(1030)

(1030)

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால்*
என்றேனு மிரந்தார்க் கினிதாக வுரைத்தறியேன்*
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா!*
அன்றே வந்தடைந்தே னடியேனை யாட்கொண்டருளே.

பதவுரை

குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா

மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
குறிக்கோள் ஒன்று இலாமையினால்

விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே
இரந்தார்க்கு

யாசித்தவர்களுக்கு
இனிது ஆக

மதுரமாக
என்றேனும்

ஒருநாளும்
உரைத்து அறியேன்

பதில் சொல்லி அறியேன்;
பல் உயிரை

பல பிராணிகளை
கொன்றேன்

கொலைசெய்து முடித்தேன்;
அன்றே

அந்த க்ஷணத்திலேயே
வந்து அடைந்தேன்

உன்னை வந்து பற்றினேன்;

அடியேனை ஆள் கொண்டருள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

#1030 –

கொன்றேன் பல் உயிரை, குறிக்கோள் ஒன்று இலாமையினால்;

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்;

குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா!;

அன்றே வந்து அடைந்தேன் : அடியேனை ஆட் கொண்டருளே. (1-9-3)

 

***[கொன்றேன் பல்லுயிரை.] ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார். குறிக்கோள் ஒன்றிலாமையினால் பல்லுயிரைக் கொன்றேன் = குறிக்கோளாவது நம்பிக்கை; தேஹத்திற்காட்டிலும் வேறான ஆத்மா உண்டென்றும் தெய்வமுண்டென்றும் சாஸ்த்ரமுண்டென்றும் புண்யபாபங்களுண்டென்றும், பாபப்பலன்களை அநுபவிக்க நரகமுண்டென்றும் இவையொன்றிலும் நம்பிக்கையில்லாதவனாகையால், இவ்வளவென்று கணக்கிடமுடியாதபடி எல்லையில்லாத ஜீவராசிகளைக் கொலை செய்தேன்; உகந்த பெண்களை திருப்தி செய்விப்பதற்குப் பொருளீட்டுவதற்காக வழிமறித்துப் பிராணிகளைக் கொன்றேனாகிலும், பிறகு கூடியிருந்து குலாவும்போது ‘தேஹி’ என்று ஒரு கவளமிரந்தவர்களுக்கு ஒருநாளாகிலும் ஐயமிட்டிருப்பேனோ, அதுவுமில்லை; இடாவிடினும் “அப்பா! இப்போது கையில் ஒன்றுமில்லை; மற்றொரு போது வந்தால் பார்ப்போம்” என்று தேனொழுக வார்த்தையாவது சொல்லிவிடலாமே, அதுவும் செய்திலேன். “இந்த பாவியினிடம் வந்து யாசித்தோமே!” என்று வாழ்நாளுள்ள வரையிலும் அவர்கள் நெஞ்சு புண்பட்டிருக்கும்படி மிகவும் திரஸ்காரமான வார்த்தைகளைச் சொல்லி வெருட்டினே னென்கை.

இப்படி பலபாவங்கள் செய்து போந்தேனாகிலும் சரணம் புகுந்துவிட்டேனாகையால் அடியேனைக் குளிரநோக்கி அடிமை கொள்ள வேணுமென்றாராயிற்று. “இன்று வந்தடைந்தேன்” என்னாதே “அன்றே வந்தடைந்தேன்” என்றருளிச் செய்த ஸ்வாரஸ்யம் விளங்குமாறு பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானித்தருளுமழகு பாரீர்; (அன்றே.) அநுதாப​ம் பிறந்தாதல் ப்ராயச்சித்தம் பண்ணியாதல் வருகையன்றிக்கே, கொன்ற கைகழுவாதே உதிரக்கை கழுவாதே வந்து சரணம்புகுந்தேன்., (உதிரக்கை – கொலைசெய்ததனால் ரத்தமயமான கை.)…………………(3)

English Translation

With no aim or purpose in life, I went about killing people. I never knew what it is to speak a kind word to people who came seeking my help. On the hill; tops the clotids rumble in cool; Tiruvenkatam. Today I have come to you. Pray take me into your service!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top