(1028)
தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்களென்றும்*
நோயே பட்டொழிந்தேனுன்னைக்காண்பதோ ராசையினால்*
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!*
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக் கொண்டருளே.
பதவுரை
| வேய் ஏய் | – | மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே) |
| பூ பொழில் சூழ் | – | பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே) |
| விரை ஆர் | – | பரிமளம் விஞ்சியிருக்கிற |
| திருவேங்கடவா | – | திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே! |
| தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும் | – | தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு |
| நோய் பட்டு ஒழிந்தேன் | – | அநர்த்தப்பட்டுப் போனவனும் |
| நாயேன் | – | நாய் போலே மிக்க நீசனுமான அடியேன் |
| உன்னை காண்பது ஓர் ஆசையினால் | – | (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால் |
| வந்து அடைந்தேன் | – | உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்; |
| என்னை | – | சரணாகதனான என்னை |
| நல்கி | – | கிருபை செய்து |
| ஆள் கொண்டருள் | – | அடிமை கொண்டருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
ஒன்பதாம் திருமொழி – தாயே (திருவேங்கடம் – 2)
கலிநிலைத்துறை
திருவேங்கடம் : 2 அவதாரிகை :-
கீழ்த் திருமொழியில், பாசுரந்தோறும் “திருவேங்கடமடை நெஞ்சமே! – திருவேங்கடமடை நெஞ்சமே!” என்று சொல்லித் திருமலையை ஆச்ரயிக்குமாறு தம் திருவுள்ளத்தைத் தூண்டினார். அதுவும் அப்படியே இசைய, “யானுமென்னெஞ்சமிசைந் தொழிந்தோம்” என்றாற்போலே இருவரும் கூடித் திருவேங்கடமுடையானை அநுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தனர். ஸர்வஸ்வாமியாய் ஸர்வவிதபந்துவான திருமால் இங்கே நித்யவாஸம் செய்தருளுகிறபடியாலே நம்முடைய அபேக்ஷிதங்களெல்லாம் இங்கே பெறலாமென்று மிகுந்த பாரிப்புடனே வந்தார் ஆழ்வார். இப்படி வந்த ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தல் அணைத்தல் மதுரமாகவொரு வார்த்தை சொல்லுதல் குசலப்ரச்நம் பண்ணுதல் கைங்கரியத்திலே ஏவுதல் ஒன்றுஞ்செய்திலன் திருமலையப்பன். அதனால் ஆழ்வார் மிகவுந் திருவுள்ளம் நொந்து ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் நமக்கு வகுத்தநாதனாய் பிராட்டியை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதானாயிருக்குமிப்பெருமான் இப்போது நம்மை உபேக்ஷித்திருப்பதற்குக் காரணம் நம்முடைய கனத்த பாவங்களேயாகவேணும்; மஹாபாபியான இவனை நாம் கடாக்ஷிக்கலாகாதென்று திருவுள்ளம்பற்றியிருக்கிறான் போலும்’ என்று நிச்சயித்து, அப்பெருமான் திருவுள்ளத்திலே இரக்கம் பிறக்கும்படி பாசுரம் பேசுகிறார்.
பந்துக்களல்லாதாரை பந்துக்களாக நினைத்தும், போக்யமல்லாத விஷயங்களை போக்யமாகக் கொண்டும், ஜீவஹிம்ஸைகளை அளவறப்பண்ணியும், இன்னமும் பலவகைப்பாவங்களைச் செய்தும் காலம் கழித்தேனாகிலும், இப்போது உன்னை விட்டுத் தரிக்கமாட்டாத அன்பு பிறந்ததனால் அநுதாபத்துடனே இவ்விடம் வந்து சேர்ந்தேன்; இனி என்னுடைய முன்னைத் தீவினைகளைப்பார்த்துக் கைவிடலாகாது; நீயோ ஸர்வரக்ஷகன்; நானோ அநாதன் அநந்யகதி; என் குற்றங்களைப் பொறுப்பிக்கைக்குப் பிராட்டியும் – அகலகில்லேனிறையுமென்று திருமார்பிலே உறையாநின்றாள்; ஆனபின்பு என் அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனைக் கைக்கொண்டருளவேணுமென்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு திருவடிகளிலேவிழுந்து சரணம்புகுகிறார். ஒன்பதாம் பாட்டிலே “மாயனே எங்கள் மாதவனே!” என்று பிராட்டி ஸம்பந்தம் ப்ரஸ்துதமாயிருக்கையாலே புருஷகாரம் முன்னாகச் சரணம் புகுகிறாரென்பது விளங்குமிறே.
#1028 –
தாயே தந்தை என்றும், தாரமே, கிளை, மக்கள் என்றும்;
நோயே பட்டொழிந்தேன்; நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்;
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!;
நாயேன் வந்து அடைந்தேன்; நல்கி, ஆள் என்னைக் கொண்டருளே. [1-9-1]
***(தாயே தந்தை.) 1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” 2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்; அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி. “இப்படி ஆபாஸபந்துக்களை நம்பினபடி யாலன்றோ நமக்குக் கஷ்டங்கள் நேர்ந்தன; நிருபாதிகபந்துவான எம்பெருமானைப்பற்றினோமாகில் ஒரு குறையுமிராதே” என்று இன்று நல்ல புத்தியுண்டாயிற்று. பரமபோக்யமான திருமலையிலே வந்து நிற்கிற நிலையிலே ஈடுபட்டுத் திருவடிகளிலே விழுகின்றேன்; அடியேனுடைய முன்னைத்தீவினைகளைக் கணிசியாமல் சரணாகதன் என்பதையே குறிக்கொண்டு பரமகிருபையுடன் அடிமை கொண்டருள வேணும் என்று பிரார்த்தித்தாராயிற்று. நாயேன்=நாய் போலே நீசன் என்று நைச்யாநுஸந்தாநம்பண்ணுகிறபடி. இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளையருளிச்செயல் பாரீர்-; “(நாயேன்.) நான் செய்து கொண்டபடியைப் பார்த்தால் பிறர்க்குமாகேன், தேவரீர்க்குமாகேன். புறம்போக்கில் கல்லையிட்டெறிவர்கள். உள்ளே புதரில் தொட்டனவும் தீண்டினவும் பொகட வேண்டிவரும்.” ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல்விழுந்து விரும்புமாபோலே ராஜாதிராஜனான நீயும் என்னை மேல் விழுந்து விரும்பவேணுமென்பது உள்ளுறை……………………………………. (1)
English Translation
O Lord of Tiruvenkatam surrounded by Bamboo thickets and fragrant groves! Melting for Mother, Father, wife, relatives and friends I sickened and suffered. This dog-begone self has come with a desire to see you. Pray take me into your service!
