(1002)

(1002)

இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,

நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,

கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,

நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

 

பதவுரை

இடும்பையால் அடர்ப்புண்டு

ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று

“ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு

பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று

இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த

நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
நீசனேன் நான்

நீசனாகிய நான்
அந்தோ

ஐயோ!
வினை பயன்தன்னை நினைக்கிலேன்

பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்;
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி

க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி

நைமிசாரணியத்துள் எந்தாய்!. வந்து உன் திருவடி அடைந்தேன்-

 

இடும்பையால் அடர்ப்புண்டு, இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று

நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், அந்தோ! நினைக்கிலேன் வினைப் பயன்- தன்னை ;

கடுஞ் சொலார், கடியார், காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி ,

நடுங்கி, நான் வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-5]

 

இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.

இடும்பையாவது ஏழையாயிருக்கை. ஏழைமையினால் வருத்தப்பட்டுக் கொண்டு வந்து. ஐயா! ஒரு கவளம் சோறு இடுங்கள்’ என்று பல்லைக்காட்டி இரந்தவர்களுக்கு ஒருபிடி சோறு இடமாட்டாமல் கிடையாது, போ’ என்று சொல்லித் திரஸ்கரித்த பாவியன்றோ நான்; இப்படிப்பட்ட பாவத்திற்கு நேரக் கூடிய பலனை அந்தோ! நெஞ்சாலும் நினைக்ககில்லேன். மேலுலகத்தில் யமபடர்களால் கொடிய ஹிம்ஸைகள் நேரப்போகின்றன என்று பொதுப்படையாகத் தெரிந்திருப்பதனால் அந்த ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சிநடுங்கி இன்று உன்னை வந்து பணிந்தேன்.

துற்று = ஒரு கவளம். ”நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை” என்பதற்கு, “பாவங்களுக்குப் பலனுண்டு என்பதை அப்போது எண்ணாமல் பாவத்தைச் செய்துவிட்டேன் ; இப்போது தவிக்கின்றேன்” என்பதாகவும் கருத்துரைக்கலாம். யமபடர்கள் செய்கிற ஹிம்ஸைகளைக் காட்டிலும் அவர்கள் சொல்லுகிற சொற்கள் மிகக்கடினமானவை என்பது தோன்றக் கடுஞ்சொலார் என்று முற் கூறினர். காலனார் – யமதர்மராஜன். கொடுமிறை= கொடிய வருத்தங்கள். (ரு)

English Translation

Those who when starving, seeking a morsel, came to me, but I gave them nothing. Hard-hearted cold one, lowly this self O, — thoughtless of the fruit of my action. Hot-spoken Time-Lord, cruel and nasty, —fearing his terrible tortures, Trembling and panting. I have come to; your feet Naimisaraniyam-living Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top