(983)
தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி திறத்து ஒருமறத்தொழில்புரிந்து,
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த பனிமுகில்வண்ணனெம்பெருமான்,
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த கருவரைபிளவெழக்குத்தி,
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
பதவுரை
|
தேர் அணங்கு அல்குல் |
– |
தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும் |
|
செழுகயல் கண்ணி திறத்து |
– |
அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக |
|
ஒரு மறத்தொழில் புரிந்து |
– |
கோபம் மிக்க செயலைச்செய்து |
|
பார் அணங்குஇமில் |
– |
பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய |
|
ஏறு ஏழும் முன் அடர்த்த |
– |
ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின |
|
பனி முகில் வண்ணன் |
– |
குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான |
|
எம்பெருமான் |
– |
எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்) |
|
காரணம் தன்னால் |
– |
பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால் |
|
கடு புனல் கயத்த |
– |
வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும் |
|
கரு வரை பிளவுஎழ குத்தி |
– |
பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு |
|
வாரணம் கொணர்ந்த |
– |
(அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான |
|
கங்கையின் |
– |
கங்காநதியினுடைய |
|
கரைமேல் |
– |
கரையின்மீதுள்ள |
|
வதரியாச்சிராமத்து உள்ளான் |
– |
ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
தேரணங்கல் குல்செழுங்கயற்கண்ணி திறத்தொருமறத்தொழில்புரிந்து *
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பனிமுகில்வண்ண னெம்பெருமான் * காரணந்தன்னால்கடும்புனல்கயத்த கருவரைபிளவெழக்குத்தி * வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.
***- (தேரணங்கல்குல்.) கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில். கும்பனென்னும் இடையர் தலைவனது மகளாயும் நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் “நீளா’ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப்பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன். அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.
தேரணங்கல்குல் = அல்குலுக்குத் தேரை உவமை கூறுதல் கவிமரபு. அணங்கு என்று அழகுக்கும் பேராகையாலே தேர்போன்று அழகிய’ என்று உரைக்கப்பட்டது. இனி, அணங்கென்று வருத்தத்திற்கும் வாசகமாதலால் தேரை வருத்துகின்ற அல்குல் என்னவுமாம். தேர் இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற தென்க.
மறத்தொழில்புரிந்து = எருதுகளின் மேல் கோபாவேசத்தைக் காட்டி என்றவாறு. ‘பாரணங்கிமில் ” என்ற விசேஷணம் அவ்வெருதுகளின் பயங் கர்த் தன்மையைக் காட்டுதற்காம். பார் – பூமியிலுள்ளார்க்கு ஆகுபெயர். இமில் – முசுப்பு. பெருமிடுக்குடைய எருதுகளோடு போர் செய்தவளவிலும் திருமேனி நிறத்திற்குச் சிறிதும் வாட்டமுண்டாகவில்லை யென்பது விளங்க “ஏறேழு மடர்த்த பனி முகில்வண்ணன் ” என்றார்.
இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமான் ஸ்ரீபத்ரி காச்ரமம் எவ்விடத்துள்ளது ?– கங்கையின் கரைமேலுள்ளது. அக்கங்கை எப்படிப்பட்டது ? – காரணந்தன்னால் கடும்புனல் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணங் கொணர்ந்ததாம். இதன் கருத்து யாதெனில் ; (ஸகரசக்ர் வர்த்தி அச்வமேதயாகஞ் செய்தது; ஸகரகுமாரர்கள் கபிலமாமுனியால் நீறா யொழிந்தது, அம்சுமான் ஸகரனது யாகக் குதிரையைக் கொண்டு வந்தது; பகீரதன் கங்கைக்காகத் தவஞ் செய்து அதனைக் கொண்டுவந்தது – இந்த வரலாறுகள் ஸ்ரீராமாயணம் பாலகாண்டத்தில் 38+43. ஸர்க்கங்களிற் காணத்தக்கன.) பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிறபோது நடுவழியிலே ஒரு மலை தகைந்துகொண்டு நின்றதாகவும், கங்காப்ரவாஹமானது மிக்க வேகமாக வரும் போது விசையினால் அந்த பாலையை இரண்டு பிளவாம்படி குத்திப் புறப்பட்டு அம்மலையிலிருந்த யானைகளையும் தள்ளிக்கொண்டு வந்திழிந்ததாகவும் சில புராணங்களில் சொல்லப்படுகிறதாம். மற்றொரு விதமாகவும் சொல்லுவதுண்டு ;– பகீரதன் கொணர்ந்த கங்காப்ரவாஹத்தை மலை தகைந்தவளவிலே அவன் இந்திரனை நோக்கித் தவம்புரிந்தனனாம்; தபஸ்ஸினால் ப்ரஸந்தனான இந்திரன் தனது யானையை அனுப்பி அம்மலை இருபிளவாம்படி குத்துவித்ததாகவும், பிறகு அந்த யானை கங்காப்ரவாஹத்தைத் தட்டுத் தடங்கலின்றிக் கொண்டு புறப்பட்டதாகவும் புராணப்பிரஸித்தியுண்டாம்.
