(999)
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனே மாயா! வானவர்க்கரசனே!, வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.
பதவுரை
| சிலம்பு அடி உருவின் |
– |
சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும் |
| கருநெடு கண்ணார் திறத்தன் ஆய் |
– |
கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய் |
| அறத்தையே மறந்து |
– |
தருமங்களை மறந்து |
| புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி |
– |
இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு |
| பொழுதினை வாளா போக்கினேன் |
– |
வாழ்நாளை வீணாகக் கழித்தேன்; |
| அலம் புரி தடகை |
– |
போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய |
| ஆயனே |
– |
கோபால க்ருஷ்ணனே! |
| மாயா |
– |
ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! |
| வானவர்க்கு அரசனே |
– |
தேவாதிதேவனே! |
|
நைமிசாரணியத்துள் எந்தாய்!- |
||
| வானோர் |
– |
நித்யஸூரிகள் |
| நலம் புரிந்து இறைஞ்சு |
– |
அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற |
| உன் திரு அடி அடைந்தேன் |
– |
உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன். |
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்திறத்தனாய், அறத்தையே மறந்து,
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி, போக்கினேன் பொழுதினை வாளா;
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க்கு அரசனே!, வானோர்
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன், நைமிசாரணியத்துள் எந்தாய்! [1-6-2]
சிலம்படி யுருவின்- எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.தாம் முன்பு மாதர்களிடத்து ஈடுபட்டிருந்த காலத்து அவர்களது சிலம் பணிந்த காலழகிலும், கரிய பெரிய கண்ணழகிலும் தோற்று அவற்றையே வாய் வெருவிக் கொண்டிருந்தமை தோன்றச் சிலம்படி யுருவிற் கருநெடுங்கண்ணார் திறத்தனாய் என்கிறார். அடி உருவின் = உரு என்று அழகுக்குப் பெயர்; செம் பஞ்சுச்சாறு முதலியவற்றைப் பூசிக் காலை அழகு பெறுத்துவர்கள் மாதர்கள் ; அந்தச் செயற்கை யழகைச் சொல்லுகிறதென்க. மாதர்கள் ஒருகால் என்னைக் கண்ணாலே நோக்கிவிட்டால் பின்னை அவர்கள் காலிலேயே விழுந்து கிடப்பேன் என்பதுதோன்ற இங்கு அடியையும் கண்ணையும் எடுத்துக் கூறுகின்றார்.
அறத்தையே மறந்து என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;-”ஸ்த்ரீகளுக்கு வழிபறித்திடுமது மறக்கவொண்ணாதே; தன்னுடைய உஜ்ஜீவநத்துக்கு உபாயமானத்தையேயாய்த்து வருந்தி மறப்பது .” என்று. (இதன் கருத்தாவது-) விஷயபோகத்தில் ஈடுபட்டவன் பல வகைப் பாவங்களையுஞ் செய்து பொருளையீட்டிக் கொணர்ந்து மாதர்களை உகப்பிக்கவேண்டியது அவசியமாதலால் பாவத்தை மறக்கமுடியாது, புண்ணிய மொன்றையே மறக்கலாம் ; நானும் அந்தப் புண்ணியத்தை மாத்திரமே மறந்தேன் என்பது தோன்ற “அறத்தையே ” என்று ஏகாரம் பிரயோகிக்கப்பட்ட தென்றவாறு. பாவங்களைச் செய்து செய்து பணங்களைத் திரட்டி இந்திரியங்கள் உண்டுகளிக்கும்படியான துர்விஷயங்களை அனுபவித்து இப்படியே பலபகலும் பழுதே போக்கினேன்.
