(967)

(967)

கரியமாமுகிற்படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,களிறென்று

பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு பிரிதியெம்பெருமானை,

வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர் கலியனதொலிமாலை,

அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு  அருவினையடயாவே.

 

பதவுரை

கரியமாமுகில் படலங்கள் அவை

கறுத்த மஹாமேகங்களின் கூட்டங்களானவை

கிடந்து

(நீர்க்கனத்தாலே திரிய மாட்டாமல்) ஓரிடத்திலே இருந்து கொண்டு

முழங்கிட

கர்ஜிக்க, (அந்த கர்ஜனையைக் கேட்டு)

பெரிய மாசுணம்

பெரிய மலைப்பாம்புகளானவை

களிறு என்று

(நமக்கு இரையாம்படி) யானைகள் (வருகின்றன) என்று நினைத்து

வரை என பெயர்தரு

மலை பேர்ந்தாற் போலே பெயர்ந்து கிட்ட வருமிடமான

பிரிதி

திருப்பிரிதியிலே (எழுந்தருளியிருக்கிற)

எம்பெருமானை

எம்பெருமானைக் குறித்து,-

வரிகொள் வண்டு அறை பை பொழில் மங்கையர்

அழகிய வண்டுகள் ஒலிக்கின்ற விசாலமான சோலைகளையுடைய திருமங்கையிலே உள்ளவர்கட்குத் தலைவரான

கலியனது

ஆழ்வாருடைய

ஒலிமாலை

சொல்மாலையாகிய இத் திரு மொழியினது

அரிய இன் இசை பாடும்

அருமையான இனிய இசையைப் பாடவல்ல

நல் அடியவர்க்கு

விலக்ஷண பாகவதர்களுக்கு

அரு வினை அடையா

மஹாபாபங்களொன்றும் கிட்டமாட்டா.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கரியமா முகிற்படலங்கள் கிடந்தவை முழங்கிட * களிறென்று

பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு பிரிதியெம்பெருமானை *

வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியன தொலிமாலை*

அரியவின்னிசை பாடுநல்லடியவர்க்கு அருவினை யடையாவே.

***- (கரியமாமுகில்.) பரிபூர்ணமாக ஜலத்தை முகந்து கொண்டு கறுத்த நிறமுடையனவாயிருக்கிற பெரிய மேகங்களின் திரள்களானவை, உட்கொண்ட நீரின்கனத்தாலே பெயர்ந்து போகமாட்டாமல் இருந்தவிடத்திலேயிருந்து கர்ஜிக்கும் ; அப்பெருமுழக்கத்தைக் கேட்ட மலைப்பாம்புகள் த்வரியின் காம்பீர்யத்தையும் உருவின் பெருமையையுங் கொண்டு இவை யானைகளாம் என்றெண்ணி அவற்றை விழுங்கநினைத்து மலை பெயருமாபோலே பெயர்ந்து கிட்ட வருகின் றனவாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சிநடுங்கி ஓடிப்போய் விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடு மென்றும் தமிழ் நூல்களால் தெரிகின்றது ; ‘ திரையன் பாட்டு ‘ என்ற ஓர் பழைய நூலில்- ‘கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ண -மென்றஞ்சிப், படங்கொள் பாம்பும் விடரகம்புகூஉம், தடங்கொள் உச்சித் தாழ் வரை அடுக்கத்து” என்ற தனால் மாசுணம் களிற்றைக்கண்டு அஞ்சி யொளிக்கு மென்பது தெரிகின்றது. ( ஞால் வாய்க் களிறு பாந்தட் பட்டெனத், துஞ்சாத்துயரத் தஞ்சுபிடிப் பூசல், நெடுவரை விடரகத் தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே ” என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும், * ‘பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்கவிருள் கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே ”என்று தேவாரத்திலும், $ (இடி கொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடிய மாசுணங் கற்றறிந்த வரெனவடங்கிச், சடை கொள் சென்னியர் தாழ்விலர் தாமிதிக் தேறப், படி கடாமெனத் தாழ்வரை கிடப்பன பாராய்” என்று கம்பராமாயணத்திலும், உள்ள பாட்டுக்களால் மாசுணம் யானையை விழுங்கும் என்பது தெரிகின்றது. அஞ்சி ஒளித்தல் சிறுபான்மையும் விழுங்குதல் பெரும்பான்மையுமாயிருத்த லால் களிறென்று பெரியமாசுணம் வரையெனப் பெயர்தரு என்கிற இவ்விடத்திற்கு-மாசுணங்கள் மேகங்களை நோக்கி யானைகளாக ப்ரமித்து அவற்றை விழுங்குதற்காக மலை பெயருமாபோலே பெயர்ந்து கிட்டவருகின்ற-என்று பொருள் கொள்ளுதல் நன்கு பொருந்து மென்க. … … … (க0)

அடிவரவு:- வாலி கலங்க துடி மறம் கரைசெய் பணங்கள் கார் இரவு ஓதி கரிய முற்ற.

இரண்டாந்திருமொழி உரை முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

* தேவாரம் திருக்கயிலாயம் முதல் திருமுறை. 2-ம் பாட்டு, $ கம்பராமாயணம் சித்திரகூடப்படலம் 34-ம் பாட்டு


English Translation

Burly rumbling clouds gather in the mountain sky with roar of the thunderous bolt. Huge and mighty serpents take them to be elephants in the Piriti of my good Lord. Bumble-bees-abounding fragrance wafting groves of the Tirumangai’s Kaliyan’s song, — Hard-to-sing-this-decad,– devotees who master it will have no Karmic account.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top