(944)

(944)

அருள்கொண் டாடு மடியவ ரின்புற

அருளி னானவ் வருமறை யின்பொருள்

அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்

அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே.

பதவுரை

அருள் கொண்டாடும்

பகவத் கிருபையைக் கொண்டாடுகின்ற
அடியவர்

பக்தர்கள்
இன்புற

ஆநந்திக்கும்படி
அ அரு மறையின் பொருள்

அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை
அருளினான்

அருளிச்செய்தவராயும்
அருள் கொண்டு

பரமக்ருபையாலே
இன் தமிழ்

இனிய தமிழ்ப்பாஷையிலே அமைந்த
ஆயிரம்

திருவாய்மொழியாயிரத்தை
பாடினான்

பாடினவருமான ஆழ்வாருடைய
அருள் கண்டீர்

க்ருபை ஒன்றுமாத்திர மன்றோ
இ உலகினில்

இந்த லோகத்திலே
மிக்கது

அதிசயித்திருக்கிறது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானது அருளைக்காட்டிலும் ஆழ்வாரருளே சீரியதென்கிறார். “கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமுஞ் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தான்” என்றபடி ஸகல வேதவேதாங்க நூல்களையும் ப்ரஸாதித்தருளின எம்பெருமானுடைய க்ருபைக்கு மேற்பட்ட உலகில் வேறொரு க்ருபையுண்டோ? என்று அந்த பகவத் க்ருபையிலேயே ஈடுபட்டிருந்த பாகவதர்கள், ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்த பின்னர்‘ஹா! ஹா!! இவ்வளவு இனிமையான திவ்யப்ரபந்தம் போன்ற ஒரு நூலையும் இதுவரை ஈச்வரன் நமக்கு உபகரிக்கவில்லை; இன்றளவும் ஈச்வரனுக்கு மேற்பட்ட க்ருபாளு யாருமில்லையென்று நாம் மயங்கிக் கிடந்தோம், *பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரத்தை அருளிச்செய்த ஆழ்வாருடைய திருவருளுக்கு நிகரான அருளும் இனி உலகிலுண்டோ? என்று வியந்து மகிழ்ந்தனராம்; அதனை யருளிச்செய்கிறார்- இங்கு முதலடியில்.

திருவாய்மொழியில், “எண்ணாதனகளெண்ணும் நன்முனிவரின்பந் தலைச்  சிறப்பப், பண்ணார்பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத்தான்பாடி” என்ற விடத்து அருளிச்செய்யும் அர்த்த விசேஷத்தை இங்கு அநுஸந்திக்க; அதாவது -திருவாய்மொழி அவதரிப்பதற்கு முன்பு முனிவர்களனைவரும் என்ன நினைத்திருந்தார்களென்றால்; எம்பெருமானுக்கு அபரிச்சிந்நமான ஸ்வரூப ரூபகுண விபூதிகள் இருக்கின்றன; இவற்றையெல்லாம் உள்ளபடி வர்ணிப்பதாகத் தொடங்கின வேதங்கள் வர்ணிக்கமுடியாமல் “யதொவாவொ நிவதஹெ-யதோ வாசோ நிவர்த்தந்தே” என்னும்படி பின்வாங்கிவிட்டன; அக்குறைதீர அந்த பகவத்விபூதிகளை அதிவிசதமாக வர்ணிக்கவல்ல ஒரு ப்ரபந்தம் அவதரிக்கவேணும்; அத்தகைய பிரபந்தத்தை எம்பெருமான் எந்த மஹாநு பாவரைக்கொண்டு அவதரிப்பிக்கப்போகிறானோ’ என்று சிந்தித்திருந்தார்கள்; திருவாய்மொழி அவதரித்தவுடனே அவர்கள் மீண்டும் நினைத்ததென்னவென்றால் ‘ஐயோ! எம்பெருமானுக்கு இன்னுஞ் சில குணங்களும், இன்னுஞ் சில விபூதிகளும், இன்னுஞ் சில அவதாரங்களும் இல்லாமற்போயிற்றே! என்று வருந்தினராம்.