இன்று சதிர்த்தேனென்கிறார் பின்னடிகளில். அலம்புரி தடக்கை என்ப தற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர். அலம் என்று வடமொழியில் ஒரு அவ்யயமுண்டு ; போதும் என்று பொருள் ; யாசகர்கள் போதும் போதும்’ என்று சொல்லும்படியாக ஸர்வஸ்வதானம் பண்ணுகிற திருக்கை என்னலாம்; ஹலம் என்ற வடசொல் கலப்பையென்று பொருள்படும்; அஃது அலமெனத் திரியும். கலப்பையைத் தரித்த திருக்கையையுடையவன் என்றும் உரைக்கலாம். இதனால் பலராமாவதாரத்தைப் பேசினபடி. பலராமனுக்குக் கலப்பையும் உலக் கையும் முக்கிய ஆயுதங்கள். அதனால் அவ்விராமனுக்கு ஹலாயுதன், ஹலீ, முஸ்லீ என்ற திருநாமங்கள் வழங்கும். ஒரு காலத்தில் பலராமர், பக்கத்தில் ஓடுகின்ற யமுனாநதியை நோக்கி ‘ஓ யமுனா ! நீ இங்கே வா; நான் நீராட வேண்டும்’ என்றருளிச் செய்ய, அவ்யமுனை அவர் மதுபான மயக்கத்தினால் இப்படிச் சொல்லுகின்றாரென்று அவரது வார்த்தையை அவமதித்து அங்கே வரவில்லையாக, அதுகண்டு அவர் வெகுண்டு தமது கலப்பையைக் கையிலெடுத்து அதன் நுனியாலே அந்நதியை இழுக்க, அந்நதி தான் போகும் வழியை விட்டு அவரெழுந்தருளியிருக்கும் வனத்தில் வந்து பெருகியதன்றியும், தன்னுடைய சரீரத்தோடு அவர்க்கெதிரில் வந்து பயத்தினாலே மிகவும் நடுநடுங்கி விசேஷமாக வேண்டிக்கொள்ள, பின்பு அந்நதியை க்ஷமித்து அதில் நீராடினரென்றும், ஒருகால் ஹஸ்திநாபட்டணத்தில் துரியோதனன் தன் மகளான லக்ஷணைக்கு ஸ்வயம்வரங் கோடிக்க, அக்கன்னிகையை ஸ்ரீக்ருஷ்ணனது மஹிஷிகளுளொருத்தியாகிய ஜாம்பவதியின் குமாரனான ஸாம்பனென்பவன் பலாத்காரத்தால் தூக்கிக்கொண்டு போக, துரியோதனாதியர் எதிர்த்து யுத்தஞ்செய்து அவனைப் பிடித்துக் காவலிலிட்டுவைக்க, அச்செய்திகேட்ட பலராமர், தான் அவனை விடுவித்து வருவதாய்ச் சொல்லிப் புறப்பட்டு அஸ்தினாபுரத்திற் கெழுந்தருளி ‘நம்முடைய ஸாம்பனை விடவேண்டும்’ என்றருளிச் செய்ய, அக்கௌரவர் யாவரும் ‘துஷ்ட காரியஞ்செய்த அவனை நாங்கள் விடமாட்டோம்’ என்று ஒரே கட்டுப்பாடுடையவர்களாய் இகழ்ந்து பேச, பலராமர் அளவுகடந்த கோபங் கொண்டு எழுந்திருந்து ‘குருகுலத்தார் வாஸஞ்செய்துகொண்டிருக்கின்ற இந் நகரத்தைக் கங்கையிற் கவிழ்த்து விட்டு பூமியிற் கௌரவப்பூண்டில்லாமற் செய்துவிடுகிறேன் பாருங்கள்’ என்று சொல்லி, தமது கலப்பையை மதிலின் மேலுள்ள நாஞ்சிலென்னும் உறுப்பில் மாட்டியிழுக்க, அதனால் அப்பட்டண முழுவதும் அசைந்து சாயவே, அது கண்ட கௌரவரெல்லாரும் மனங்கலங்கி ஸாம்பனை லக்ஷணையோடும் பல சிறப்புக்களோடும் கொண்டுவந்து ஸமர்ப்பித்து வணங்கி வேண்ட, இராமபிரான் அவ்வளவோடு கலப்பையை வாங்கியருளினன் என்றும் உள்ள பல கதைகளினால் ஸ்ரீராமனது கலப்பையின் ஆற்றல் அறியத்தக்கது. பலராமாவதாரமும் ஸ்ரீதசரதராமாவதாரம் போல் ஸ்ரீமஹா விஷ்ணுவின் முக்கிய ப்ராதுர்ப்பாவமாதல் அறியத்தக்கது.
நான்காமடியில், ”நலம்புரிந்திறைஞ்சும் திருவடி” என்றும், “இறைஞ்சுன் திருவடி” என்றும் பாடபேதமுண்டு. ”இறைஞ்சு உன் திருவடி” எனப் பிரிக்க.
English Translation
Shapely wide-eyed dames wearing anklets drew mw making you and me forget Dharma, Senses suck and devour, giving pleasure for a while, — I spent all my times in this wasteful manner. O Wonder-cowherd-Lord, bearing a plough in hand, king of the celestial kings, O! Feet that is worshipped, by the Gods in sky above Naimisaraniyam-living Lord, O!
