(994)

(994)

ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை*

ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்*

வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்*

தானாய்,தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே!

பதவுரை

ஏனோர் அஞ்ச

சத்துருக்களான அசுரர்கள் பயப்படும்படியாக
அரி ஆய்

நரசிங்கமூர்த்தியாகி
பரிய இரணியனை

தடித்த சரீரத்தை யுடையனான ஹிரண்யனை
வெம் சமத்துள்

கடுமையான போர்க்களத்திலே
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்தஒருவன்

மாம்ஸம் நிறைந்த மார்பு கிழியும்படி செய்த வொருவனும்,
தானே

இப்படி செய்தருளினவன் தானே
இரு சுடர்ஆய்

சந்த்ர ஸூர்யர்களாயும்
வான் ஆய்

ஆகாசமாயும்
தீ ஆய்

அக்நியாயும்
மாருதம் ஆய்

காற்றாயும்
மலை ஆய்

மலைகளாயும்
அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய்

கடல் ஆழ்ந்த உலகங்கள் யாவுமாய் இருப்பவனும்
தானும் ஆனான் தன் சாளக்கிராமம்

அஸாதாரணமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனுமான எம்பெருமானுடைய ஸாளக்ராமத்தை

நெஞ்சே!  அடை-.

#994

ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் * அரி ஆய்ப் பரிய இரணியனை*

ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த * ஒருவன் தானே இரு சுடர் ஆய் **

வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்* மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்*

தான் ஆய் தானும் ஆனான் தன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே!—(1-5-7)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

* * *- (ஏனோரஞ்ச வெஞ்சமத்துள்.) கீழ்ப்பாட்டில் ”உலகேழும் தாயான் என்று ஸர்வலோக வ்யாபகத்வம் சொன்னவுடனே, முன்பு ப்ரஹ்லாதன் எம்பெருமான் ஸர்வ வ்யாபகன் என்று சொன்னதும் இரணியன் அதை மறுத்துச் சொன்னதும் முதலிய கதைகள் நினைவுக்கு வந்து ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அருளிச் செய்கிறாரிதில்.

வெஞ்சமத்துள் ஏனோரஞ்ச அரியாய் = சமம் – யுத்தம். இரணியனைக் கொன்ற இடத்தை வெஞ்சமமென்கிறார். ஏனோரென்றது ஏனையோரென்ற படி. மற்றவர்கள் என்று பொருள். அன்பர் தவிர மற்ற பேர்கள் என்றபடியாய் சத்துருக்களைச் சொல்லுகிறது. இரணியனும் அவனுக்குப் பக்கபலமா யிருந்த மற்றும் பல ஆஸுரப்ரக்ருதிகளும் ஏனோர் எனப்படுகின்றனர். அவர்கள் நரசிங்கமூர்த்தியைக் கண்டவாறே குடல் குழம்பிப் போயினரென்க.

பரிய – பருமை என்னும் பண்படியாப் பிறந்த பெயரெச்சம் : ஸ்தூலகாய னான என்றபடி.

இருசுடராய் என்று தொடங்கி உலகனைத்தும் தானாய் என்னுமளவும் – ஸகல வஸ்துக்களுக்கும் அந்தராத்மாவாயிருக்கும் நிலைமை சொல்லுகிறது. தூணில் நின்றுந் தோன்றியது சொன்ன ப்ரஸங்கத்திலே இதுவும் சொல்லத் தக்கதிறே. தானுமானான் என்பதனால் – அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹமுடைமை சொல்லுகிறது. இப்படிப்பட்ட எம்பெருமானுடைய சாளக்கிராமத்தை நெஞ்சே ! அடை . … … …. . …. (7)

English Translation

When the others watched terror-struck, He came as a man-lion and tore into the mighty chest of Hiranya. He stands as the two orbs, the sky, the fire, the wind, the mountains, the oceans, the worlds, and as himself as well. Go to Him in Saligrama, O Heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top