(1001)

(1001)

வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,

நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்ற எற்றிவைத்து, எரியெழுகின்ற

செம்பினாலியன்றபாவையைப் பாவீ ! தழுவெனமொழிவதர்க்கஞ்சி, நம்பனே.!

வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.

பதவுரை

வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து

பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார்

பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள்
இறந்தால்

இறந்துபோனால்
நமன் தமர்

யமபடர்கள்
பற்றி

பிடித்துக்கொண்டு
எற்றி

துன்பப்படுத்தி
வைத்து

(தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,
பாவீ

“பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே!
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என

செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று
மொழிவதற்கு அஞ்சி

சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு
நம்பனே

ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே!

நைமிசாரணியத்துள் எந்தாய்!

வந்து உன் திருவடி அடைந்தேன்-.

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து, பிறர் பொருள், தாரம் என்று இவற்றை

நம்பினார் இறந்தால், நமன் – தமர் பற்றி, எற்றி வைத்து, எரி எழுகின்ற

செம்பினால் இயன்ற பாவையை, பாவீ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி,

நம்பனே! வந்து, உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-4]

வம்புலாங் கூந்தல் அக்நிஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.

இவ்வித தண்டனைகளுக்கு உரிய பாவங்களை ஆழ்வார் நெஞ்சாலும் நினைத் திலரேயாகிலும் அப்படிப்பட்ட பாவங்களைக் கூசாமல் செய்து திரிகின்ற நம் போலியர் வாயில் இப்பாசுரங்கள் நுழைந்து புறப்படுவதற்காகவே ஆழ்வார் இங்ஙனமருளிச் செய்து வைத்தார் என்று உணர்க.

தன் மனைவியைச் சொல்லும்போது ‘வம்புலாங் கூந்தல் மனைவி’ என்று சிறப்பித்துக் கூறியும், பிறர் மனைவியைச் சொல்லும்போது அங்ஙனம் சிறப்பித்துக் கூறுதலின்றியே பிறர் பொருள் தாரம் என்று சாதாரணமாகக் கூறியும் உள்ளதற்குப் பெரியவாச்சான் பிள்ளை ரஸோக்தியாக அருளிச்செய்கிறார் காண்மின் :– ”விஷயாந்தரங்களிலே ஸ்ப்ருஹையைப் பண்ணுமே; அவற்றில் வந்தால் வம்புலாங் கூந்தலாகவும் வேண்டாவாய்த்து; பிறரதாமித்தனையேயாய்த்து ஆதரிக்கைக்கு வேண்டுவது.” என்று. தான் தாலிகட்டிக் கைக்கொண்ட மனைவி திரிலோக ஸுந்தரியாயிருந்தாலும் தன்னுடையவள்’ என்கிற காரணம் பற்றியே அவளைக் கைவிட்டிடுவான் என்பதும், பிறர் மனைவி பிளிச்சைக் கண்ணி யாயிருந்தாலும் பிறருடையவள் என்கிற காரணம்பற்றியே அவளை உகந்திடுவான் என்பதும் சொல் நயத்தில் தோற்றுகின்றமை காண்க.

நம்பினாரிறந்தால் என்றவிடத்து நம்புதலாவது ஆசைப்படுதல். “நம்பும் மேவும் நசையாகுமே.” நமன் தமர்பற்றி” இத்யாதிக்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸுக்திகள் மிக்க ரஸமாயிருப்பதால் அவற்றை இங்கே உதாஹரிப்போம்;-” அவர்கள் தாங்கள் – யமபடர்கள் ஒருகைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவர்களாய்த்து ; பின்னை இவனுடம்புதன்னோடே எற்றுவர்கள் ; அநந்தரம் தங்கள் கை சலித்தவாறே பொகட்டிட்டு வைப்பர்கள் . இவர் இத்தனைபோது ஸ்த்ரீகளையொழிய இருக்கவல்லரோ!; அவளையழைப்பியும்.’ என்பர்கள். இவனும் நம்மை நலிவதெல்லாம் நலிந்தார்களாகிலும் இனி அவளை அழைக்கிறார்களிறே’ என்று குறுவிழிக்கொண்டு கிடக்கும், எரி யெழா நிற்பதாய் செம்பாலே செய்யப்பட்ட பாவையைப் பாவீ! தழுவு என்பர்களாய்த்து. கெடுவாய்! அவர்களொழிச்சினவன்றாகிலும் அநுதாபம் பிறந்து உகந்தருளின தொரு திருவாசலிலே ஒதுங்கினாயாகில் இன்று எங்களுக்குக் கைசலியாதொழியலாமே என்பர்களாய்த்து. அவர்கள் பண்ணும் நலிவைப் பொறுக்கலாம்; க்ரூரமான பேச்சாய்த்துப் பொறுக்கப் போகாதது.”

English Translation

Forsaking the faithful, other fond and loving wives, thoss who go after the others’ wives, when they do die and go to the other world, Yama’s agents garb and punish them, “Sinner, come and embrace this damsel made of sizzling red hot copper”, Fearing to hear these words, I have come to serve your feet, Naimisaraniyam-living Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top