(1022)

(1022)

வண்கையா னவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய்*
மண்கையா லிரந்தான் மராமர மேழுமெய்த வலத்தினான்* 
எண்கையா னிமயத்துள்ளா னிருஞ்சோலை மேவியவெம்பிரான்*
திண்கைம்மா துயர்தீர்த்தவன் திருவேங்கட மடை நெஞ்சமே! 

பதவுரை

வண் கையான்

விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்

அவுணர்க்கு நாயகன்

அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது

வேள்வியில்

யாக பூமியிலே

மாணி ஆய் சென்று

பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி

கையால்

தனது திருக்கையாலே

மண் இரந்தான்

பூமியை யாசித்தவனும்

மராமரம் ஏழும்

ஏழு மராமரங்களையும்

எய்த

துளைபடுத்தின

வலத்தினான்

வலிவையுடையவனும்

எண் கையான்

அஷ்ட புஜங்களையுடையவனும்

இமயத்து உள்ளான்

இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும்

இரு சோலை

திருமாலிருஞ் சோலையிலே

மேவிய

பொருந்திய

எம்பிரான்

ஸ்வாமியும்

திண் கை மா

திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது

துயர்

துன்பத்தை

தீர்த்தவன்

போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற

திருவேங்கடம் நெஞ்சமே! அடை.—

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

 

 #1022

 வண் கையான், அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று, மாணியாய், 

மண் கையால் இரந்தான், மராமரம்  ஏழும் எய்த வலத்தினான், 

எண் கையான், இமயத்து உள்ளான், இருஞ்சோலை மேவிய எம் பிரான், 

திண் கை மா துயர் தீர்த்த வன் திருவேங்கடம் அடை, நெஞ்சமே! —(1-8-5)

 

        * * *–(வண்கையான்.) வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே! 

        [மராமரமேழுமெய்த வலத்தினான்.] ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ்செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை ஒருயோஜனை தூரம் தூக்கி யெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல, அது கேட்ட லக்ஷ்மணன் உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ன, ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறு பூத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது; ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இரு நூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’ என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்குமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டைவிரலினால் இலேசாய்த் தூக்கிப்பத்துயோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கி யெறிந்தான்; இப்போது உலர்ந்து போன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு அம்பறாத்தூணியை அடைந்தது. (மராமரம் – ஆச்சாமரம்.) ..(5)

 

English Translation

 

He went to’ the fire-sacrifice of the generous Asura king Mabali, as a manikin and begged for three strides of land. He is the strong one who shot an arrow through seven trees. He is the strong one who shot an arrow through seven trees. He is the many-armed one, the resident of the Himalayas, the Lord of Tirumalirumsolai. He saved the elephant in. distress, he lives in Tiruvenkatam, – thitherward; O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top