(945)
மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆட்
புக்க காத லடிமைப் பயனன்றே.
பதவுரை
| மிக்க வேதியர் வேதத்தின் |
– |
சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய |
| உன் பொருள் |
– |
உள்ளுறை பொருளானது |
| நிற்க |
– |
நிலை நிற்கும்படி |
| பாடி |
– |
(திருவாய்மொழியைப் பாடி) |
| என் நெஞ்சுள் |
– |
என்னுடைய ஹ்ருதயத்திலே |
| நிறுத்தினான் |
– |
(அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸூப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் (ஆழ்வார்); |
| தக்க சீர் |
– |
தகுதியான குணங்களையுடையராய் |
| சடகோபன் |
– |
சடகோபனென்ற திரு நாமத்தை யுடையரான |
| என் நம்பிக்கு |
– |
(அந்த) ஆழ்வார் விஷயத்திலே |
| ஆள்புக்க |
– |
அடிமை செய்வதற்கு உறுப்பான |
| காதல் |
– |
ஆசையானது |
| அன்றே |
– |
அந்த க்ஷணத்திலேயே |
| அடிமைப் பயன் |
– |
(ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கருங்கல்லைத் துளைத்துக் குழியாக்கி அதிலே நீரைத் தேக்குவாரைப் போலே அதிமந்தமான என் நெஞ்சிலே வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச்செய்த ஆழ்வார் திறத்திலே ஆட்செய்ய வேணுமென்று நான் ஆசைப்பட்டது அந்த க்ஷணத்திலேயே பல பர்யவஸாயியாயிற்று! என்று தாம் பெற்ற பேற்றின் பெருமையைப் புகழ்கிறார். ஆழ்வார் பகவத் விஷயத்திலே ஆழங்காற்பட்டு “இனியாமுறாமை” நெடுநாள் கழித்தே “உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” என்றும் “அவாவற்று வீடுபெற்ற” என்றும் சொல்லும்படி மநோரதஸித்தியில் விளம்பமாயிற்று. இம்மதுரகவிகளுக்கோ அப்படியில்லை. இவர் ஆழ்வார் திருவடிகளில் சேஷபூதராகப் பெற்ற க்ஷணமும், இவ்வாழ்வார்க்கே நித்யகைங்கரியம் பண்ணவேணுமென்று மநோரதித்தக்ஷணமும் அந்த மநோரதம் ஈடேறப் பெற்று நித்யகைங்கரியம் வாய்த்தக்ஷணமும் ஆகிய இம்மூன்று க்ஷணமும் ஒரேக்ஷணமாய்த்து இவர்க்கு: இடையிற் சிறிது விளம்பமும் இல்லை என்னுமிதனால், பகவத் ப்ராவண்யத்திற்காட்டில் பாகவத ப்ராவண்கத்திற்குள்ள ஏற்றம் சொல்லிற்றாயிற்று. “கோளரியை வேறாக வேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றார் திருமழிசைப்பிரானும்.
மிக்க என்ற அடைமொழி வேதத்துக்குமாகலாம், வேதியர்க்குமாகலாம். வேதத்துக்கு ஆகும்போது “சுடர்மிகு சுருதியுள்” என்ற ப்ரமாணங்களில் தலைநின்ற வேதம் என்றபடி. வேதியர்க்கு ஆகும்போது, அல்பச்ருதரன்றிக்கே பஹூச்ருதராய் வேதத்தை வஞ்சிக்ககில்லாத பரமைகாந்திகள் என்றபடி.
வேதியர் வேதம் என்றது-வைதிகர்களால் ஒதப்பட்டு அதுவே காரணமாக சாகாபேதங்களையும் காடகம் காண்வம் தைத்திரீயம் இத்யாதி நாம பேதங்களையும் அடைந்த வேதமென்றபடி. வேதியர்களுடைய வேதம் என்று ஆறாம் வேற்றுமைத்தொகை: “ஓதுவாரோத்தெல்லாம்” என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற் போல ‘நுட்பொருள்’ என்று பிரித்து, வேதத்தின் ஸூக்ஷ்மமான பொருள் என்றுமுரைப்ப..
“வேதத்தினுட் பொருள்நிற்கப்பாடி” என்பதற்குப் பரமரஸமாக ஒரர்த்தமுண்டு. அதாவது “வேதப்பொருளே! என் வேங்கடவா!!” என்றபடி வேதத்தினுட்பொருள்-ஸாக்ஷாத் ஸர்வேச்வரன்; அவன் நிற்கப்பாடி என்றது சில குதர்க்கிகள் மறைகுலையச் சாதுசனங்களடங்க நடுங்கத் தருக்கச் செருக்காலே எம்பெருமானுடைய பரத்வத்தை இல்லை செய்தவளவிலே, எம்பெருமான் அதுகண்டு “நாஹம் நாஹம் நசாஹம்” என்றாற்போலே ‘நான் பரதத்வமல்லேன்’ என்று பிற்காலித்து ஓடப்புக, ஆழ்வார் *ஒன்றுந் தேவாகிற மாவட்டியையிட்டு அவ்வெம்பெருமானாகிற மத்தகஜத்தை ஓடவொட்டாதே நிலை நிறுத்திப் பரத்வஸ்தாபநம் பண்ணினமையைக் கூறியவாறு. இக்கருத்து ஆழ்வாருடைய “பராங்குசன்” என்ற திருநாமத்திலும் தோற்றும்; பர-பரமபுருஷனுக்கு, அங்குசன்-மாவட்டி போன்றவன். “வலக்கையாழி யிடக்கைச் சங்கமிவையுடை மால்வண்ணனை, மலக்கு நாவுடையேற்கு” என்ற திருவாய்மொழியிலும் இக்கருத்து உறையுமாறு காண்க.
ஆட்புக்ககாதல்=புக்க என்னும் பெயரெச்சம் காரியப்பொருளதாய், ஆள் புகுவதற்குக் காரணமான காதல் என்றதாம்: ‘நோய்தீர்ந்த மருந்து’ ‘நின்னைக் காணும் அவா’ என்ற விடங்களிற்போல.
அடிமைப்பயன் என்றது – அடிமையைப்பயனாக வுடையதென்று பொருள் படுதலால் அன்மொழித்தொகை. அன்றே என்றது – “அன்றெனக்கிளவி ஆமெனத்தகுமே” என்றபடி ஆம் என்னும் பொருளதாக உரைத்தலுமொன்று.
ஆழ்வார்திறத்தில் சேஷத்வம் முற்படக் காதலை (கைங்கர்ய ருசியை) விளைத்து உடனே கைங்கர்யரூப புருஷார்த்த ஸித்தியில் மூட்டிவிடும். என்பது நான்காமடிக்குத் தேர்ந்த பொருள்.
English Translation
The deep sense of Vedic thought, He sang in song and taught my heart. Satakopan my Lord is Love, — alone the use of serving him.
