(1027)

(1027)

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்துறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கையின்றித் தரித்துரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே*
வங்கமா கடல்வையம் காவலராகி வானுல காள்வரே.

பதவுரை

செம் கயல்

(இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும்

களித்து விளையாடப் பெற்ற
சுனை

நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து

திருமலையிலே
உறை

நித்யவாஸம் பண்ணா நின்ற
செல்வனை

திருமாலைக் குறித்து,
மங்கையர் தலைவன் கலிகன்றி

திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
வண் தமிழ்

அழகிய தமிழினாலாகிய
செம் சொல் மாலைகள்

சிறந்த சொல் மாலையை
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள்

‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள்
வங்கம் மா கடல் வையம்

கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு
தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி

புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு)
வான் உலகு ஆள்வர்

பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

 

 #1027

 செங் கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்து உறை செல்வனை

மங்கையர் தலைவன், கலிகன்றி, வண் தமிழ்ச்செஞ்சொல் மாலைகள்

சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே

வங்க மா கடல் வையம் காவலர் ஆகி, வான்-உலகு ஆள்வரே. (1-8-10)

 

        ** *- (செங்கயல் திளைக்குஞ்சுனை.) யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

        சங்கையின்றித் தரித்துரைக்கவல்லார்கள் = ‘இத்தமிழ்ப்பாசுரங்களுக்கு இவ்வளவு வைபவமுண்டோ?’ என்று ஸந்தேஹப்படாமல் பூர்ண விச்வாஸத் துடனே ஓதவல்லவர்கள் என்றபடி. शंका (శంకా) (சங்கா) என்ற வடசொல் சங்கை யெனத் திரிந்தது. இனி, “சங்கையின்றி வானுலகாள்வரே” என இயைத்து, இதிற் சொன்ன பலன் நிஸ்ஸம்சயமாகக் கைகூடும் என்ற தாகவுங் கொள்ளலாம். ”தஞ்சமதாகவே” என்றவிடத்து तथ्यम् (తథ్యం) (தத்த்யம்) என்ற வடசொல் தஞ்ச மென மருவிற்றென்று கொண்டு, தஞ்சமதாகவே – உண்மையாகவே என்று பொருள் கொள்ளுதலுமாம். ‘வித்யா’ என்ற வடசொல் விஞ்சை என மருவு வது போல, தத்த்யம் என்ற வடசொல்லும் தஞ்ச மென்றாகலாமிறே. … (10)

அடிவரவு:- கொங்கு பள்ளி நின்ற பார்த்தற்கு வண்கையான் எண் திசைகள் பார் அம்பரம் பேசுமின் செங்கயல் தாய்.

 

எட்டாந்திருமொழி உரை முற்றிற்று.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

 

English Translation

Red fish jump in lakes of Tiruvenkatam where the Lord resides in affluence, praised by Mangai-tract king kalikanri in fragrant Tamil poems. Those who; master it will rule the ocean-gridled Earth and, the sky as well; without a doubt.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top