(1002)
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
பதவுரை
| இடும்பையால் அடர்ப்புண்டு |
– |
ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு |
| ஓ! துற்று இடுமின் என்று |
– |
“ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி |
| இரந்தவர்க்கு |
– |
பிச்சை கேட்டவர்களுக்கு |
| இல்லையே என்று |
– |
இல்லவேயில்லை யென்று சொல்லி |
| நெடு சொலால் மறுத்த |
– |
நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த |
| நீசனேன் நான் |
– |
நீசனாகிய நான் |
| அந்தோ |
– |
ஐயோ! |
| வினை பயன்தன்னை நினைக்கிலேன் |
– |
பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்; |
| கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி |
– |
க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி |
|
நைமிசாரணியத்துள் எந்தாய்!. வந்து உன் திருவடி அடைந்தேன்- |
||
இடும்பையால் அடர்ப்புண்டு, இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன், அந்தோ! நினைக்கிலேன் வினைப் பயன்- தன்னை ;
கடுஞ் சொலார், கடியார், காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி ,
நடுங்கி, நான் வந்து, உன் திருவடி அடைந்தேன் – நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-5]
இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.
இடும்பையாவது ஏழையாயிருக்கை. ஏழைமையினால் வருத்தப்பட்டுக் கொண்டு வந்து. ஐயா! ஒரு கவளம் சோறு இடுங்கள்’ என்று பல்லைக்காட்டி இரந்தவர்களுக்கு ஒருபிடி சோறு இடமாட்டாமல் கிடையாது, போ’ என்று சொல்லித் திரஸ்கரித்த பாவியன்றோ நான்; இப்படிப்பட்ட பாவத்திற்கு நேரக் கூடிய பலனை அந்தோ! நெஞ்சாலும் நினைக்ககில்லேன். மேலுலகத்தில் யமபடர்களால் கொடிய ஹிம்ஸைகள் நேரப்போகின்றன என்று பொதுப்படையாகத் தெரிந்திருப்பதனால் அந்த ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சிநடுங்கி இன்று உன்னை வந்து பணிந்தேன்.
துற்று = ஒரு கவளம். ”நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை” என்பதற்கு, “பாவங்களுக்குப் பலனுண்டு என்பதை அப்போது எண்ணாமல் பாவத்தைச் செய்துவிட்டேன் ; இப்போது தவிக்கின்றேன்” என்பதாகவும் கருத்துரைக்கலாம். யமபடர்கள் செய்கிற ஹிம்ஸைகளைக் காட்டிலும் அவர்கள் சொல்லுகிற சொற்கள் மிகக்கடினமானவை என்பது தோன்றக் கடுஞ்சொலார் என்று முற் கூறினர். காலனார் – யமதர்மராஜன். கொடுமிறை= கொடிய வருத்தங்கள். (ரு)
English Translation
Those who when starving, seeking a morsel, came to me, but I gave them nothing. Hard-hearted cold one, lowly this self O, — thoughtless of the fruit of my action. Hot-spoken Time-Lord, cruel and nasty, —fearing his terrible tortures, Trembling and panting. I have come to; your feet Naimisaraniyam-living Lord, O!
