன்னமும் பல நரகங்களைப் படைக்க வேணும்’ என்னும்படி எண்ணிறந்த பாவங்களைச் செய்தேன். ‘போக்யமல்லாத விஷயங்களிலே ப்ரமித்து ஈடுபட்டு அநர்த்தங்களை விளைத்துக்கொண்டோமே!’ என்று அநுதாபம் தோன்றியதனால், பரமபோக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மைபெறுவோமென்று நன்மதி உண்டாகி, போக்யதைக்கு எல்லை நிலமாகவுள்ள திருமலையிலே எழுந்தருளியிருக்குமிருப்பிலே வந்து சரணம் புகுந்தேன்; பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டருளவேணுமென்று பிரார்த்திதாராயிற்று.
நானே நாநாவிதநரகம் புகும்பாவஞ் செய்தேன் = சேதநவர்க்கங்களுக்குத் தொகையில்லாதாப்போலவே ஏற்கனவே படைக்கப்பட்டுள்ள நரகங்களுக்கும் தொகையில்லை; சிலசில சேதநர்கள் சிலசில நரகங்களிலே சென்று வேதனைப்படுவர்கள் என்றிருந்தாலும், உள்ள நரகங்களெல்லாம் என்னொருவனுக்கே போராதென்னும்படி எல்லையற்ற பாவங்களைச் செய்தேனென்று சொல்லிக்கொள்ளுகிறார். “ஈச்வரனுக்கு ஜகந்நிர்வாஹம் நடக்கவேண்டில் வேறே சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேணும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல். நாநா விதநரகம் = வடமொழித் தொடர். என்ஆனாய் = ‘ஆனை’ என்பது விளியுருபு ஏற்றால் ‘ஆனாய்’ என்றாகும்; ஆனை போன்றவனே! என்றபடி. “தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர். “என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.
1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.
2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.
3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.
4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.
5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.
6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.
7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.
8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.
9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.
10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.
11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.
12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.
13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க……..(2)
English Translation
O Lord of Tiruvenkatam hills, surrounded by bee-humming flower groves! My Elephant! Caught in the lure of fawn-eyed dames, I stooped to commii all kinds of hell-going sins. Today I have come to you. Pray take me into your service!
