(1004)
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய!.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா! தானவர்க்கென்றும் நஞ்சனே!,
வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
பதவுரை
| விளங்கனி முனிந்தாய் |
– |
விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே! |
| வஞ்சனேன் அடியேன்
நெஞ்சினில் பிரியா வானவா |
– |
வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே! |
| தானவர்க்கு என்றும் நஞ்சனே |
– |
அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே! |
|
நைமிசாரணியத்துள் எந்தாய்!-; |
||
| நீதி அல்லாதன |
– |
அநீதியான ஒழுக்கங்களை |
| நெஞ்சினால் நினைந்தும் |
– |
(முதலில்) நெஞ்சாலே நினைத்தும் |
| வாயினால் மொழிந்தும் |
– |
(பிறகு) வாயாலே சொல்லியும் |
| செய்தும் |
– |
(பிறகு) செய்கையினால் அனுட்டித்தும் |
| துஞ்சினார் |
– |
முடிந்தவர்கள் |
| செல்லும் |
– |
அடையத்தக்க |
| தொல் நெறி |
– |
நரகமார்க்கத்தை |
| கேட்டே |
– |
(கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே |
| துளங்கினேன் |
– |
நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
#1004
நெஞ்சினால் நினைந்தும், வாயினால் மொழிந்தும், நீதி அல்லாதன செய்தும்,
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் ; விளங்கனி முனிந்தாய்!
வஞ்சனேன், அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா! தானவர்க்கு
என்றும் நஞ்சனே! வந்து, உன் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-7]
நெஞ்சினால் நினைந்தும்:மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.
சிலர் பாவஞ் செய்யவேணுமென்று முன்னாடி நெஞ்சால் நினையாமலும் வாயால் சொல்லாமலுமிருந்தாலும் திடீரென்று விதிவசமாகப் பாவஞ்செய்து விட நேருவதுண்டு; அப்படிப்பட்டவர்களுடைய பாவங்கள் பொறுமைக்கு விஷயமாகவுங்கூடும்; அங்ஙனன்றிக்கே, ‘நாம் கட்டாயம் பாவஞ் செய்ய வேணும் ‘ என்று நெடுநாளாகவே நெஞ்சில் பாரித்துக் கொண்டு அதை அடிக்கடி வாயாலுஞ் சொல்லிக் கொண்டிருந்து அப்படியே செய்கையிலும் செய்து தீர்ப்பவர்களுடைய பாவங்கள் அநுபவித்தே தீரவேண்டியவையாகையால் நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் செய்தும் ” என்றார். இங்ஙனே செய்து செத்தவர்கள் செல்லுகிற தொன்னெறியாவது நரகமார்க்கம். தொல் நெறி = அநாதியான வழி; பகவத்கீதையில் எட்டாவது அத்யாயத்தில் “శుక్లకృష్ణగతీ హ్యేతే జగతళ్ళాశ్వతే మ | ఏకయా యాతనావృత్తి మన్యయావర్తతే పునః” = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யேதே ஜகதச் சாச்வதே மதே-ஏகயா யாத்யநாவ்ருத்தி மந்யயாவர்த்ததே புந:” (சுக்லகதியென்கிற அர்ச்சிராதிமார்க்கமும் க்ருஷ்ண கதியென்கிற தூமாதிமார்க்கமும் உலகத்திற்கு சாச்வதமாய் ஏற்பட்டவைகள் ; இவற்றுள் சுக்லகதியாற் சென்றவன் மறுபடியும் இவ்வுலகத்திற்குத் திரும்பி வருகிறதில்லை ; க்ருஷ்ணகதியாற் செல்லுமவன் திரும்பிவிடுகிறான்) என்னும் போது அர்ச்சிராதிமார்க்கம் போலவே தூமாதி மார்க்கமும் நித்தியம் என்றமை யால் இங்குத் தொன்னெறி என்றது பொருந்துமென்க. சாச்வதம் என்கிற விஷயத்தில் இரண்டு மார்க்கங்களும் ஒத்திருந்தாலும் அர்ச்சிராதிமார்க்கம் பெரும் பாலும் புல்மூடிக்கிடக்கும்; தூமாதிமார்க்கம் இடையறாத ஆட்களையுடைத்தாய் வழி தேய்ந்திருக்குமென்று வாசி காண்க.
விளங்கனி முனிந்த வரலாறு வருமாறு :- கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட அஸுரர்களில் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய் கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்து நிற்க, அஃதறிந்த க்ருஷ்ணபகவான், அவ்வாறே தன்னைக கொல்லும் பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின் மேலெறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்தனரென்பதாம்.
” அடியேன் “ என்று கபடமாக ஒருவார்த்தை சொன்னாலும் அதை மெய் யன்போடு சொன்ன சொல்லாகத் திருவுள்ளம்பற்றி நெஞ்சை விட்டு அகலாது நெஞ்சிலேயே குடிகொண்டிருப்பன் என்கிற ஸௌசீல்ய குணத்தைப் பேசுகிறார் வஞ்சனேனடியேன் னெஞ்சினில் பிரியாவானவா என்று. இப்படிப்பட்ட ஸௌசீல்யம் பிரதிகூலர் பக்கலிலும் இருக்குமாகில் அர்த்தமாகுமே; அப் படியில்லை என்கிறார் தானவர்க்கு என்றும் நஞ்சனே! என்று. … (எ)
English Translation
Thinking wickedly, speaking in harsh tones, doing many acts against Dharma, Trailing in the dreary path of the dead ones, I did tremble sinfully myself O! O Lord who felled the wood-apple-demon, ever-in-the-heart of devotees! O Death to Asuras, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!