இவ்விரண்டு வகையான யோஜனைகளும் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் அருளிச் செய்யப்பட்டவை. முதல் யோஜனையில், வாரணங்கொணர்ந்த என்றது-(கங்கையைத் தகைந்த மலையிலிருந்த) யானைகளை உருட்டிக்கொண்டு வந்திழிந்த என்றபடி. இரண்டாம் யோ:ஜனையில், (இந்திரனுடைய) யானையினால் மலையைப்பிளந்து கொண்டு வரப் பட்ட என்றபடி.
காரணந்தன்னால் = கபிலமாமுனியின் சாபத்தால் நீறாய்க்கிடந்த தன் பாட்டன்மாரை சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம்புரிந்தமையாகிற காரணத்தினால் என்றபடி. கங்கையைக் கொண்டுவருகிற போது மலை தகைந்த வளவிலே இந்திரனை நோக்கித் தவம்புரிந்த காரணத்தினால் என்னவுமாம். கடும்புனல்கயத்த என்றவிடத்து, கயத்த என்பதற்கு “தகைந்த” என்று சிலர் பொருள் கூறுவர்; அஃது ஆதாரமற்றதாகும். கைத்த என்று பாடமிருப்பின் அப்பொருள் கொள்ளலாகும். கயத்த என்றே எங்கும் பாடம் வழங்குகின்றது. பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வியாக்கியானத்தில்- “பகீரதன் கங்கையை அவதரிப்பிக்கிறபோது நடுவழியிலே ஒரு மலை தகைந்துகொடு நின்றதாய் அத்தை இரண்டு பிளவாம்படி குத்தி யானை களையு முருட்டிக்கொண்டு இவ்வருகே போந்து இழிந்ததாகச் சொல்லக் கடவது ”என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு, கயத்த என்பதற்குத் தகைந்த என்று சிலர் பொருள் வரைந்திட்டனர்; மலையைக் குத்திக்கொண்டு இழிவதற்கு ப்ரஸக்தியை நிரூபணம் செய்வதற்காகப் பெரியவாச்சான் பிள்ளை ஒரு மலை தகைந்துகொண்டு நின்றதாக அருளிச்செய்தாரேயன்றி, கயத்த என்பதற்கு அது பொருள் என்று உரைத்தாரல்லர். ஆகையாலே கயத்த என்பதற்குத் தகைந்த என்று பொருள் கொள்ள வழியுமில்லை ; அவசிய்மு மில்லை. கயத்த என்றது கயத்தையுடைய என்றபடி. கயமாவது தண்ணீர் தேங்கும் பள்ளம். வெகு வேகமாகப் பெருகுகின்ற தண்ணீர் நிறைந்த பள்ளங்களுடைய
என்று பொருளாயிற்று. இது கங்கைக்கு விசேஷணமாகவு மாம்; கருவரைக்கு விசேஷணமாகவுமாம். கருவரை என்ற விடத்துக் கருமையாவது பெருமை. பெரியமலை என்றபடி. வரை என்பது பால்பகா அஃறிணைப் பெயராதலால் ‘மலைகள்’ எனப் பன்மைப் பொருள் பட்டு, கங்கை பெருகி வரும்போது வழியில் பல பல மலைகள் நேர்படுமாதலால் அவற்றை யெல்லாம் தன் வேகத்தாலே பேதித்துக்கொண்டு அங்குள்ள யானைகளையும் உருட்டிக் கொண்டு ப்ரவஹித்ததாக உரைத்தலும் பொருந்தும். … … (சு)
English Translation
For the sake of thin-waisted fish-eyed Nappinnai dame, the Lord of cloud hue, my master, battled angrily and subdued the seven mighty dust-raising bulls. By the penance of Bhagiratha, the river flows splitting dark mountain rocks and pushing elephants; down the slopes on the banks of the Ganga, He resides in Vadari-Ashrama.