(அருளினான் அவ்வருமறையின் பொருள்.) வேதார்த்தங்களை ஆழ்வார் அருளிச் செய்தாரென்றால், ‘வேதத்தை மொழி பெயர்த்தாரா? அல்லது தூக்குத் தொகையாக வேத தாத்பரியங்களை எடுத்துரைத்தாரா?’ என்று விகற்பித்துக் கொண்டு வேதத்தில் ஒரு பஞ்சாதியினுடைய அர்த்தமும் திருவாய்மொழியின் ஒருபாட்டிலும் ஆநுபூர்வியாகக் காணப்படாமையால் மொழிபெயர்த்தாரென்ன முடியாது; இனி, தாற்பரியம் உரைத்தாரென்னில்; அதுவும் பொருந்தாது; எங்ஙனேயெனில்; வேதம் கர்மகாண்டம் என்றும் ப்ரஹமகாண்டம் என்றும் இரண்டு பாகமாக வகுக்கப்பட்டுள்ளது; அவற்றுள் கர்மகாண்டத்தின் தாற்பரியம் ஒரு பாட்டிலும் காணமுடியாது; ப்ரஹ்மகாண்டத்தின் தாற்பரியமும் உபநிஷத்துகளிற் சொல்லுகிற பத்ததி வேறு; திருவாய்மொழியிற் சொல்லுகிற வழி வேறு; அதற்கும் இதற்கும் யாதொரு ஸம்பந்தமும் இல்லை; ஆதலால் வேதந் தமிழ் செய்தனரென்கை எவ்வித்திலுங் கூடாது’ என்று சில பாமரர் மறுத்துக்கூறுவர்; இதைப்பற்றி நாம் “த்ராவிட வேத ரஹஸ்ய ஸர்வஸ்வம்” என்னும் க்ரந்தத்திலே பாக்கச் சொல்லியிருக்கிறோம். இங்கே சுருங்கச் சொல்லுகிறோம். வேதந் தமிழ் செய்தார் என்பதற்கு வேதத்தின் தாற்பரியங்களை ஐயந்திரிபற அழகாக விளக்கிக் காட்டினார் என்பது கருத்தாம். வேதத்தின் உண்மைய் பொருளறியாதார் பலர் “*****-  தத்ரைவ கேபி சபலாச் சலபீபவந்தி” என்றபடி வேத வாக்கியங்களுக்கு அபார்த்தங்கள் பண்ணி, ப்ரபஞ்சமே முழுப்பொய்’ என்பதும் ‘ஈச்வரனே கிடையாது’ என்பதும், ‘ஈச்வரன் மாயாதி ரோஹித ஸ்வஸ்வரூபனாய்த் தானே ஸம்ஸரிக்கிறான்’ என்பதும், ‘மூலப்ரக்ருத்யாதிகளே ஜகத்காரணம்’ என்பதும், ‘தேவ தாந்தரங்களே பரதைவம்’ என்பதும், ‘ஸ்ரீமந்நாராயணனுக்கு குணமில்லை, விக்ரஹமில்லை, விபூதியில்லை’ என்பதுமாய் இப்படி வேதங்களை ரஸாபாஸப்படுத்தி அலைத்துவிட்டபடியால் அந்த வேதங்களின் உண்மைப் பொருளைக் கையிலங்கு நெல்லிக்கனியாகக் காட்டவல்ல திருவாய்மொழியும் அதற்கு அங்கோபாங்கங்களான மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களும் வேதரஹஸ்யமாகவும் வேதோபப்ரும்ஹணமாகவும் சொல்லப்படுகின்றன. ஸ்ரீதேசிகனும் “பொய்கை முனி….மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும், செய்ய தமிழ்மாலைகள் நாந்தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே” என்ற பாட்டால் இக்கருத்தை விளக்கியருளினார். “பாஷ்யகாரர் இதுகொண்டு ஸுத்ர வாக்யங்களொருங்கவிடுவர்” என்பது ஆசார்யஹ்ருதயம். அழகியமணவாளஜீயர் அருளிச்செய்த ஜக்கண்ட்ய க்ரந்தமும் நோக்கத்தக்கது. நிற்க.

அருளினான் என்பதும், பாடினான் என்பதும்-வினையாலனையும் பெயர்கள் ஆறாம் வேற்றுமைத் தொகையும்.

இவ்வுலகினில் என்பதை ஏழாம் வேற்றுமையாகக் கொள்வதிலும் ஐந்தாம் வேற்றுமையாகக் கொண்டு, ஆழ்வாருடைய அருள் இந்த லோகத்திற் காட்டிலும் பெரிது என்றுரைப்பதும் ஒக்கும்.

“பெரிது பெரிது புவனம்பெரிது

புவனமோ நான்முகன் செய்தபடைப்பு

நான்முகன் கரியமாலுந்தியில் வந்தோன்

கரியமா லலைகடலிடையில் துயில்வோன்

அலைகடல் குறுமுனி கையிலடக்கம்

குறுமுனியோவெனிற் கலசப்பிறவியோன்

கலசமோ புவிதனிற் கண்டதோர் சிறுமண்

புவியோஅரவினுக் கொருதலைப்பாரம்

அரவோ உமையவள் சிறுவிரல்மோதிரம்

உமையோ சிவபிரான் பாகத்தொடுக்கம்

சிவனோ திருமால் திருவடியொடுக்கம்

திருமால தொண்டர்த முள்ளத்தொடுக்கம்

தொண்டருட் பெரியோர தூயசடகோபர்

சடகோபரருள் சகத்தினும் பெரிதே“

என்றார் ஒரு பாகவத கவிவரர்.

அன்றி, இவ்வுலகிலே என்று ஏழாம் வேற்றுமையாகவே கொண்டு, “அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே” என்ற சொல்லமைப்பு நயத்திற்கேற்ப ‘பாசுரம் மிக்கது பரமபதத்திலே, அருள் மிக்கது இவ்வுலகத்திலே’ என்றுரைப்பதும் சிறக்கும். அதாவது- “கேட்டாரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்றபடி-திருவாய்மொழியை நித்யஸுரிகள் விசேஷமாக ஆதரிப்பதனால் திருவாய்மொழியின் பெருமை பரமபதத்தில் ஓங்குகின்றது; அத்திருவாய்மொழியை அருளிச்செய்வதற் குறுப்பான ஆழ்வாருடைய அருள் மாத்திரமே இவ்வுலகில் நிலாவுகின்றது என்றபடி.

English Translation

For those who worship grace alone, by grace he sang the thousand songs. A bigger grace you cannot show, for he did grace the Vedas-four.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top