(961)
மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனதகல்மார்வம்
திறந்து,வானவர்மணிமுடிபணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமாமணியருவியொடிழிதரு பிரிதிசென்றடைனெஞ்சே.
பதவுரை
|
மறம் கொள் வெருவர |
– |
‘சீற்றங்கொண்ட |
|
ஆள் அரி உருஎன |
– |
நரசிங்க மூர்த்தி’ என்று பிரஸதாவமெடுத்த மாத்திரத்திலே |
|
வெருவர |
– |
உலகம் அஞ்சி நடுங்கும்படியாக (நரஸிம்ஹாவதாரஞ்செய்து) |
|
ஒருவனது |
– |
வீரரில் ஒப்பற்றவனான இரணியனுடைய |
|
அகல்மார்வம் |
– |
விசாலமான மார்பைப் |
|
திறந்து |
– |
பிளந்து, |
|
வானவர் (அந்த விடாய்தீர) |
– |
(இப்படி இரணியனைக் கொன்ற மஹோபகாரத்தில் ஈடுபட்ட)தேவர்கள் |
|
மணி முடி பணிதர |
– |
மணிமயமான கிரிடங்களணிந்த தலையாலே வணங்கும்படியாக |
|
இருந்த |
– |
என்பெருமான் எழுந்தருளி யிருக்கப் பெற்ற |
|
நல் இமயத்துள் |
– |
விலக்ஷணமான இமயமலையின் கண், |
|
ஏனங்கள் |
– |
பன்றிகளானவை |
|
இறங்கி |
– |
தலை குனிந்து |
|
வளை மருப்பு |
– |
வளைந்த கொம்புகளாலே |
|
இடந்திட |
– |
(மணிப்பாறைகளைப்) பிளக்க (பிளந்ததனால் பெயர்ந்து) |
|
அருகு கிடந்து எரி வீசும் பிறங்குமா மணி |
– |
ஸமீபத்திலிருந்து கொண்டு தீ வீசுகின்ற ப்ரகாசம் மிக்க சிறந்த மணிகளானவை |
|
அருவியொடு |
– |
மலையருவிகளோடுகூட |
|
இழிதரு |
– |
இழியுமிடமான |
|
பிரிதி |
– |
திருப்பிரிதியை |
|
நெஞ்சே! சென்று அடை. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
மறங்கொ ளாளரி யுருவென வெருவர ஒருவன தகல் மார்வம்
திறந்து * வானவர் மணிமுடி பணிதர இருந்த நலிமயத்துள் *
இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக் கிடந்தரு கெரிவீசும் *
பிறங்கு மாமணி யருவியொ டிழிதரு பிரிதி சென்றடை நெஞ்சே!
(மறங்கொளாளரி.) நரஸிம்ஹ மூர்த்தியாகத் திருவவதரித்து இரணியன் மார்வைப்பிளந்த பெருமிடுக்குத்தோற்ற எழுந்தருளியிருக்குமிட மென்கிறது இதில்.
இரணியனாகிறான் – தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்றவன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பலபல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும் படி’ செய்துவருகையில், அவன் மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன்”. பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் ‘நாராயண நாமம் சொல்லிவரவே கடுங்கோபங்கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன் வழிப்படுத்துவதற்குப் பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்வதற்கு என்ன வுபாயஞ்செய்தும் அவன் பகவானுடைய அநுக்ரஹபலத்தினால் ஒரு கேடுமின்றியிருக்க, ஒரு நாள் ஸாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புத்திரனை நோக்கி “நீ சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு” என்ன, “தூணிலுமுளன், துரும்பிலுமுளன், எங்குமுளன்” என்று அக்குமாரன் உறுதியாய்ச் சொல்ல, உடனே இரணியன் “இங்கு உளனோ” என்று சொல்லி எதிரில்நின்ற தூணைப்புடைக்க, உடனே அதிலிருந்து திருமால் மநுஷ்யரூபமும் சிங்கவடிவுங்கலந்த நரசிங்கமூர்த்தியாய்த்தோன்றி இரணியனைப்பிடித்து வாசற்படியில் தன் மடி மீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நகங்களால் அவன் மார்பைப்பிளந்து அழித்திட்டு ப்ரஹ்லாதனுக்கு அருள் செய்தானென்பது பிரஸித்தம். * ‘அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே, வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்கவுருவாய், உளந்தொட்டிரணியெனொண்மார்வகலம், பிளந்திட்டகைகள்” என்றும், ** “எங்குமுளன் கண்ணனென்ற மகனைக்காய்ந்து, இங்கில்லையாலென்றிரணியன் தூண்புடைப்ப, அங்கப்பொழுதே அவன் வீயத்தோன்றிய, என் சிங்கப்பிரான் பெருமை ஆராயுஞ்சீர்மைத்தே” என்றும் ஆழ்வார்கள் ஈடுபடுவர்கள்.
வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லி விடக்கூடுமாகையாலே அந்த வார்த்தைக்கு இடமில்லா தபடி அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப்பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும், வேறு யாரேனும் கையால் தட்ட அத்தட்டியவிடத்திலிருந்து தோன்றினால்’ அவர் தம்கையில் நரசிங்கத்தை அடக்கிக்கொண்டுவந்து தூணிலே பாய்ச்சினார்’ என்று சொல்லிவிடக்கூடுமாகையாலே அந்தவார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினனென்பதும், அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலைநிற்குமாகையாலே அதற்கு இடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றின னென்பதும், அவன் தட்டின பிறகு சிறிது போது கழித்து நரசிங்கம் தோன் றினால் ‘நான் தட்டின பொழுது திருமால் அங்கில்லை ‘ என்று அவன் சொல்லி திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மைநிலையை மறுக்கக் கூடுமாகையாலே அதற்கு இடமறும்படி கர்ப்பம் கருமுதிர்தல் ப்ரஸவித்தல் முதலியனவும் குழந்தையாய் ஜனித்தல் பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவையுடையனாய் அப்பொழுதே தோன்றினனென்பதும், அங்கன் தோன்றிய விடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால் ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் வித்தியா மற்போய்விடுதல் பற்றி அதைவிடத் தோன்றாமலிருப்பதே நலமென்னும்படியிருக்குமாதலால் அங்கனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தன னென்பதும்,தேவர் மனிதர் விலங்குகள் தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக்களிலுள்ளவற்றில் ஒவ்வொன்றினாலும் தனித்தனி சாகா தபடியும், ப்ரஹ்மஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடியும் அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற் பெற்றவரம் பழுதுபடாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினனென்பதும்,- அஸ்த்ரசஸ்த்ரங்ளொன்றினாலும் சாகாதபடியும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்றவரம் வீண்போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன னென்பதும், பகலிலுமிரவிலுஞ் சாகா கபடி பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றன னென்பதும்,- பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்றவரம் மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றனனென்பதும், வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக்கொண்டு கொன்றனனென்பதும் இவைபோல்வன பல விசேஷங்கள் இவ்வவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம். “சுரரசுரர் முனிவர் நரர்கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள் புறம்பில், பெருபடையில் தான் சாகாவிரண்யன் றன்னைப் பிரகலாதன் தர்க்கித் துண் டென்ற தூணில், நரஹரியாய்ப் பொழுதுபுகு நேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி, இரணியனைத் தொடைமிசைவைத்துகிரினாலே இருபிளவாக் கினையரியே எம்பிரானே” என்றார் பின்னோரும்.
