(936)
கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே.
பதவுரை
| கொண்டல் வண்ணனை |
– |
காளமேகம்போன்ற வடிவையுடையனும் |
| கோவலன் ஆய் வெண்ணெய் உண்டவாயன் |
– |
கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும் |
| என் உள்ளம் |
– |
என்னுடைய நெஞ்சை |
| கவர்ந்தானை |
– |
கொள்ளை கொண்டவனும் |
| அண்டர் கோன் |
– |
நித்யஸூரிகட்குத் தலைவனும் |
| அணி அரங்கன் |
– |
(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும் |
| என் அமுதினை |
– |
எனக்குப் பரமபோக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை |
| கண்ட கண்கள் |
– |
ஸேவிக்கப்பெற்ற (பரமபத நாதனையும்) |
| காணா |
– |
காணமாட்டா. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இவ்வாழ்வார் ‘அடியேன்’ என்னுமதொழிய இப்பிரபந்தம் தலைக்கட்டுமளவிலும் தம்முடைய பேரும் ஊரும் பேச மறக்கும்படி தாம்பெற்ற அநுபவத்துக்கு இனி ஒருவிச்சேதம் (இடையூறு) வாராதபடி பெரியபெருமாள் அருள் புரிந்தமையைக் கண்டு வியந்து அப்பெரிய பெருமாளுடைய திருமேனியிலேயே தாம் ஒரு நீராக லயம்பெற்ற படியைப் பேசித் தலைக்கட்டுகிறார்.
கொண்டல்வண்ணன் – கடலிலுள்ள நீரையடங்கலும் முகந்துகொண்டு காவேரீமத்தியில் வந்து படிந்ததொரு காளமேகம் போன்று கண்டாருடைய விடாயைத் தீர்க்கவல்ல திருமேனியையுடையன்: அன்றி, மேடு பள்ளவாசியின்றித் தாழ்ந்தார் உயர்ந்தாரனைவரும் உஜ்ஜீவிக்கும்படி காருண்யரஸத்தை வர்ஷிக்குமவன் என்றுமாம். கொண்டல்-தொழிலாகு பெயர்.
ஸூந்தராஹூஸ்தவத்தில், “************-யசோதாங்குள் யக்ரோந்நமித சுபுகாக்ராணமுதிதௌ” கபோலாவத்யாபி ஹ்யநு பரத தத்தரஷகமகௌ” என்ற ஆழ்வான், பண்டு யசோதைப்பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்ய கபோலங்களில் திகழா நிற்குமென்று அநுபவித்தாற் போல, இவரும், பண்டு வெண்ணெயுண்ட முடைநாற்றம் இன்றும் பெரிய பெருமாள் திருப்பவளத்திலே கமழாநிற்பதாக அநுபவிக்கிறார் – கோவலனாய் இத்யாதி. தசரதசக்ரவர்த்தி, தன்னுடைய ராஜைஸ்வர்யத்தைப் புஜிக்கைக்கு ‘எனக்கொரு பிள்ளை வேணும்’ என்று நோன்புநோற்றுப் பெருமாளைப் பெற்றாற் போலே, ஸ்ரீநந்தகோபரும் “ கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன்பெற்ற ஆனாயன்” என்றபடியே திருவாய்ப்பாடியில் கவிய ஸம்ருத்தி யடங்கலும் பாழ்போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்புநோற்றுப் பெற்ற பிள்ளையாய்த்து ஸ்ரீக்ருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுட்டை மோந்துபார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறாநிற்குமாம்.
உப்புச்சாறாய் எட்டாநிலத்திலே யிருக்கும் தேவர்களம்ருதம் போலன்றிப் பரம மதுரமாய்ப் பரமஸூலபமாயிருக்கும் நான் கண்டஅமுதம் எனபார் என் அமுதினை என்கிறார். ‘அமுதனை’ என்று சிலர் ஒதுவர்; அப்பாடம் ரஸமற்றதா மென மறுக்க; ஆழ்வார்க்கு அம்ருததாதாத்மியம் விவக்ஷிதமேயல்லது அம்ருத தாத்ரூப்யம் விவக்ஷிதமன்று காணீர். “அளப்பரிய ஆரமுதை” என்றார் திருமங்கையாழ்வாரும்.
மற்றொன்றினைக் காணா – அம்ருதபாநம் பண்ணினவர்கள் பாலையும் சோற்றையும் கண்ணெடுத்துப் பார்ப்பர்களோ? “*********-பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடி சொன்னாப்போலே இவரும் மற்றொன்றினை என்கிறார்- பேர்சொல்லவும் கூசுகிறபடி பரவ்யூஹாதிகள், மற்றுள்ள அர்ச்சாவதாரங்கள் ஒன்றையும் காணமாட்டா என்கை.
“பண்கொள் சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்” என்றும், “அங்கமலத்தடவயல்சூழ் ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகாலன் கலியன்” என்றும் மற்றுள்ள ஆழ்வார்கள் தம் ஊரையும் பேரையும் பாசுரக் கணக்கையும் பரக்கச்சொல்லிக் கொண்டாற்போலே இவர் ஒன்றும் சொல்லிக் கொள்ளாதொழிந்ததென்? எனில்; “மற்றொன்றினைக் காணா” என்ற மற்றொன்றில் இவையும் சேர்ந்துவிட்டனபோலும் பரவ்யூஹாதிகளையும் வேறு அர்ச்சாவதார எம்பெருமான்களையும் மறந்தாற்போலே தம்மையும் தம் ஊரையும் பாட்டையும் எல்லாவற்றையும் மறந்தொழிந்தாரென்ப.
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வியாக்கியான ஸ்ரீஸூக்தி-“அல்லாதார் திருநாமப்பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர் -‘விஸஸஹ– தஷாதா நா-விஸஸ்மார ததாத்மாநம்’ என்கிறபடியே தாம் போகப்ரவணராய்த் தம்மை மறக்கையாலே. பலம்* ஸதாபச்யந்தி யாகையாலே அது இங்கே ஸித்திக்கையாலே பலத்துக்குப் பலம் வேணுமோவென்று பலஞ் சொல்லிற்றிலர்.”
இப்பாட்டு அருளிச்செய்தவுடனே பெரிய பெருமாள் அத்திருமேனியோடு ஆழ்வாரை அங்கீகரித்தருள, அனைவருக்கான அப்பிரானது திருமேனியிலே அந்தர்ப்பவித்துக் காய்ந்த இரும்பு உண்ட நீராயினர் என்று-ஸம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாயிருக்கும்.
English Translation
The dark-hued Lord is, the Lord who came as a cowherd-lad and stole buffer, He is the Lord of gods, and the Lord of Arangam also. He has stolen my heart. After seeing my Lord of ambrosial delight, my eyes will see naught else.