ஆளரியுருவென வெருவர = நரசிங்க வுருவத்தைக்கண்டவர்கள் தாம் அஞ்சி நடுங்குவர்களென்பதில்லை; அவ்வடிவை யாரேனுஞ் சிலர் பிரஸ்தாவித்த வளவிலும் குடல் குழம்பும்படி யிருக்குமென்று இதனால் அவ்வடிவின் பயங் கரத்வம் ஒப்புயர்வற்றதாகக் கூறப்பட்டது. “கை தொட்டுப் பிளக்கவேண்டாதே நரஸிம்ஹத்தினுடைய பேரைச் சொல்லவே ஆஸுரவர்க்கம் அஞ்சும்படி பாயிற்றிருப்பது” என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸுக்தி காண்க,
திவ்யப்ரபந்த திவ்யார்த்ததீபிகை. இரணியனும் நரஸிம்ஹமூர்த்திக்கு அடுத்தபடியாகச் சொல்லக்கூடிய மஹாசூரனாகையால் ஒருவன் என்றார். வீரர்களை எண்ணிக்கொண்டு வந்தால் இரணியனை முதல் விரலுக்கு எண்ணி அடுத்த விரலுக்கு ஒருவருமில்லாதபடி இரணியனே அத்விதீயனாயிருப்பனாம். அப்படிப்பட்டவனுடைய அகன்ற மார்வை ரத்த வெள்ளத்திற்கு மதகுதிறந்துவிட்டாற்போலே திறந்து விட்டானாயிற்று எம்பெருமான்.
இரணியன் மிடுக்கனாயிருந்தகாலத்து அவனுக்கு அஞ்சி வேற்றுருக்கொண்டு திரிந்த தேவர்கள் அவ்விரணியன் மாண்டொழிந்தானென்று கேள் விப்பட்டவாறே தங்களைக் குடியிருக்கச்செய்த மஹாநுபாவனென்று – நன்றி பாராட்டி எம்பெருமான் திருவடிகளிலே வந்து ஸாஷ்டாங்கமாக விழுவர்களாம். அப்படி விழும்போது, ‘ஸ்வாமிந்! இத்தனை காலமாக நாங்கள் கிரீட மணிந்து கொள்ள யோக்யதையற்று அப்படுபாவிக்கு அஞ்சி ஒளிந்துகிடந்தோம்; இன்றுதான் பழைய நிலைமைக்கு வாப்பெற்றோம்; உனது திருவருளால் கிரீடமணியப்பெற்றோங்காண்’ என்பவர்கள் போலத் தமது முடியை எம்பெருமானது பாதாரவிந்தத்திலே படச்செய்து கொண்டு வீழ்வர்களாம். இரணியனைக் கொன்று தேவர்களால் வணங்கப்பட்ட பெருமான் எழுந்தருளியிருக்கிற இமயமலையின்கண்.
நரஸிம்ஹபகவான் செய்தருளின காரியத்தை முன்னடிகளிற் கூறவே அதுவே போன்ற வேறொரு செய்தி நினைவுக்கு வந்து அதனைக் கூறுகின்றார் பின்னடிகளில். அங்குள்ள வராஹங்களானவை குனிந்து, தங்களுடைய வளைந்த கொம்புகளாலே மாணிக்கப்பாறைகளைக் குத்திப் பெயர்த்திடும்; பெயர்ந்த மாணிக்கங்களானவை மலையருவிகளோடு கூடி உருண்டுவந்து இழியும். நரஸிம்ஹமூர்த்தி இரணியனுடைய மார்வைப் பிளந்து குடல் மாலையைத் தன்மேலெடுத்துப் போட்டுகொண்டபிறகு ரத்தவெள்ள மானது கொழித்துக் கொண்டு புறப்பட்டாற்போலே அவ்வருவிகள் பாய்கின்றனவாம். ; அப்படிப் பட்ட பிரிதியைச் சென்று சேர் நெஞ்சமே!. அருகுகிடந்து – திருப்பிரிதியின் ஸமீபத்திலேயிருந்து கொண்டு என்கை. பிரிதியின் ஸமீபத்திலே மாணிக்க மயங்களான பாறைகள் இருக்கின்றன; மஹாவராஹங்கள் அவற்றை உரோசிப் பிளந்துவிடுகின்றன. அப்படி பிளக்கப்பட்டுக் கிளர்ந்த மணிகளானவை பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு அருவிகளோடு கலந்து ப்ரவஹிக்கின்றன. ….. …..
* பெரியாழ்வார் திருமொழி 1-6-9. ** – திருவாய்மொழி 2-8-9.
English Translation
A terrible man –lion striking terror in the heart of Asura king Hiranya, tore his mighty chest, — was worshipped by the gods above, is Resident of Himavan peaks. Wild variety boars dig into the mud and bring out rocks of the radiant gems. Streams in mountains lash out many precious gemstones in that Piriti, — O, Go to, my heart!
